தீர்ந்தது இலங்கை பிரச்சினை !!!
துக்ளக் இதழில் இலங்கை பிரச்சினை தீர்ந்தது என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரை
இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் இந்த அரசு தேவையா என்று பொதுக்கூட்டத்தில் கேள்வியெழுப்பி, மத்திய அரசுக்கு தந்தி அனுப்பும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு, போர் நிறுத்தத்துக்கு வழி செய்யாவிட்டால், தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அச்சுறுத்தி, மனிதச் சங்கிலி நடத்தி – எல்லாம் ஓய்ந்துவிட்டது. இப்போது, மத்திய அரசின் நடவடிக்கைகளால் முதல்வர் திருப்தியடைந்து ராஜினாமா முடிவை கைவிட்டு விட்டார். முதல்வர் எப்படி மனம் மாறினார்? பிரணாப் முகர்ஜி, முதல்வரிடம் அப்படி என்னதான் கூறியிருப்பார் – என்று முடியைப் பிய்த்துக் கொண்டோம்.
கருணாநிதி : வாங்க, வாங்க! இலங்கைத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கிறதுக்காக பதவியைத் தூக்கி எறிய முடிவு செஞ்சு, ராஜினாமா கடிதங்களை கையிலே கூட தூக்கிட்டோம். எறிய வேண்டியதுதான் பாக்கி. எப்படி எறியறதுன்னு யோசிச்சிட்டிருந்தப்போ, நல்ல வேளையா நீங்க வந்துட்டீங்க.
பிரணாப் முகர்ஜி : உடனே உங்களைப் பார்க்கச் சொல்லி சோனியா அனுப்பினாங்க. எப்படியாவது போர் நிறுத்தம் ஏற்பட்டேயாகணும்னு உறுதியா இருக்காங்க.
கருணாநிதி : அப்படியா? இலங்கையிலே போர் நிறுத்தம் ஏற்படணும்னா சோனியா சொன்னாங்க?
பிரணாப் : ஊஹூம். இலங்கைப் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டிலே அரசியல் கட்சிகள் நடத்திக்கிட்டிருக்கிற போரை, உடனடியா நிறுத்தணும்னு சோனியா சொல்லி அனுப்பினாங்க. அதுக்காகத்தான் வந்தேன்.
கருணாநிதி : இலங்கையிலே அமைதி ஏற்படுத்த சோனியாவும், பிரதமரும் எடுக்கிற நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிச்சுக்கறேன். மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்குதுன்னு சொல்லுங்க. பாராட்டிடறேன்.
பிரணாப் : பிரதமர் ரொம்பக் கவலைப்பட்டாரு. சோனியாவும் கவலைப்பட்டாங்க. ராஜபக்ஷே ஆலோசகர் பாஸில் ராஜபக்ஷேவும் டெல்லிக்கு வந்து கவலைப்பட்டாரு.
கருணாநிதி : தாய் தமிழக மக்களின் கனவுகள், இப்படி ஒவ்வொண்ணா நிறைவேறிக்கிட்டிருக்கிறதை நினைக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது.
பிரணாப் : அதுமட்டுமில்லை. தமிழக மீனவர்கள் மேலே துப்பாக்கிச் சூடு
நடத்தமாட்டோம்னு பிரதமர் கிட்டே பாஸில் ராஜபக்ஷே உறுதி அளிச்சிருக்காரு.
கருணாநிதி : அதை விட, மீனவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுடாமப் பாத்துக்கச் சொல்லுங்க. அதுதான் முக்கியம். அப்பதான் வேற யாராவது மீனவர்களைச் சுடும்போது, நான் துணிஞ்சுக் கண்டிக்க முடியும்.
பிரணாப் : இலங்கைப் பிரச்சனையிலே மத்திய அரசுக்கு நீங்க ஒத்துழைப்பு கொடுக்கணும்னு பிரதமர் கேட்டுகிட்டாரு.
கருணாநிதி : கவலைப்படாதீங்க. இலங்கைப் பிரச்சனையிலே மத்திய அரசோட
நாங்க ஒத்துப்போறது புதுசு இல்லை. அந்தக் காலத்திலிருந்தே மத்திய அரசின் கொள்கையை ஒட்டித்தான் கழகம் செயல்பட்டு வருது.
பிரணாப் : பின்னே, எம்.பி. பதவிகளை ராஜினாமா பண்ணிடுவோம்னு, மத்திய அரசுக்கு எதிரா தீர்மானம் போட்டிருக்கீங்களே....
கருணாநிதி : மத்திய அரசோடு நாங்க மோதறதும் புதுசு இல்லையே. அந்தக் காலத்திலேயே மோதியிருக்கோமே.
பிரணாப் : சரி விடுங்க.
கருணாநிதி : அப்படி வாங்க வழிக்கு. இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கா விட்டால், இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல,
இங்கேயிருக்கிற தமிழர்களும் சாவோம்னு பொதுக்கூட்டத்திலே நான் பேசினது மத்திய அரசு கவனத்துக்கு வந்ததா?
பிரணாப் : அதைக் கேட்டு பிரதமர் ரொம்ப வருத்தப்பட்டாருன்னு சொன்னேனே....
கருணாநிதி : அதுபோதும். அதுக்காகத்தான் அப்படிப் பேசினேன்.
பிரணாப் : சரி. பொதுக்கூட்டம் தான் போட்டீங்களே. அப்புறம் ஏன், மக்களை மத்திய அரசுக்கு தந்தி அனுப்பச் சொன்னீங்க? அதனாலே என்ன பிரயோஜனம்?
கருணாநிதி : இதே சந்தேகம்தான் எனக்கும் வந்தது. அதனாலேதான் தந்தி அனுப்பினது போதாதுன்னு, அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினேன்.
பிரணாப் : சரி. தீர்மானங்களை அனுப்பின பிறகு, மனிதச் சங்கிலி எதுக்கு
நடத்தினீங்க?
கருணாநிதி : தீர்மானங்களை நீங்க படிச்சீங்களா இல்லையான்னு தெரியலை. அதுக்காகத்தான் மனிதச் சங்கிலி. அடுத்ததா ஒரு கோடி கையெழுத்து வாங்கி அனுப்பலாம்னு இருந்தோம். அதுக்குள்ளே நீங்களே வந்துட்டீங்க. இலங்கையிலே அமைதி ஏற்படுத்த என்ன செய்யணும்னு மத்திய அரசுக்குத் தெரியும். அதுக்காகத்தான் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினேன்.
பிரணாப் : நாற்பதாண்டு கால போராட்டத்தை நாலு நாளிலே நிறுத்திட முடியாது.
கருணாநிதி : அது எனக்குத் தெரியாதா? அதனாலதான் மத்திய அரசுக்கு 14 நாட்கள் அவகாசம் கொடுத்தோம்.
பிரணாப் : தீர்மானங்களைப் படிச்சுப் பார்த்தோம். "ஈழத்தில் அமைதியும் சக வாழ்வும் திரும்ப, உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கணும்'னு முதல் தீர்மானம் சொல்லுது. அதுக்கு இலங்கை அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும். எடுப்போம்னு ராஜபக்ஷே பிரதமர் கிட்டே உறுதியளிச்சிருக்காரு.
கருணாநிதி : அது போதுமே. இனிமே இலங்கையிலே குண்டு வெடிக்காதே. பொதுவா, சிங்கள வெறியர்கள் பேச்சை நாங்க நம்பற வழக்கம் இல்லை. ஆனா, நீங்க சோனியா தூதுவரா வந்து சொல்றதாலே நம்பறேன். இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ஆயுத உதவி செய்யக்கூடாதுன்னு தீர்மானம் போட்டிருந்தோமே!
பிரணாப் : அந்த விஷயத்தையும் மத்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும்னு பிரதமர் சொல்லியிருக்காரு.
கருணாநிதி : ரொம்ப நன்றி. இதன் விளைவாக, இனி இலங்கையிலே அழுகுரல் கேட்காது, தமிழர்கள் பட்ட பாடு வீண் போகலைன்னு நினைக்கும்போது ரொம்பப் பெருமையா இருக்குது. உணவு, மருந்துப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலமாகத்தான் கொடுக்கணும்னு தீர்மானம் போட்டிருக்கோம். மத்திய அரசு என்ன முடிவெடுத்திருக்குதுன்னு தெரிஞ்சா அதை வரவேற்கத் தயாரா இருக்கேன்.
பிரணாப் : உணவு, மருந்துப் பொருட்களை இலங்கை அரசிடம்தான் இந்திய அரசு ஒப்படைக்க முடியும். அதை எப்படி விநியோகிக்கணும்னு முடிவெடுக்கிற பொறுப்பு இலங்கை அரசுக்கு இருக்குது.
கருணாநிதி : அதாவது ராஜபக்ஷே பொறுப்போட நடந்துக்கணும்னு
மன்மோகன் சிங் தொலைபேசியிலே சொல்லிடுவாருன்னு சொல்லவர்றீங்க. அதானே? இந்த நடவடிக்கையைத்தான் நாங்க எதிர்பார்த்தோம். தமிழ் இனம் அழியாதபடி
தடுத்துட்டீங்க.
பிரணாப் : மத்திய அரசு எடுக்கிற நடவடிக்கைகள் நிஜமாவே உங்களுக்கு திருப்தி அளிக்குதா?
கருணாநிதி : திருப்தி அடைஞ்சாத்தானே வெற்றியா கொண்டாட முடியும்? அந்தக் கோணத்திலே பார்க்கும்போது திருப்திதான். விலைவாசி உயர்வு, மின்வெட்டு, அமைச்சர்கள் மீதான புகார்கள் எல்லாத்தையும் சமாளிக்க – இந்த வெற்றியைப் பயன்படுத்திக்க முடியுமே.
பிரணாப் : இலங்கைத் தமிழர்கள் பலியாகறதை நிறுத்தறது கஷ்டம். அதை யாரும் பிரச்சனையாக்காம நீங்கதான் பாத்துக்கணும்.
கருணாநிதி : அப்போ, "இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சில கட்சிகள் நம்மோடு ஓரணியில் திரளாமல் குறுக்குசால் ஓட்டியதன் விளைவை, இலங்கைத் தமிழர்கள் அனுபவிக்கிறார்கள்'னு அறிக்கை விட்டு சமாளிக்க வேண்டியதுதான்.
பிரணாப் : மறுபடியும் மீனவர்கள் கொல்லப்பட்டா, மத்திய அரசுக்கு எதிரா எதுவும் செய்யமாட்டீங்களே...
கருணாநிதி : பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் அஞ்சாறு மாசம்தானே இருக்குது? அதுவரைக்கும் வீரமாவும், சோகமாவும் மாத்தி மாத்தி கவிதை எழுதி காலத்தைக் கடத்திடறேன்.
பிரணாப் : இலங்கையிலே போர் தொடர்ந்துகிட்டுத்தான் இருக்கும். ஆட்சிக்கு ஆபத்து ஏற்படற மாதிரி நடவடிக்கை எடுக்க மாட்டீங்களே?
கருணாநிதி : சேச்சே! "அம்மையார் ஆட்சிக் காலத்திலும் இலங்கையில் போர்
நடந்துள்ளது. அப்போது வாய் மூடிக் கிடந்தவர்கள் இப்போது பிரச்சனை செய்கிறார்கள் என்றால் – புராணிகர்கள் மொழியில் கூறுவதானால் – என் ஜாதகம்தான் காரணம்'னு சொல்லிடறேன்.
பிரணாப் : அப்ப நான் புறப்படறேன். உங்க ஆட்சியிலே இருக்கிற குறைகளை விமர்சிக்காம நாங்க ஆதரிக்கிறோம். அதே மாதிரி மத்திய அரசு குறைகளை நீங்க பெரிசுபடுத்தக் கூடாது.
கருணாநிதி : அந்தக் கூட்டாட்சித் தத்துவப்படிதான் நடக்கிறேன்! இருந்தாலும், தமிழ் உணர்வு திடீர் திடீர்னு உறுத்துது. இலங்கைப் பிரச்சனை சம்பந்தமா, ஏதாவது உறுதி மொழி குடுத்துட்டுப் போங்களேன்.
பிரணாப் : நம்ம கூட்டணி தொடரும். உங்க ஆட்சியிலே பங்கு கேட்கமாட்டோம்.
உங்க விருப்பப்படிதான் மத்திய ஆட்சி நடக்கும்னு சோனியா உறுதி
அளிச்சிருக்காங்க.
மதுசூதனன் ராமானுஜம்
0 விமர்சனங்கள்:
Post a Comment