பெற்றோரால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட பங்களாதேஷ் பெண் மருத்துவர்
விருப்பத்துக்கு மாறான திருமணத்துக்கு பலவந்தமாக இணங்கச் செய்யும் நோக்குடன் தனது சொந்தக் குடும்ப அங்கத்தவர்களால் கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்ட பெண் மருத்துவரை பங்களாதேஷ் நீதிமன்றமொன்று விடுதலை செய்துள்ளது.
கிழக்கு லண்டனில் வசிக்கும் ஹுமாய்ரா அபெடின் (33 வயது) என்ற பெண் மருத்துவரே பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அவரது பெற்றோரால் சிறைவைக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.
ஹுமாய்ராவின் பெற்றோரின் நடவடிக்கை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவர்கள் தமது மகளுக்கு மென்மேலும் தொந்தரவு கொடுப்பார்களாயின், அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
இதனையடுத்து ஹுமாய்ரா பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து லண்டனுக்கு புறப்பட்டார்.
ஹுமாய்ரா ஆறு வருடங்களுக்கு முன் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரத்தில் முதுமாணி பட்டப்படிப்பு ஒன்றைத் தொடர லண்டன் சென்றார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் லண்டனிலுள்ள மருத்துவமனையொன்றில் மருத்துவராக பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்நிலையில் தாய் சுகவீனமுற்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பங்களாதேஷ் சென்ற ஹுமாய்ரா, அங்கு பெற்றோரால் சிறை வைக்கப்பட்டார்.
ஆனால், ஹுமாய்ரா இணையத்தளம் மூலம் லண்டனிலுள்ள தனது நண்பர் ஒருவருக்கு தனது நிலை குறித்து விப?த்து உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
அந் நண்பர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பிரித்தானிய உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் பிரித்தானியாவின் புதிய பலவந்த திருமணத் தடை சட்டத்தின் கீழ் ஹுமாய்ராவின் திருமணத்துக்கான தடை உத்தரவை பிறப்பித்தது.
அதனைத் தொடர்ந்து மேற்படி விவகாரம் பங்களாதேஷ் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு பெற்றோரின் தடுப்புக் காவலிலிருந்து ஹுமாய்ரா விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஹுமாய்ரா விபரிக்கையில், ""நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு ஆதரவு வழங்கி உதவி செய்த அனைவருக்கும் நன்றி செலுத்துகிறேன். ஆனால், என்னைத் தடுத்து வைத்திருந்ததற்காக எனது பெற்றோர் மீது எதுவித கசப்புணர்வும் இல்லை.
ஏனெனில் அவர்கள் என்னைப் பெற்றெடுத்து வளர்த்தவர்கள் என்பதை நான் மறந்து விடவில்லை'' என்று கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment