அவசார கைதுகளின் அதிரடிப்பின்னணி
குமுதம் 30.10.08 கவர் ஸ்டோரி
அந்தத் தகவல் வந்தபோது அதை யாராலும் நம்ப முடியவில்லை. நிச்சயம் வதந்தியாகத்தான் இருக்கும் என்ற நினைப்பே எல்லோர் நெஞ்சிலும் ஓடியது. அதன்பின் தகவல் ஊர்ஜிதமானது.
உண்மைதான். வைகோ, கண்ணப்பன் ஆகியோரது வீடுகளை நோக்கி காவல்துறையினர் கைது செய்யும் நோக்கில் படையெடுக்க, அவர்களைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களும் அங்கே விரைந்தனர்.
ஏற்கெனவே தனது பரிவாரங்கள் எட்டுப் பேருடன் பத்தொன்பது மாத சிறைவாசத்தை முடித்துச் சிறைமீண்ட செம்மலாக வெளிவந்த வைகோ, தற்போது மீண்டும் கைதாகியிருக்கிறார். கடந்தமுறை அவர் சிறைக்குப் போகக் காரணமாக இருந்தவர் ஜெயலலிதா. அப்போது வைகோவை விடுதலை செய்ய வலியுறுத்தி கையெழுத்து வேட்டையைத் தொடங்கி வைத்தார் கலைஞர். இந்தமுறை அதே கலைஞரால் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் வைகோ.
சென்னையில் வைகோ கைதைத் தொடர்ந்து, பொள்ளாச்சியில் ம.தி.மு.க. அவைத்தலைவர் கண்ணப்பனும் கைதானார். இவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ (இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவித்தல்), 13 (1பி) (சட்டத்துக்குப் புறம்பாக நடத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
`பொடா'வையே பார்த்த வைகோவுக்கு இந்த சட்டப் பிரிவுகள் எம்மாத்திரம்? ஆனால் இவர்கள் மீது `தேசிய பாதுகாப்புச் சட்டம்' (என்.எஸ்.ஏ.) பாயும் பட்சத்தில் காடுவெட்டி குருவாக சிறையிலேயே இவர்களும் காத்துக் கிடக்க வேண்டியதுதான்.
இந்தநிலையில் வைகோ, கண்ணப்பன் அவசரக் கைதுகளின் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்னென்ன? என்ற விசாரணையில் நாம் இறங்கினோம்.
இலங்கையில் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்துக்குக் கிடைத்த ஆதரவு, அனைத்து அரசியல் கட்சிகளையும் கொஞ்சம் சிந்திக்க வைத்தது. அதன்பின் ஈழப் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வலியுறுத்தி, லட்சக்கணக்கில் தந்தியனுப்பக் கோரினார் கலைஞர். அதைத் தொடர்ந்து மயிலை மாங்கொல்லையில் (06.10.08) `ஈழப் பிரச்னையில் தி.மு.க. நிலையும் மத்திய அரசுக்கு கோரிக்கையும்' என்ற தலைப்பில் கலைஞர் தலைமையில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
அதன்பின் 11.10.08 அன்று ம.தி.மு.க. சார்பில் சென்னையில் நடந்த மறியல் போராட்டத்தில் வைகோ, கண்ணப்பன் உள்பட ஐநூறு பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். அந்தநேரம் யாரும் எதிர்பாராத இடத்திலிருந்து ஓர் அறிக்கை வெளி வந்தது. அந்த அறிக்கையை வெளியிட்டவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அதில், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டித்திருந்தார் ஜெ.
அதன்பின் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. நீங்கலாக ஏனைய கட்சிகள் பங்கேற்றன. அதில் ஈழப்பிரச்னையில் மத்திய அரசு தலையிடத் தவறினால் தமிழக எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்பின் இதுவரை காணாத அளவுக்கு ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. 15.10.08 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம், அதற்கு மறுநாள் வக்கீல்கள் போராட்டம், 19.10.08 அன்று ராமேஸ்வரத்தில் திரையுலகினரின் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம், 23.10.08 அன்று விடுதலைச் சிறுத்தைகளின் ரயில் மறியல் போராட்டம், அதே நாளில் பா.ம.க. மாணவர்கள் பேரணி என அமளிதுமளிப்பட்டது தமிழகம்.
இந்தப் போராட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளதாக காங்கிரஸார் எதிர்ப்புத் தெரிவிக்க, அதன் எதிரொலியாகத்தான் நடந்து முடிந்திருக்கிறது வைகோ கைது. அதிலும் ராஜாஅண்ணாமலை மன்றத்தில் ம.தி.மு.க. நடத்திய கருத்தரங்கத்தில் பேசிய கண்ணப்பன், `தனித்தமிழ்நாடு மலர்ந்தே தீரும்' என்று பேசியதுதான் தற்போது வெடித்துள்ள வெடிமருந்தின் திரி. அந்தக் கூட்டத்துக்கு மறுநாள் கண்ணப்பனின் பேச்சு நாளிதழ்களில் வெளியானது. தேசத் துரோகம், பிரிவினையைத் தூண்டும் விதமாக கண்ணப்பன் பேசியதாக அந்தச் செய்திகள் கருத்து வெளியிட்டன. இதற்கு காங்கிரஸ் கட்சியினரும், குறிப்பாக காங்கிரஸ் சட்டப்பேரவை துணைக் கொறடா ஞானசேகரன் வெளியிட்ட கண்டன அறிக்கைகளும் வைகோ கைதுக்கு அச்சாரமிட்டு இருக்கின்றன.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, `எனது ஆட்சி இருந்திருந்தால் இப்படிப் பேச விட்டிருப்பேனா?' என்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையால் வெகுண்டெழுந்த காங்கிரஸ், கலைஞருக்கு பிரஷர் கொடுத்ததாகவும் தகவல்கள் சொல்கின்றன.
ஜெயலலிதா அறிக்கை வெளியானதும், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் 23-ம்தேதி காலை 11 மணிக்கு முதல்வர் கலைஞரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது, ``இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும், புலிகளுக்கு ஆதரவாகவும் குரல் ஓங்கிவருவதால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று உளவுத்துறை மூலம் எனக்குத் தகவல் வந்திருக்கிறது. நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் `ரகசியக் கூட்டம்' நடத்தி தாங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாகச் சொல்ல, சரியான இக்கட்டில் சிக்கிக் கொண்டார் கலைஞர். ஒருபக்கம் காங்கிரஸைத் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம், மறுபக்கம் ஜெயலலிதாவின் வாயை அடைக்க வேண்டிய நிர்ப்பந்தம்.
உடனே உள்துறைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளைக் கூட்டி ஆலோசனை நடத்தினார் கலைஞர். அந்தக் கூட்டத்தில் வைகோவின் கருத்தரங்கப் பேச்சு வீடியோவாகக் காண்பிக்கப்பட்டது. அதில் `ஆயுதமேந்திப் போராடுவோம்' என்று வைகோ உதிர்த்த வார்த்தையைப் பயன்படுத்தி அவரைக் கைது செய்ய முடியும் என யோசனை தெரிவிக்கப்பட்டது.
`வைகோவைக் கைது செய்யும்பட்சத்தில் ராமேஸ்வரம் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியவர்களையும் கைது செய்ய வேண்டியிருக்குமே' என்று அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தபோது, ராமேஸ்வரம் பொதுக்கூட்ட வீடியோவையும் பார்த்து விட்டு `தேவைப்பட்டால் அவர்கள்மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம்'' என்று கலைஞர் கூறிவிட்டுச் செல்ல, அதன்பின்னரே நடந்திருக்கிறது வைகோ கைது.
23-ம்தேதி பகல் 1.45 மணி! தாயகத்தில் இருந்து தனது அண்ணாநகர் இல்லத்திற்குத் திரும்பிய வைகோ சாப்பிட்டு விட்டு கொஞ்சம் உறக்கத்தில் ஆழ்ந்த நேரம். அண்ணாநகர் போலீஸ் ஏ.சி. பாண்டியன், கியூ பிராஞ்ச் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், கூடவே போலீஸ் படையினர் 3.45 மணியளவில் வைகோ வீட்டை முற்றுகையிட்டனர். `வைகோவைக் கைது செய்ய வந்திருப்பதாக' அவர்கள் அறிவிக்க, பரபரப்பு பற்றிக் கொண்டது.
வைகோவுக்குத் தகவல் தெரிந்ததும், அவர் கட்சிக்காரர்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு குளிக்கச் சென்றார். இதற்குள் ம.தி.மு.க.வினர் வந்து வைகோ வீட்டை மொய்க்கத் தொடங்கினர். குளித்து விட்டு வருவதாகச் சொன்ன வைகோ, அரை மணிநேரத்துக்கு மேலாகியும் வெளியே வராததால் பொறுமையிழந்துபோன போலீஸார், வீட்டுக்குள் நுழைய முயன்றனர். அதனால் ம.தி.மு.க.வினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது.
