இந்தியா யுத்தத்தை நிறுத்த கூறுகின்றதா?அல்லது தொடர ஊக்குவிக்கின்றதா? - கூட்டறிக்கை தெளிவில்லை என்கிறது ஐ.தே.க.
தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை இந்திய கூட்டறிக்கை தெளிவற்றதாக இருக்கின்றது. இராணுவத் தீர்வா அல்லது சமாதானப் பேச்சுவார்த்தையூடான அரசியல் தீர்வா? என்பதனை இலங்கை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்தம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் அதில் தமிழக முதல்வரின் நிலைப்பாடு குறித்தும் விளக்க வேண்டும் என்றும் ஐ.தே.க. சுட்டிக் காட்டியுள்ளது.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க.வின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவர் இங்கு மேலும் கூறுகையில்,
தேசிய இனப்பிரச்சினை இன்று உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றது. இதில் இந்தியாவின் தலையீடுகளும் இலங்கை அரசாங்கத்திற்கு பல அழுத்தங்களை கொடுத்துள்ளது. இந்நிலையில், ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராக பஷில் ராஜபக்ஷ எம்.பி. மேற்கொண்ட இந்தியா விஜயத்தின் பின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் சாதகமான இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கையும் இந்தியாவும் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றன.
இதன் உத்தியோகபூர்வமான தகவல்கள் எதிர்க்கட்சிக்கு கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், எமக்கு கிடைத்திருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கின்ற கூட்டறிக்கையானது எவ்வாறான தெளிவுகளை சுட்டிநிற்கின்றது என்பது புரியாதிருக்கின்றது.
இராணுவ நடவடிக்கையில் பொதுமக்களுக்கு பாதிப்பு எற்படாதிருப்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது. மறுபுறத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்து சமாதானப் பாதையை உருவாக்கும்படி இந்தியா கோரியிருக்கின்றது.
தமிழக முதல்வர் கருணாநிதியோ தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் அதேவேளை அந்த உறுதிப்பாட்டில் தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.
யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்ற பொதுவான கோரிக்கையொன்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்த சமயத்தில் இரு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை ஒரு தெளிவற்ற தன்மையையே தோற்றுவித்திருக்கின்றது.
இந்தியா யுத்தத்தை நிறுத்துமாறு கூறுகின்றதா அல்லது அதனைத் தொடருமாறு ஊக்குவிக்கின்றதா இலங்கை அரசாங்கம் யுத்தத்தை தொடரப்போகின்றதா அல்லது சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்று ஒரு அரசியல் தீர்வை முன்வைக்கப் போகின்றதா என்பதை மக்களுக்கும் நாட்டுக்கும் பகிரங்கமாக அறிவிக்குமாறு அரசாங்கத்தைக் கோருகிறோம். தேசியப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தெரியப்படுத்த வேண்டியது கட்டாயக் கடமையாகும். இதனை மூடிமறைக்க முயலக்கூடாது என்றார்.
வீரகேசரி நாளேடு
0 விமர்சனங்கள்:
Post a Comment