இலங்கைத் தமிழர்களுக்கு இன்று தேவைப்படுவது அரிசியும் பருப்புமல்ல என்பதை உணருவாரா கலைஞர்?
[01 - November - 2008] [Font Size - A - A - A]
காலகண்டன்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வார முதல்தினத்தன்று இந்திய நாளிதழ் இந்து பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் இராணுவத் தீர்வு பயங்கரவாதிகளுக்கும் அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கும் எனக் கூறி இருந்தார். அத்துடன், அண்மையில் தமிழகத்தில் ஏற்பட்ட இலங்கைத் தமிழர் ஆதரவு எழுச்சி திசை திருப்பி அதன் வேகத்தை செயலிழக்கச் செய்தமையை மனதில் கொண்டு முதலமைச்சர் மு. கருணாநிதியை இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவர் எனப் பாராட்டியும் இருந்தார். அத்துடன், நிற்காது இந்திய மத்திய அரசின் ஊடாக கருணாநிதியை இலங்கை வருமாறு அழைப்பு விட இருப்பதாகவும் ஜனாதிபதி அப்பேட்டியில் கூறி இருந்தார். மேலும், இந்திய மத்திய அரசுடனான உறவு மிகச் சிறப்பாக இருந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
தனது சகோதரர் பசில் ராஜபக்ஷ அண்மையில் புதுடில்லிக்குச் சென்று நடாத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்திருந்தது என்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் எவ்வித பிரச்சினைகள் இன்றித் தொடர்வதாகவும் ஜனாதிபதி கூறியிருந்தார். மேலும், அரசியல் தீர்வு விடயத்தில் தனது நான்கு ""டி' அணுகுமுறையைச் சுட்டிக்காட்டியதுடன், அதற்கு முன்னுதாரண நடவடிக்கையாக கிழக்கில் நடைமுறைப்படுத்திவரும் விடயங்களையும் ஜனாதிபதி அப்பேட்டியில் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
தமிழகத்தில் இலங்கைத் தமிழர் ஒடுக்கப்படுவதற்கு எதிரான எழுச்சிகள் பரவலாகவே மக்களிடம் இருந்து வருகின்றன. ஆனால், அவ் எழுச்சிகளைத் தமிழகத்தின் ஒவ்வொரு கட்சியும் தமக்கான வாக்குகளாக மாற்றும் உள்நோக்கத்துடன் தான் பயன்படுத்தி வருகின்றன என்பது காணக்கூடியதாகும். அத்துடன், பெரும்பாலான ஒவ்வொரு தமிழகக் கட்சிகளிடமும் ஒருவிடயம் படிந்து இருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்தியா ஒரு பெரும் வல்லரசாகி வருகின்றது என்றும் இப்பிராந்தியத்தின் பெரிய அண்ணன் பாத்திரம் வகிக்க வேண்டும் என்றும் கருதுகின்ற பெரும் தேச அகங்காரம் பொதுவாகவே அக்கட்சிகளிடம் இருந்து வரவே செய்கிறது. இதற்கு விதிவிலக்காக சிறிய கட்சிகளான சில மாக்சிச லெனினிச இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே இருந்து வருகின்றன.
மேற்கூறிய இந்திய தேசிய அகங்காரத்தைக் கட்சிகள் மட்டுமன்றி, முக்கியமான பத்திரிகை நிறுவனங்களும் கொண்டிருக்கின்றன என்பது அவதானிக்கக்கூடிய ஒன்றாகும். அதில் ஒன்று தான் ஆங்கில நாளிதழான இந்து பத்திரிகை. தற்போதைய இலங்கைத் தமிழர் ஆதரவுப் பிரச்சினையில் மட்டுமன்றி, இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் தேசிய இனப்பிரச்சினையிலும் எதிர்முகம் கொண்டே அப்பத்திரிகை தொடர்ந்து எழுதி வந்துள்ளது. இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நலன் இந்தியாவின் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, பிரிவினைவாத எதிர்ப்பு, புலிகள் இயக்க எதிர்ப்பு போன்றவற்றை வற்புறுத்திக் கொள்ளும் வகையிலேயே இந்துப் பத்திரிகையின் நிலைப்பாடு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. எவ்வாறு தான் ஜனநாயகம் பற்றிப் பேசினாலும் இந்தியாவின் அதிஉயர் கொள்கை வகுப்பில் அன்று முதல் இன்று வரை பிராமணிய ஆதிக்கம் என்பது இருந்து வருகிறது என்பதை எவரும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. பத்திரிகைத் துறை ஆதிக்கத்திலும் அதுவே இன்றும் முன்னிற்கிறது என்பது மறைக்கக் கூடிய ஒன்றல்ல.
