பயம் காரணமாக விடுதலைப் புலிகளுக்கு ஜெ.மறைமுக உதவி
விடுதலைப்புலிகள் மீதுள்ள பயத்தால் வைகோ மூலம் அவர்களுக்கு இன்றளவும் ஜெயலலிதா மறைமுகமாக உதவி வருவதாக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி குற்றம் சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விடுதலைப்புலிகளுக்கு திமுக ஆதரவு என்பது போல புரளியை கிளப்பி காங்கிரசுக்கும், திமுகவுக்கும் மோதலை உருவாக்க ஜெயலலிதா முயற்சிக்கிறார். ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன், படுகொலைக்கு பின் என்று ஈழத்தமிழர் விஷயத்தை பகுத்து பார்த்து அங்கு வாழும் அப்பாவி தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று முதலமைச்சர் கருணாநிதி பல முறை கூறிய பிறகும், ஜெயலலிதா தன் பழைய பல்லவியை விடுவதாக இல்லை.
கூட்டணி கட்சித் தலைவரான ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தபோது, அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து, கிருஷ்ணகிரி சென்றது ஏன் என்று இதுவரை அவர் பதில் சொல்லவில்லை.மேலும் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட அன்று ஒரு அதிமுககாரர் கூட அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று முதல் இன்று வரை விடுதலைப்புலிகளோடு அவர் வைத்துள்ள ரகசிய தொடர்புதான் இதற்கு காரணம். தமிழக அரசால் வழங்கப்படும் பொருட்கள் ஐ.நா. மூலமாக இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் என்று கருணாநிதி கூறிய பின்னரும், வசூல் செய்வதெல்லாம் விடுதலைப்புலி களுக்கே என்று அவர் அறிக்கை விடுகிறார்.
விடுதலைப்புலிகள் மீதுள்ள பயத்தால் வைகோ மூலம் அவர்களுக்கு இன்றளவும் ஜெயலலிதா செய்யும் மறைமுக உதவிகள் விரைவில் வெளிவரும்.
வைகோவுடன் கைகோர்த்து கொண்டு தன்னை புலிகளின் எதிரியை போல நாடகம் ஆடும் தந்திரம் மக்களுக்கு புரியும். 20 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி பிறந்த நாளின் போது வசூலிக்கப்பட்ட தொகையை பிரித்து அனைத்து இலங்கை போராளிகளுக்கும் கொடுத்த போது, அதிமுக ஆட்சியில் இருந்த காரணத்தால் அவர்களுக்கு கோபம் வந்துவிடும் என்ற எண்ணத்தோடு, அதை வாங்க மறுத்தவர்கள்தான் விடுதலைப்புலிகள்.
திரட்டப்படும் பணம் புலிகளுக்கு செல்லும் என்ற சந்தேகம் மக்களுக்கு இல்லை.இலங்கை தமிழ் பெண்களுக்கு நைட்டி வழங்குவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியிருக்கிறார்.அந்த உடை தமிழ் பண்பாட்டுக்கு விரோதமானதா?
தயாளு அம்மாள் 5 லட்சம் ரூபாய் காசோலை அளித்ததை பற்றி கூறியிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியில் பங்குதாரராக இருந்து விலகியதற்காக கிடைத்த 100 கோடி ரூபாய் இருந்து குடும்பத்தாருக்கு திருப்பி கொடுத்தது போக 9.50 கோடி ரூபாயை வங்கியில் தன் பெயரில் டெபாசிட் செய்துள்ளார். அதற்கு மாதந்தோறும் வட்டியும் வருகிறது.முறையாக வருமானவரியும் கட்டியிருக்கிறார்.
ஜெயலலிதா போல வருமானவரியை கட்டாமல் வழக்குகளில் சிக்கி நீதிமன்றத்தில் நெடிய படிக்கட்டுகளை ஏறி இறங்கி கொண்டிருப்பவர் தயாளு அம்மாள் அல்ல.ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு பதிலாகத்தான் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது என்று அதில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
நன்றி : யாகூதமிழ்(மூலம் - வெப்துனியா)
0 விமர்சனங்கள்:
Post a Comment