இலங்கை ஜனாதிபதி முதல்வர் கருணாநிதிக்கு விடுத்துள்ள அழைப்பே தமிழர்களுக்கு அவர் ஆற்றியுள்ள நற்பணிக்கு ஆதாரம் - விஜயகாந்

இலங்கை ஜனாதிபதி முதல்வர் கருணாநிதிக்கு விடுத்துள்ள அழைப்பே தமிழர்களுக்கு அவர் ஆற்றியுள்ள நற்பணிக்கு ஆதாரம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும் விடுதலைப்புலிகள் மீது தான் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பொது மக்கள் மீதல்ல என்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைப்பதைப் போன்றதாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசு தமிழ்ப் பகுதிகள் மீது விமானப் படை விமானங்கள் மூலம் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்கின்றது. இதன் விளைவாக மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், மாதா கோவில்கள், இந்துக் கோவில்கள் என்று பொது நிறுவனங்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் வாழும் குடியிருப்புகளும் பலத்த உயிர்ச் சேதத்திற்கும், பொருட்சேதத்திற்கும் ஆளாகின்றன. இதனாலேயே இலங்கை அரசு போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தினோம்.
ஆனால், இலங்கை அரசோ விடுதலைப்புலிகள் மீது தான் தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும், அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என்றும், ஒரு அப்பட்டமான பொய்யைக் கூறி வருகின்றது. இது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் காரியமாகும். இலங்கை அரசின் சார்பில் வந்த சிறப்பு தூதர், இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்.
அதன் பிறகு பிரணாப் முகர்ஜி, முதலமைச்சர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்தார். இதில், முதலமைச்சருக்கும் திருப்தி, இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் திருப்தி, இலங்கை அரசுக்கும் திருப்தி. ஆனால், வீட்டை இழந்து வாழ்விழந்து, உயிருக்குப் போராடும் இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு திருப்தியா?
கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடந்து கொண்ட விதத்தை நாம் பாராட்டுவதைவிட, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெகுவாகப் பாராட்டியுள்ளார். கருணாநிதி முதிர்ந்த அரசியல்வாதி என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண பாடுபடுகிறார் என்றும், மத்திய அரசின் அனுமதியோடு தங்கள் நாட்டிற்கு அவர் விஜயம் செய்ய வேண்டும் என்றும், இலங்கை ஜனாதிபதி வேண்டுகோள் விட்டதிலிருந்தே இலங்கை தமிழர் பிரச்சினையில் எத்தகைய மகத்தான பணியை கருணாநிதி ஆற்றியிருக்கிறார் என்பது தமிழக மக்களுக்கு நன்கு புரியும்.
இலங்கை அரசின் முகமூடியை கிழித்தெறிய வேண்டியதே தமிழ் மக்களின் கடமையாகும். இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகள் வழங்குவதைப் பொறுத்தவரை, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் தன்னால் இயன்றதை மாவட்டந்தோறும் திரட்டி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வீரகேசரி






0 விமர்சனங்கள்:
Post a Comment