தமிழக மக்களையே நம்பியிருக்கிறோம்-இலங்கை தமிழ் எம்பிக்கள்
இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண தொப்புள் கொடி உறவு உள்ள தமிழக மக்களையே நம்பி இருக்கிறோம் என இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்பிக்கள் கூறினர்.
இலங்கை எம்பிக்களான ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்காக அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் திரைப்படத் துறையை சார்ந்தவர்கள், மாணவர்கள் குரல் கொடுத்துவருவதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சென்னையில் வரலாறு காணாத வகையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தி இருப்பது மிகவும் பெருமைக்குரியதாக உள்ளது.
இலங்கை தமிழர்களுக்காக தற்போது தமிழக மக்கள் கொடுத்துவரும் குரலை கண்டு சிங்கள அரசு பதற்றமும் விரக்தியும் அடைந்துள்ளது.
போர் நடைபெறும் வவுனியா கிராமத்தில் வாழ்கின்ற 5 லட்சம் மக்களில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் அகதிகளாகிவிட்டனர். இந்த மக்கள் உணவு பொருட்கள் இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இலங்கை தமிழர்களை பட்டினி போட்டு சரணாகதி அடைய செய்துவிடலாம் என்று இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.
இந்திய அரசு இந்த பிரச்சினையில் ராஜதந்திர முறையில் தலையிட்டு, அரசியல் ரீதியான தீர்வு காணவேண்டும். இந்திய அரசு இலங்கை அரசை கண்டித்த சில மணி நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் நின்றுவிடும். இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண தொப்புள் கொடி உறவு உள்ள தமிழக மக்களையே நம்பி இருக்கிறோம்.
தமிழகத்தில் அரசியல் முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு குரல் கொடுத்துவருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
விடுதலைப் புலிகள் பலவீனமடைந்துவிட்டதாக சிலர் கூறுவது மிகமிக தவறானதாகும். இலங்கை தமிழர்களுக்கு விடுதலைப் புலிகள்தான் அரணாக இருந்துவருகிறார்கள். கிளிநொச்சியை பிடித்துவிட்டதாக சிங்கள அரசு பொய்யான வதந்தியை பரப்பிவருகிறது. கிளிநொச்சியை பிடித்தாலும் விடுதலைப் புலிகளை ஒருநாளும் தோல்வியடையச் செய்ய முடியாது.
இலங்கை தமிழர்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டதால்தான் தனி ஈழத்திற்காக போராடி வருகிறோம். இனப்பிரச்சினைக்கான அடிப்படை காரணங்கள் அகற்றப்பட்டு தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுமானால், தனி ஈழ கொள்கையை கைவிடுவது பற்றி சிந்திக்கலாம்.
அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளாவிட்டாலும் இலங்கை தமிழர்களுக்காக ஜெயலலிதா குரல் கொடுத்ததை நாங்கள் மறந்துவிட முடியாது.
ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டது இமாலய தவறு. அதற்கு இலங்கை தமிழர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்றனர்.
இலங்கை தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு:
இதற்கிடையே சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமீபத்தில் இலங்கை துணைத் தூதரகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், சட்டக் கல்லூரி மாணவர்கள் துணைத் தூதரகத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து துணைத் தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், 60 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஷிப்ட் முறையில் இவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
Thatstamil.com
0 விமர்சனங்கள்:
Post a Comment