கள்ள காதலுக்காக மகன்களை கொன்ற தாய்
உலகத்தில் சிறந்தது தாய்மை’ என்பார்கள். அதெல்லாம் பொய்யோ என்று நினைக்கக் கூடிய அளவிற்கு தஞ்சை மாவட்டத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தான் பெற்ற இரு மகன்களையும் கொன்று ஆற்றில் வீசிய ஒரு புண்ணியவதியை போலீஸ் சுற்றி வளைத்துள்ளது. காரணம்…..? வேறென்ன….கள்ளக் காதல்தான்!
தஞ்சை மருத்துவக் கல்லூரிச் சாலையில் இருக்கும் திருப்பதி நகரில் வசிப்பவர் முருகேசன். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பிழைப்புத் தேடி பத்து வருடங்களுக்கு முன்பு தஞ்சை வந்து, ஸ்வீட் ஸ்டால் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்திருக்கிறார். அப்போது, அவருக்கு துளகாபுரம் காலனியைச் சேர்ந்த காண்ட்ராக்டர் சரவணனின் நெருங்கிய நட்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில், தஞ்சை இந்திரா நகரைச் சேர்ந்த ரேவதி என்ற பெண்ணைக் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார் முருகேசன். சாதி எதிர்ப்பையும் மீறி நண்பன் சரவணனின் உதவியோடு ரேவதியைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார் முருகேசன்.
நண்பனின் வீட்டிற்கு அடிக்கடி வந்துபோன சரவணன், ரேவதி மீது காமப் பார்வை வீச, அது பகீரென்று பற்றிக்கொண்டது. முருகேசனுக்குத் தெரியாமல் இந்தக் கள்ளத் தொடர்பை பல ஆண்டுகளாக வளர்த்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, வருமானம் போதாமல் மலேசியாவிற்குக் கிளம்ப ஏற்பாடு செய்திருக்கிறார் முருகேசன். இதையறிந்த சரவணன் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்று, முருகேசன் வெளிநாடு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்து அனுப்பி வைத்திருக்கிறார். பிறகென்ன….? சரவணனும், ரேவதியும், கேட்பார் யாருமில்லாமல் உல்லாச உலகில் உய்யலாலா பாடித் திரிந்திருக்கிறார்கள்.
இந்த சமயத்தில்தான் சரவணனுக்கு வில்லனாய் வந்து சேர்ந்தான் காட்டுக்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த இருப்பத்தொரு வயது இளைஞனான குணசேகரன். அதுவரை சரவணனுக்கு மட்டுமே இன்பத்தை வழங்கிவந்த ரேவதி, தனது உறவினரான குணசேகரனுக்கும் முறை வைத்து வழங்க, ஏகக் கடுப்பிற்கு ஆளாகியிருக்கிறான் சரவணன். இந்த ஃபிளாஷ்பேக்தான் முருகேசன்- ரேவதி தம்பதியின் மகன்களான எட்டு வயது விக்னேஷ், ஆறு வயது தினேஷ் கொலைகளுக்கான பின்னணி என்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு, மருத்துவக் கல்லூரி காவல்நிலையத்திற்குக் கண்ணீரும் கம்பலையுமாகச் சென்ற ரேவதி, `நேற்றிரவு எனது வீட்டிற்கு வெளியே விளையாடப் போன எனது இரு மகன்களையும் காணவில்லை. என் வீட்டிற்கு அடிக்கடி வரும் சரவணன் மீதுதான் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அவனோடு பழகிய நான், எனது உறவினர் குணசேகரனோடு பழகியது அவனுக்குப் பிடிக்கவில்லை. `குணசேகரனோடு பழகவேண்டாம்’ என்று என்னைக் கண்டித்த சரவணன், `அப்படி மீறிப் பழகினால், உனது மகன்களைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டினான். அவன்தான் என் மகன்களை ஏதாவது செய்திருக்க வேண்டும்” என்று கதறி இருக்கிறாள்.
அந்த வழக்கைப் பதிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் பத்மநாபன், உடனே எஸ்.பி.க்குத் தகவல் கொடுக்க, அவர் ஏ.டி.எஸ்.பி. தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பத்மநாபன், சோமசுந்தரம் அடங்கிய தனிப்படை அமைத்து சிறுவர்களைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார். அதன்படி, பதின்மூன்றாம் தேதி மாலை விட்டாத்திக்கோட்டை காவல்நிலையத்தில் இருந்து இடையங்காடு ஆற்றில் சிறுவன் ஒருவனின் உடல் மிதப்பதாகத் தகவல் வர, ரேவதியோடு விரைந்த தனிப்படை, அது மூத்த மகன் விக்னேஷின் உடல் தான் என்பதை உறுதி செய்தது.
இதையடுத்து எல்லா தினசரிகளிலும், `குணசேகரனோடு ரேவதி பழகியது பிடிக்காத சரவணன், அவளது இரண்டு பிள்ளைகளையும் கழுத்தைத் திருகிக் கொன்று ஆற்றில் வீசிவிட்டான்’ என்று வாக்குமூலம் கொடுத்திருப்பதாகச் செய்தி வெளியானது. ஆனால் இப்போதோ விசாரணையின் போக்கு வேறு பாதையில் திரும்பியுள்ளது. அதன்படி சந்தேக வளையத்திற்குள் இருந்த சரவணனை விடுவித்துவிட்டு, `ரேவதியும் குணசேகரனும் கூட்டுச் சேர்ந்துதான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள்’ என்றதோடு ரேவதி கொடுத்த வாக்குமூலமாக `ஆரம்பத்தில் சரவணனோடு நெருக்கமாக இருந்தேன். அவன் கசந்த பிறகு குணசேகரனோடு பழக ஆரம்பித்தேன். இதனால் சரவணன் எங்களோடு பிரச்னை செய்தான். இதற்கிடையே இந்த விஷயம் வெளிநாட்டிலிருக்கும் என் கணவனுக்கும் தெரிந்துவிட்டது. இதனால் குணசேகரனோடு எங்காவது ஓடிவிடலாம் என்று நினைத்தேன். இதற்கு எனது இரண்டு மகன்களும், சரவணனும் தடையாக இருந்தார்கள். அதனால்தான் எனது மகன்களைக் கொன்று ஆற்றில் வீசிவிட்டு, பழியை சரவணன் மேல் போட்டேன்’ என்று ரேவதி சொன்னதாகச் சொல்கிறது போலீஸ்.
இந்நிலையில், ரேவதியின் கைதுக்கு முன்பே ரேவதியின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். நம்மைக் கண்டதும் சண்டைக்கு வந்த ரேவதி, “இல்லாததையும் பொல்லாததையும் எழுதி என் குடும்பத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டீர்கள். நான் எதுவும் பேசுவதாக இல்லை” என்று விரட்டினார். மகன்களின் மரணத்தைக் கேள்விப்பட்டு மலேசியாவிலிருந்து துடிதுடித்து இந்தியா வந்து சேர்ந்திருக்கிறார் ரேவதியின் கணவர் முருகேசன். அவரிடம் பேச முயன்றோம். கரகரவென கண்ணீர்விட்டு அழுதவர், “கம்பீரமாக வாழ்ந்த நான் பாதி இறந்துவிட்டேன். கேள்வி கேட்டு என்னைக் கொன்று விடாதீர்கள்” என்று கெஞ்சினார்.
விசாரணை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்திடம் பேசினோம். “விசாரணை நடக்கிறது. நாளை பேசுங்கள்” என்றார். நம்மிடம் பேசிய முருகேசனின் தூரத்து உறவினர் ஒருவர், “ரேவதி, சரவணன், குணசேகரனோடு கும்மாளம் அடித்தது உண்மைதான். ஆனால் யார், குழந்தைகளைக் கொன்றது என்று தெரியவில்லை. முதலில் சரவணன்தான் கொலையாளி என்றது போலீஸ். இப்போது கதையை மாற்றுகிறது. தினேஷின் உடல் என்ன ஆனது என்றே தெரியவில்லை. போலீஸின் நடவடிக்கையைப் பார்த்தால் சரவணனைக் காப்பாற்ற முயல்வதுபோல் தெரிகிறது. முறையான நடவடிக்கை இல்லாவிட்டால் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கேட்கப் போகிறோம்” என்றார்.
கள்ளக் காதலனோடு தப்பியோட கணவரிடம் பணம் அனுப்பக் கேட்டிருக்கிறாள் ரேவதி. கணவரும் இருபத்தைந்தாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார். அந்தப் பணம் வந்து சேர்வதற்குள் விஷயம் ரசாபாசமாகிவிட, தப்பி ஓடமுடியாமல் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் கள்ளக்காதலர்கள்!
தஞ்சை மாவட்ட எஸ்.பி.சம்பத்திடம் பேசினோம். “முதலில் ரேவதி, சரவணன் மீது சந்தேகப்படுவதாகப் புகார் கொடுத்ததால் அவரைப் பிடித்து விசாரித்தோம். ஆனால் எங்களுக்கு ரேவதி, குணசேகரன் மீதுதான் சந்தேகம் வலுத்தது. சரவணன் மீது தவறு இல்லை என்று தெரிந்ததும், ரேவதியின் செல்போனை வாங்கி டிரேஸ் அவுட் செய்தோம். கொலை நடந்த அன்று இருவரும் தொடர்ந்து பேசியது தெரியவந்தது. இருவரையும் அழைத்து விசாரித்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். ரேவதி, குணசேகரன் இரண்டு பேரும் சேர்ந்துதான் குழந்தைகளைக் கொன்று ஆற்றில் வீசியிருக்கிறார்கள்” என்றார்.
இதையடுத்து ரேவதி, குணசேகரன் இருவரையும் கைது செய்த காவல்துறை அவர்களை ரிமாண்டில் வைப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.
நன்றி: குமுதம்
0 விமர்சனங்கள்:
Post a Comment