ஈழத்தில் கொழுந்து விட்டெரியும் பிரச்சினைக்கு 800 தொன் நிவாரணத்துடன் தீர்வுகாண முயற்சி
[27 - October - 2008]
* கூட்டறிக்கை குறித்து ஆய்வாளர்கள்
ஈழத்தில் கொழுந்துவிட்டெரியும் பிரச்சினைக்கு இலங்கை இந்திய அரசுகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எண்ணூ<று தொன் உணவுப் பொருட்களை அனுப்புவதன் மூலம் தீர்வு காண முற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விவகாரம் மிகவும் மோசமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றமானது இலங்கை நிலைமையில் ஏதாவது உருப்படியான மாற்றத்தை ஏற்படுத்துமென எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கை இந்திய பிரதிநிதிகளிடையேயும் அதன் பின்னர் தமிழக முதலமைச்சருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நடத்திய பேச்சுக்களின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை பற்றி கருத்து தெரிவித்த பல ஆய்வாளர்களே இவ்வாறு கூறியுள்ளனர்.
இது பற்றி பி.பி.சி. தமிழோசைக்கு புதுடில்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியரும் தெற்காசிய விவகாரங்களுக்கான ஆய்வாளருமான எஸ். சகாதேவன் கூறுகையில்;
இதில் முக்கியமாக 800 தொன் நிவாரணம் அனுப்பப்படுமென்பது மட்டும் தான் புதிய விடயமாகும். மிகுதி விடயங்களான 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும், வடக்கு மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்படக் கூடாதென்பது போன்ற விடயங்களெல்லாம் ஏற்கனவே பல தடவைகள் இந்திய அரசு கூறியுள்ளது. முக்கியமாக இந்தக் கூட்டறிக்கையில் ஒன்றுமேயில்லை. எதிர்பார்த்தபடிதான் இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையில் ஒரு மாற்றம் வராது என்பதை இது தெளிவாக்குகிறது.
அத்துடன், இலங்கை விவகாரத்தில் இந்திய அரசின் அணுகுமுறை மாறவேண்டுமென அண்மைக்காலமாக தமிழகத்தில் பல்வேறு தரப்பாலும் முன்வைக்கப்பட்ட எல்லா கோரிக்கைகளையும் புறந்தள்ளுவதாக இதுவுள்ளது.
தி.மு.க. உட்பட அனைவரும் முன்வைத்த போரை நிறுத்த வேண்டும், தமிழ் மக்கள் பாதிக்கப்படக் கூடாதென்ற அடிப்படைக் கோரிக்கையைக் கூட இந்திய அரசு முற்றாக நிராகரிப்பதாகவே இந்தக் கூட்டறிக்கையுள்ளது.
800 தொன் உணவுப் பொருட்களை அங்கு அனுப்புவது வரவேற்கத்தக்க விடயம் தான். இதை இந்திய அரசு இலங்கையரசினூடாக அனுப்பப் போவதாகத் தெரிகிறது. ஆனால், இந்த உணவுப் பொருட்களை ஐ.சி.ஆர்.சி. போன்ற சர்வதேச அமைப்புகளூடாக அனுப்பினால் இலங்கைத் தமிழர்கள் இதனை வரவேற்பார்கள்.
ஆனால், இந்திய அரசு சர்வதேச அமைப்புகளூடாக அனுப்ப முயலாதது தெரிந்த விடயமே. இலங்கையை மிகவும் நட்பு மிக்க நாடாகவும் தோழமை நாடாகவும் இந்தியா கருதுவதே இதற்குக் காரணமாகும்.
இதைவிட இலங்கை விவகாரம் தொடர்பாக இந்திய அரசின் கொள்கையில் மாற்றம் வருவதென்பது மிகவும் கடினமான விடயம் என்பதையே நேற்றைய கூட்டறிக்கை மிகத் தெளிவாகக்காட்டுகிறது.
அத்துடன், நேற்று அவர்கள் இரு கூட்டறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். ஒன்று இலங்கை இனப்பிரச்சினை தொடர்பானது, மற்றையது இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பானது. இதன்மூலம் இரு பிரச்சினைகளையும் இந்தியா தனித்தனியாக கையாள முனைவதையே காட்டுவதாகவும் தெரிவித்தார்.
http://www.thinakkural.com/news/2008/10/27/importantnews_page60735.htm
0 விமர்சனங்கள்:
Post a Comment