சரியாக 4.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தார் வைகோ. போலீஸார் அவரைக் கைது செய்து சுமோ காரில் ஏற்றினர். அப்போது வைகோ, ``ஈழத் தமிழர்களுக்காக இறுதிவரை போராடுவோம்'' என்று கோஷம் போட்டபடியே காரில் ஏறினார். கட்சி நிர்வாகிகள் காரை வழிமறித்து, போகவிடாமல் செய்து கலைஞருக்கு எதிராகக் கோஷம் போட்டனர்.
அதன்பின் வைகோவை கடற்கரை காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்ற போலீஸார், அங்கே அரைமணிநேரம் வைத்திருந்த பின், அவரை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் நவம்பர் 6-ம் தேதி வரை பதினைந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து, 6.10-க்கு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் வைகோ. சிறைவாசலில் போலீஸுக்கு எதிராக அமளியில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் சிறைக்குள் நுழைய முயன்றனர். வேனில் இருந்து இறங்கி வந்து அவர்களைச் சமாதானப்படுத்திய வைகோ, ``போலீஸ் நமக்கு எதிரியல்ல. அரசு என்ன சொல்கிறதோ அதைச் செய்வது அவர்களது கடமை'' என்று சொல்ல, சிறைவாசலில் அமைதி திரும்பியது. அதன்பின் புழல் சிறைக்குள் வைகோ அழைத்துச் செல்லப்பட்டார்.
வைகோ கைதில், ``சட்டம் தன் கடமையைச் செய்யும்'' என்று கலைஞர் சொல்ல, ``இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்த கைது'' என்று ஜெயலலிதா பதிலடி தந்ததுதான் இதில் ஹைலைட்!
வெற்றி, இரா. முருகேசன்
படங்கள் : ம.செந்தில்நாதன், மீடியா ராமு, ஞானமணி.
``ஜெயலலிதா அறிக்கை சிறுபிள்ளைத்தனமானது!''
-சீமான்
வைகோ, கண்ணப்பன் கைதான அன்று இயக்குநர் சீமான், அமீர் ஆகியோரும் கைதாகப் போகிறார்கள் என்ற வதந்தி சென்னையை ஆட்டி வைத்தது.
இந்த இருவர் வீடுகளுக்கும் பத்திரிகையாளர்கள் படையெடுத்தனர். நாமும் ஆஷரானோம்.
சீமானின் வளசரவாக்கம் வீட்டில் ஏக பரபரப்பு. ஒருகட்டத்தில் ஓயாத செல்போன் அழைப்புகளால் வெறுத்துப்போன சீமான், அதை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டார். அதன்பின் மீடியாக்களைப் பார்க்காமல் இறுக்கமாக இருந்த சீமான் எங்கிருந்தோ வந்த ஒரு போன் அழைப்புக்குப் பின்னர், திடீரென சகஷமானார். அவரிடம் நாம் பேசிய போது, ``நானும் அமீரும் என்ன பஸ்ஸுக்குத் தீ வைத்து மாணவிகளைக் கொளுத்தினோமா? ஈழத்தின் விடியலுக்காக நாங்கள் இருவரும் சிறைக்குச் செல்ல தயாராகவே இருக்கிறோம்!'' என்றார். ஜெயலலிதா அவரது அறிக்கையில் அமீர், சீமான் ஆகியோரைக் கண்டித்திருந்தது பற்றி அவரிடம் கேட்டபோது, ``ஜெயலலிதாவின் அறிக்கை சிறுபிள்ளைத்தனமானது'' என்றார் அவர். இறுதிவரை சீமானைக் கைது செய்ய போலீஸார் வரவில்லை.
கைதுக்குத் தப்பிய வீரமணி, சுப.வீ.!
வைகோ கைதுக்குக் காரணமான, `ஈழத்தில் என்ன நடக்கிறது?' என்ற அதே தலைப்பில் வைகோ கருத்தரங்குக்கு முதல்நாள் (20.10.08) பெரியார் திடலில் தி.க. நடத்திய கருத்தரங்கத்தில் கலந்து கொண்டார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன். அதில், தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகவும், ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் பேசிய திரைத்துறையினரைப் பாராட்டியும் சுப.வீ, கி.வீரமணி ஆகியோர் பேசினார்கள். இடையிடையே தமிழினத் தலைவரையும் சகட்டுமேனிக்குப் புகழ்ந்து தள்ளினார்கள். இதனால்தானோ என்னவோ? இவர்களைக் கைது செய்வதிலிருந்து விலக்கு அளித்துவிட்டார்கள் போலிருக்கிறது என்கிறார்கள்.
1 விமர்சனங்கள்:
தீபாவளி வாழ்த்துக்கள் !
Post a Comment