ஒபாமாவுக்கு அரபு நாடோடி உறவினர்கள்
அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவுக்கு அரபு நாடுகளுடன் தொடர்பு இருப்பதாக இஸ்ரேலிய கலிலி பிரதேசத்தில் வாழும் அரபு நாடோடி இனத்தைச் சேர்ந்த மக்கள் உரிமை கோரியுள்ளனர்.
மேற்படி "பென்டோயின்' என்ற நாடோடி இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி சபை உறுப்பினரான அப்துல் ரஹ்மான் ஷெய்க் அப்துல்லா (Abdul Rahman Sheikh Abdullah) "த டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இத்தகவலை தெரிவித்தார்.
""எமக்கு இந்த விடயம் பல வருடங்களுக்கு முன்பே தெரியும். ஆனால், அது பற்றிப் பேச நாம் பயந்தோம். ஏனெனில், அவரது தேர்தல் வெற்றியில், எம்மால் பாதிப்பு ஏற்படுவதை நாம் விரும்பவில்லை'' என அவர் கூறினார்.
""அவரது குடும்பத்துக்கும் எமது இனத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஒபாமாவுக்கு கடிதம் எழுதினோம். ஆனால், அவர் இதுவரை எமது கடிதத்துக்குப் பதிலளிக்கவில்லை'' என அப்துல் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டார்.
1930 களில் பாலஸ்தீனத்தில் பணிக்கமர்த்தப்பட்ட ஆபிரிக்க குடியேற்றவாசிகளில் ஒபாமாவின் கென்ய பாட்டியின் உறவினர் ஒருவரும் உள்ளடங்கியிருந்ததாகவும் பின்னர் அவர் பென்டோயின் நாடோடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரையும் திரும ணம் செய்ததாகவும் அப்துல்லாவின் தாயார் (95 வயது) தெரிவித்துள்ளார்.
மேலும், ஒபாமாவின் குடும்பத்துக்கும் தமது இனத்தவர்களுக்குமிடையிலான ஆவண ஆதாரம் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்த அப்துல்லா, ஒபாமா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் வரை அந்த ஆவணத்தை வெளியிடுவதில்லை என தனது தாயாருக்கு தான் வாக்குறுதி அளித்திருந்ததாகக் கூறினார்.
ஒபாமாவின் வெற்றியைக் கொண்டாட பாரிய விருந்துபசார நிகழ்வொன்றுக்கு அப் துல்லா ஏற்பாடு செய்துள்ளார்.
அத்துடன், ஒபாமாவுக்குப் பாராட்டுத் தெரிவிக்க அமெரிக்காவுக்கு, தமது இனத்தைச் சேர்ந்த தூதுக் குழுவொன்றையும் அனுப்பவுள்ளதாக அப்துல்லா தெரிவித்தார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா, அனைத்துப் போர்களுக்கும் முடிவு கட்டி இஸ்ரேலிலான எமது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பார் என தான் நம்புவதாக அவர் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment