2009இல் இலங்கையில் ஐ.நா. தலையீடு?
இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 2009ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை கூடுதல் அக்கறை செலுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2009ம் ஆண்டுக்கான ஐ.நா. பாதுகாப்புச்சபையின் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளில் 8 நாடுகள் அமெரிக்க ஆதரவு நாடுகளாகும். இதுதவிர, ஐ.நா.வுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படவுள்ள சுஸான் றைஸ், ஐ.நா. தலையீடுகளுக்கு ஆதரவான ஒருவர்.
இதனால், இலங்கையில் ஐ.நா. தலையீட்டுக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.
2009ம் ஆண்டுக்கான ஐ.நா. பாதுகாப்புச்சபை நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக, தீவிர அமெரிக்க ஆதரவு நாடுகளான ஒஸ்ரியா, ஜப்பான், மெக்சிகோ, உகண்டா, துருக்கி ஆகிய ஐந்து நாடுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்புச்சபையின் நிரந்தரமற்ற 10 உறுப்பு நாடுகளில் லிபியா, வியட்நாம் தவிர, பேர்கினா வாஸோ, கோஸ்ரா றிக்கா, குரோசியா ஆகிய ஏனைய நாடுகளும் கூட அமெரிக்க ஆதரவு நாடுகளாகவே உள்ளள.
இதனால், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்துக் கடுமையாக விமர்சித்து வரும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த விடயத்தில் ஐ.நா.வின் தீவிர தலையீட்டுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிரவும், இனப்படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் நிறைந்த நாடுகளில் ஐ.நா. தலையீடு அவசியம் என்று வலியுறுத்தி வருபவரான சுஸான் றைஸ் அம்மையார், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான ஒபாமாவின் நிர்வாகத்தில் ஐ.நா. வுக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளமை, இந்தப் போக்குக்கு மேலும் வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் காரணங்களால், 2009ம் ஆண்டுக்கான ஐ.நா. பாதுகாப்புச்சபையின் நிகழ்ச்சித் திட்டத்தில் இலங்கையும் உள்ளடக்கப்படலாம் என்றும், பாதுகாப்புச்சபையின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாக நேரிடலாம் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அஞ்சுவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துமாறு துருக்கியைக் கோரும் இரகசிய நோக்கத்துடனே இலங்கை ஜனாதிபதி அண்மையில் அங்காராவுக்கு விஜயம் செய்ததாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
நிலைமை மோசமானால், ஐ.நா. பாதுகாப்புச்சபையின் அனைத்து நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கும் இலங்கை உயர்மட்ட விஜயங்களை மேற்கொண்டு தமக்கெதிரான தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கவேண்டாம் என்று கோரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment