சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த கென்ய உறவினர் ஒருவரால் ஒபாமா அதிர்ச்சி
கென்யாவைச் சேர்ந்த தனது அத்தை ஒருவர், அமெரிக்காவில் சட்டவிரோதமான முறையில் பல வருடங்களாக வாழும் இரகசியம் சனிக்கிழமை அம்பலமானதையடுத்து, அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமா அதிர்ச்சியடைந்துபோயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆண்டி ஸெய்துனி என ஒபாமாவால் செல்லமாக அழைக்கப்படும் ஸெய்துனி ஒனியங்கோ (56 வயது) என்ற மேற்படி பெண்ணின் அமெரிக்க புகலிடம் கோரிச் செய்த விண்ணப்பம் 4 வருடங்களுக்கு முன் நிராகரிக்கப்பட்டு, அமெரிக்காவிலிருந்து வெளியேற அவருக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் அவர் நாட்டை விட்டுச் செல்லாமல் போஸ்டனிலுள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.
இவ்விடயத்தை அறிந்த பெயரை வெளியிட விரும்பாத ஒருவர், அது தொடர்பில் "ஏபி' செய்தி ஸ்தாபனத்துக்கு வெள்ளிக்கிழமை தகவல் தரவும், அந்த நெடுநாள் இரகசியம் அம்பலமாகியுள்ளது.
மேற்படி அத்தையின் சட்டவிரோத நடவடிக்கையானது ஒபாமாவின் தேர்தல் பிரசா ரத்துக்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது.
இது சம்பந்தமாக ஒபாமா விபரிக்கையில், தன்னுடைய கென்ய அத்தை அமெரிக்காவில் தங்கியிருக்கும் விடயம் தனக்குத் தெரியாதெனவும், அவர் நான்கு வருடங்களுக்கு முன்பே நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தான் எண்ணியிருந்ததாகவும் அவர் கூறினார்.
மேற்படி ஒபாமாவின் அத்தை தொடர்பான தகவலை ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயினின் ஆதரவாளர்கள் எவரும் வழங்கினார்களா என்பது குறித்து அறிய முடியாதுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், அமெரிக்காவை விட்டு வெளியேறாது உள்ளமை ஒரு தண்டனைக்குரிய குற்றச் செயல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அமெரிக்காவில் இத்தகைய 10 மில்லியனுக்கும்அதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகள் உள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment