வட இலங்கை மோதல்களில் மேலும் 145 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
இலங்கையின் வடக்கே வன்னி மற்றும் யாழ்ப்பாணம் களமுனைகளில் செவ்வாயன்று இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையி்ல் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற உக்கிர சண்டைகளில் இருதரப்பிலும் குறைந்தது 145 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த மோதல்களில் 162 படையினரும், 250 விடுதலைப் புலிகளும் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கிளாலி பகுதியில் செவ்வாயன்று இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றதாகவும், இந்த மோதல்களில் 40 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
எனினும் தங்கள் தரப்பி்ல் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் குறித்த தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை.
இதேவேளை, முல்லைத்தீவுக்குத் தெற்கே முள்ளியவளை பிரதேசத்தில் முன்னேறியுள்ள இராணுவத்தினர், மாங்குளத்தில் இருந்து முள்ளி்யவளை ஊடாக முல்லைத்தீவுக்குச் செல்லும் ஏ34 வீதியில் முள்ளியவளைக்குத் தெற்கே 3 கிலோ மீட்டர் தூரத்தை தங்கள் வசப்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
BBC Tamiloosai
0 விமர்சனங்கள்:
Post a Comment