ஆதலால், இந்திய மத்திய அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வழிநடாத்தும் பெரும் பத்திரிகை நிறுவனங்களும் இலங்கைத் தமிழர் ஒடுக்குமுறைப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய நியாயமானதொன்றாகப் பார்ப்பதில்லை. அப்படித் தீர்வு யோசனை முன்வைத்தாலும் அது இந்தியா தனக்கு அளவானதாக இருப்பதையே வற்புறுத்துவார்கள். இவர்கள் எல்லோரும் இலங்கையின் இன ஒடுக்குமுறையையும் அதற்கெதிரான மக்களின் போராட்டங்களையும் பிரிவினையாகவும் பயங்கரவாதமாகவுமே பார்க்கின்றனர். சுயநிர்ணய உரிமை பற்றிய மாக்சிச லெனினிச விளக்கத்தை ஆளும் வர்க்க கட்சிகள் மட்டுமன்றி, இரண்டு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் என்பவை கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பது கவனத்திற்குரியதாகும். சுயநிர்ணய உரிமை சமன் பிரிவினை என்றே அவர்கள் விளங்கிக் கொள்ளும் நிலையில் இருந்து வருகின்றனர்.
இத்தகைய ஒரு அடிப்படை நிலைப்பாட்டுடன் தான் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை இந்திய ஆளும் வர்க்கத் தரப்புகளால் அணுகப்படுகிறது. இந்தியா பெரும் வல்லரசு நாடு நாம் சொல்வதை முழு இலங்கையும் குறிப்பாகத் தமிழ்த் தேசிய இனம் உள்ளிட்ட ஏனைய தேசிய இனங்களும் கேட்டு வழிநடக்க வேண்டும் என்ற மேலாதிக்கப் போக்கே முனைப்புடன் இருந்து வருகிறது. அந்த வகையில் தான் அண்மைய தமிழகத்து மக்களின் இலங்கைத் தமிழர் ஆதரவு அலைக்கு மத்திய அரசு பதில் அளித்திருக்கிறது. அதற்கு தனது கூட்டாளியான முதலமைச்சர் கருணாநிதியையும் பங்காளியாக்கி இருக்கிறது. இலங்கை இராணுவத்தின் இன ஒடுக்குமுறைக்கு எண்ணூ<று தொன் உணவை சமப்படுத்திக் காட்டியிருக்கிறது இந்திய மத்திய அரசு. போதாதற்கு முதலமைச்சர் மத்திய அரசின் பிச்சைபோடும் பாணியைப் பின்பற்றி தனது சொந்தப் பணத்தில் இருந்து பத்து இலட்சம் ரூபாவைக் கிள்ளிப்போட்டு நிவாரண நிதி சேர்க்க ஆரம்பித்திருக்கிறார். அதற்கு ஒரு கோடி ரூபா சேர்த்துள்ளதாகப் பிரசாரமும் நடத்தப்படுகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு இன்று தேவைப்படுவது அரிசியும் பருப்பும் அத்தியாவசியப் பொருட்கள் அல்ல. அவர்கள் கடந்த நூற்றாண்டின் பெரும் பகுதி காலத்தில் அவ்வப்போது கொண்டு வரப்பட்ட சட்டங்களாலும் அரசியல் அமைப்பு, நிறைவேற்றங்களாலும் இனப்புறக்கணிப்புகளுக்கும் பிரதேச அபகரிப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பண்பாட்டுத் துறைகளில் திட்டமிட்டே ஒதுக்கப்பட்டு வந்துள்ளனர். இவற்றை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டும் இன ஒடுக்குமுறையின் வரலாற்று வளர்ச்சிக் கட்டங்கள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு நிலைக் கொள்கைகள் முன்வைக்கப்பட்டு எதிர்ப்புக் குரல்களும் போராட்டங்களும் இடம்பெற்று வந்துள்ளன. அதன் வழியில் முன்வைக்கப்பட்டதே தமிழீழக் கோரிக்கையாகும். அதன் பாற்பட்ட போராட்டமே தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமாகும். அதனை ஊக்கப்படுத்தி ஊட்டங்கள் அளித்து முன் தள்ளியவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தினர். தமது பிராந்திய நலன் நோக்கத்தை நிறைவேற்றவே அவ்வாறு செய்துகொண்டது இந்தியா.
அதேவேளை, அமெரிக்காவும் மேற்குலகமும் இதே தமிழீழப் போராட்டத்தை தமது உலக மேலாதிக்கத்தின் கீழான நவகொலனியத் தேவைக்காகப் பயன்படுத்திக் கொண்டது. இதில் சோகமும் முரண்நகையும் யாதெனில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுவரும் என நம்பி நம்பி எல்லோருக்குப் பின்னாலும் சென்று ஏமாந்து கொண்டமைதான். வென்று தருவோம் என்று மார் தட்டியவர்களும் பின்பு துப்பாக்கி ஏந்தி போராட்டத்தால் வெற்றி பெறுவோம் என வாக்குறுதியளித்த அனைத்து இயக்கங்களுமே தமிழ் மக்களை அரசியல் பாலைவனத்தில் கொண்டுவந்து விட்டு விட்டார்கள். இறுதி நம்பிக்கையாக ஒருசாரார் இந்தியாவையும் மறுசாரார் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச சமூகத்தை காட்டி அவர்கள் மீது நம்பிக்கை வைக்கச் செய்தனர். ஆனால், இன்று அதே இந்தியாவும் அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் என்ன செய்கிறார்கள். தொடர்ந்தும் தமது ஆதிக்கப் போட்டிக்குத் தமிழ் மக்களையும் அவர்களது தேசிய இனப்பிரச்சினையையும் வைத்து போட்டியும் பிழைப்பும் நடத்தி வருகிறார்கள்.
ஆனால், கடந்த மூன்று தசாப்த காலத்தில் சராசரித் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் உயிர், உடல், உடைமை சொந்த மண் அனைத்தையும் இழந்தவர்களாகி நிற்கின்றனர். சுமார் ஒன்றரை இலட்சம் வரையான தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டம் என்றால் உயிர் இழப்புகளும் உடைமை இழப்புகளும் இடப்பெயர்வுகளும் ஏற்படவே செய்யும் என்ற மொட்டை நியாயம் முப்பது வருடங்களுக்குப் பின்பும் செல்லுபடியாக முடியாது. போர் மூண்டு இத்தனை நாள் விடுதலை ஏன் இல்லை என்ற சாதாரண தமிழ் மக்களின் கேள்வியில் நியாயம் இருக்கவே செய்கிறது. அதனால், பேரினவாத ஒடுக்குமுறையுடன் சமரசம் செய்து சரணடைந்துவிட வேண்டும் என யாரும் தவறான நோக்கிற்கு உட்படலாகாது. முன்வைத்த கொள்கைகளும் முன்னெடுத்த போராட்டங்களும் மீள் பரிசீலனைகளுக்கு உள்ளாக்கப்படல் வேண்டும் என்பதே இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்படுவதாகும். கிளிநொச்சியைக் கைப்பற்றலாம்' முல்லைத்தீவையும் பிடிக்கலாம். முழு வடக்கு, கிழக்கிலும் முழத்திற்கொரு பாதுகாப்புப் படையினரை நிறுத்தலாம். ஆனால், பேரினவாத ஒடுக்குமுறையைப் பல்வேறு நிலைகளில் அனுபவித்து வரும் தமிழ் மக்களின் வாழ்விலும் சிந்தனையிலும் இலங்கையின் பேரினவாத ஆளும் வர்க்கம் இடம்பிடிக்க இயலாது. அது இராணுவத் தீர்வினால் சாத்தியப்படவும் மாட்டாது.
