சிறையில் கட்டிலும் இல்லை, டிவியும் இல்லை-வைகோ
சென்னை: புழல் சிறையில் தனக்கு கட்டிலோ, டிவியோ தரப்படவில்லை என்றும், அசைவ உணவே வேண்டாம் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து மதிமுக தலைமை நிலையச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை புழல் சிறையில் இருக்கும் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவைத் தலைவர் கண்ணப்பனை நானும், சட்டத்துறை செயலர் தேவதாஸ் உள்ளிட்ட கட்சியினரும் சந்தித்தோம்.
சிறையில் வைகோ மற்றும் கண்ணப்பன் ஆகியோருக்கு சிறையில் கட்டில், மெத்தை, டிவி, அசைவ உணவு கொடுக்கப்பட்டதாக வடிகட்டிய பொய்யான செய்தி, முதல்வர் கருணாநிதி உத்தரவின்படி, செய்தித் தாள்களில் வெளியாகியுள்ளது.
வைகோ இச்செய்தியை மறுத்ததுடன், சிறைவாசத்தை கொச்சைப்படுத்துகிற வகையில் திட்டமிட்டு முதல்வர் கருணாநிதி மூலம் இந்த கீழ்த்தரமான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எங்களுக்கு கட்டில் கொடுக்கப்படவில்லை. தரையில் விரிப்பை விரித்து தான் படுத்தோம். டிவி வழங்கப்படவில்லை. அசைவ உணவே வேண்டாம் என சிறை நிர்வாகத்திடம் சொல்லிவிட்டோம் என்றார்.
மேலும், மனிதநேயம் அறவே இல்லாமல், பிறரை இழிவுபடுத்தும் குணம் முதல்வர் கருணாநிதிக்கு என்றைக்கும் உண்டு. எந்த வசதிகளையும் நாங்கள் பயன்படுத்தாத நிலையில், தமிழக மக்களிடம் தவறான செய்தியை பரப்பிவிடும் இவரிடம் அரசியல் நாகரீகத்தை எதிர்பார்க்கவே முடியாது. நான் தொடர்ந்து 27 முறை சிறை சென்றுள்ளேன்.சிறை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே நடந்து கொண்டிருக்கிறேன்.
சிறையில் இருந்தபடி, வசதியாக வீட்டில் இருந்து கொண்டுவந்து உணவை உட்கொண்டது யார் என தமிழக மக்களுக்குத் தெரியும். உண்மை இவ்வாறு இருக்க வடிகட்டிய பொய் செய்தியை பத்திரிகைகளுக்கு வழங்கியவர்களை கண்டிக்கிறேன் என வைகோ தெரிவித்தார் என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment