"தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையை எதிர்பார்க்கும் ஈழத்தமிழன்'
[01 - November - 2008] [Font Size - A - A - A]
"எங்களுக்கு முக்கிய தேவை உங்கள் ஒற்றுமைதான்! அதனை விடுத்து, கவனம் திரும்பி உங்களுக்குள் நடக்கும் யுத்தத்தை நோக்கி எல்லோர் கவனத்தையும் திசை திருப்பி விடாதீர்கள்' என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சுகிறான் அந்த ஈழத் தமிழன் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டில் வெளிவந்துள்ள ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கை அரசுக்கு ஆயுதமும் இராணுவ நுட்பமும் கொடுக்காதீர்கள் என்ற குரலுக்கு, இந்திய அரசு நிம்மதியான ஒரு பதிலும் தராமல் போனதில் ஈழத்தமிழனுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்! அதைக்கூட தாங்கிக்கொள்ள முடிந்த அவனால், தமிழர்கள் மீதான கொடூரத் தாக்குதலை உடனே நிறுத்துங்கள் என்று உரக்கச்சொல்வதற்குக்கூட இந்தியா தயங்குவதுதான் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.
அவனுடைய ஒரே ஆறுதல், தமிழகத்திலிருந்து சகோதரபாசத்தோடு எழும் ஆதரவுக்குரல் மட்டுமே. அதேசமயம், ஆதரவுக் குரல்களே குயுக்தி குரல்களாக மாறி, தமிழக அரசியல் கட்சிகள் பரஸ்பரம் தங்களை வீழ்த்திக்கொள்ளும் ஆயுதமாவதை அவன் அதிர்ச்சியோடு கவனிக்கிறான். தமிழகத்தில் அரங்கேறும் கைதுகள் ஒருபோதும் தன் பிரச்சினைக்குத் தீர்வாகாது என்பதை அவன் அறிவான்.
"சகோதர சொந்தங்களே... இந்த நேரத்தில் எங்களுக்கு முக்கிய தேவைகள் உங்கள் ஒற்றுமைதான்! அதைவிடுத்து, கவனம் திரும்பி, உங்களுக்குள் நடக்கும் யுத்தத்தை நோக்கி எல்லோர் கவனத்தையும் திசைதிருப்பிவிடாதீர்கள்' என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சுகிறான் அந்த ஈழத்தமிழன்.
மறவாமல் அவன் வைக்கும் முக்கிய கோரிக்கை ஒன்று உண்டு "எங்களுக்காகக் குரல் கொடுக்கும்போது உணர்ச்சி மேலீட்டில் நீங்கள் உதிர்க்கிற வார்த்தைகளில் மிகுந்த கவனம் கொள்ளுங்கள். இந்திய அரசும் உதவிக்கு வராத நிலையில், எங்களைத் தொடர்ந்து நசுக்கிவரும் இலங்கை அரசின் ஆவேசத்தை மேலும் தூண்டிவிடாதீர்கள்.
இராமேஸ்வரம் நிகழ்ச்சியில்கூட ராஜபக்ஷ பற்றி உங்களில் சிலர் உதிர்த்த வர்ணனை வார்த்தைகளைத் தவிர்த்திருக்க வேண்டும். ஏற்கனவே இரத்தவெறிபிடித்தவர்களின் ஆத்திரத்தை அது இன்னும் விசிறிவிட்டால், எங்களை நசுக்கித் தள்ளும் வேகமல்லவா இன்னும் கூடிவிடும்' என்று கவலையோடு கதறுகிறான் ஈழத்தமிழன்.
அர்த்தமுள்ள கதறல்தான்...வீரியத்தை விடவும் காரியம்தானே முக்கியம்!
http://www.thinakkural.com/news/2008/11/1/importantnews_page61065.htm
0 விமர்சனங்கள்:
Post a Comment