ஜனாதிபதி இந்துப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்த தனது ""டி4' அணுகுமுறை பற்றிப் பேசியிருக்கிறார். 1யுத்தமயமாக்கல் குறைப்பு. 2 ஜனநாயக மயமாக்கல். 3 அபிவிருத்தி. 4 பரவலாக்கம் ஆகிய நான்கையும் பற்றிக் கூறி இருக்கிறார். இவை நான்கையும் காணும்போது ""பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை' என்பது போன்று தான் இருக்கிறது. அதாவது, இந்த நான்கையும் தான் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தி முன்னுதாரணம் காட்டி வருவதாகவும் சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆனால், கிழக்கில் எவ்வாறு ஜனநாயகம் மலர வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவதானித்தால் போதுமானது. மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற விதம், இன்றும் தொடரப்படும் அடாவடித் தனங்கள். கொலைகள், ஆட்கடத்தல்கள், மாற்றுக் கருத்துடையோரை அமுக்கி வைத்திருத்தல் போன்ற யாவும் ஜனநாயக மயமாக்கலுக்குள் தான் அடங்குகின்றன. யுத்தமயமாக்கல் குறைப்பு என்பதன் அர்த்தம் மேன்மேலும் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பதிலும் யுத்த தளபாடங்களை வாங்கிக் குவிப்பதிலும் புரிந்து கொள்ளக் கூடியதாகும். அடுத்த வருடத்திற்கு பாதுகாப்புச் செலவீனத்திற்காக பதினேழாயிரத்து எழுநூறு கோடியை ஒதுக்கி இருப்பதில் இருந்து யுத்த மயமாக்கல் குறைப்பு லட்சணம் நன்கு புரிகிறது. யுத்தத்தை ஒருகையாலும் அபிவிருத்தியை மறு கையாலும் ஒரே நேரத்தில் முன்னெடுப்பதாகக் கூறி வரும் மகிந்த சிந்தனை அரசாங்கம், கிழக்கில் முன்னெடுத்துவரும் அபிவிருத்தியை தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி எனக் காட்ட முயற்சிக்கிறார்கள்.
ஆனால், அந்த அபிவிருத்தியின் இலட்சணங்களை அப்பிரதேசத்து, மக்களிடம் கேட்டால் விலாவாரியாக எடுத்துச் சொல்வார்கள். இதே போன்றது தான் பரவலாக்கம் என்ற சொற்றொடராகும்.
அரசியலமைப்பின் பதின் மூன்றாவது திருத்தத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைமுறைப்படுத்துவதே பரவலாக்கல் என்று உச்சரிக்கப்படுகிறது. இதில் குறிப்பிட வேண்டிய விடயமெனில், ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரிய கிழக்கு மாகாண முதல் அமைச்சர் பிள்ளையான் கிழக்கு மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்கிறார். அதேவேளை, அண்மையில் பாராளுமன்ற உறுப்பினராக்கப்பட்ட கருணா பொலிஸ் அதிகாரம் எதுவும் தேவை இல்லை என்று வாதிட்டு வருகிறார். இதில் உள்ள மற்றொரு வேடிக்கை தரும் விடயம், இவர்கள் எல்லோரும் ஆளும் ஐ.ம.சு. முன்னணி சார்பாகவே பதவி பெற்றுக் கொண்டனர் என்பதாகும். இவ்வாறு தான் ஜனாதிபதியின் ""டி4' அணுகுமுறை காணப்படுகிறது. இதனால், தமிழ்த் தேசிய இனமானது தமது பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்கில் உருப்படியாக எதையும் நடைமுறையாக்கப் போவதில்லை. பேரினவாத இராணுவ ஒடுக்குமுறை வாயிலாக முன்னெடுக்கப்படும் எந்தவொரு திட்டமும் மக்களின் அடிப்படை வாழ்வு வாழ்வுரிமையையும் அவர்களது தேசிய இன அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யமாட்டாது என்பதே அனுபவ வாயிலாகக் கண்டுவந்த உண்மைகளாகும்.
இத்தகைய சொற்றொடர் அணுகுமுறைகள் மூலம் பேரினவாத ஒடுக்குமுறைக்கான அவர்களது நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க முடியுமே தவிர, தமிழ் மக்களின் வடக்கு, கிழக்கு சுயாட்சிக்கான அரசியல் தீர்வைக் கொண்டு வந்துவிடாது. இதனையே இன்று நாம் காண வேண்டியுள்ளது.
http://www.thinakkural.com/news/2008/11/1/articles_page61000.htm
0 விமர்சனங்கள்:
Post a Comment