8 வயது சிறுமிக்கு விவாகரத்து வழங்க மறுப்பு
தனது தந்தையால் 58 வயது நபர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு விவாகரத்து வழங்க சவூதி அரேபிய நீதிமன்றமொன்று மறுப்புத் தெரிவித்துள்ளது.
பண நெருக்கடி காரணமாக 30,000 றியால்களை (8000 அமெரிக்க டொலர்) சீதன முற்பணமாக பெற்று மேற்படி சிறுமியை அந்நபருக்கு திருமணம் செய்து கொடுத்தமையை அவரது தந்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சிறுமியின் தந்தையும் வயோதிப மணமகனும் திருமண ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதையடுத்து, றியாத் நகருக்கு வடக்கே 220 கிலோமீற்றர் தொலைவிலுள்ள உனாஸாஹ்கிலுள்ள நீதிமன்றத்தில் சிறுமியின் தாயார் தனது மகளுக்கு விவாகரத்து வழங்கக் கோரி வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
மேற்படி 8 வயது சிறுமி தனக்கு திருமணம் நடைபெற்றது குறித்து இதுவரை அறியாது உள்ளதாகவும் அவர் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கச் சென்று வருவதாகவும் இந்த வழக்கில் பங்கேற்ற சட்டத்தரணியான அப்துல்லா ஜதிலி தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமியின் தாய் அச்சிறுமிக்கான சட்டபூர்வமான பாதுகாவலர் அல்ல எனவும் அதனால் மேற்படி வழக்கு விசாரணைகளில் அவர் சிறுமியைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது எனவும் தீர்ப்பளித்துள்ளது.
சிறுமி உரிய வயதையடைந்ததும் அவரே விவாகரத்தைக் கோரிப் பெற முடியும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment