போர்நிறுத்தம் ஏற்படும் என பிரதமர் உறுதிமொழி வழங்கவில்லை: பாண்டியன்
இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சு நடத்தியிருந்ததாகவும், இந்தப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத் தரப்பில் பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் கலந்துகொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், “இலங்கையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த தம்மால் முடியும் என்றோ அல்லது அதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்றோ பிரதமரோ அல்லது வெளிவிவகார அமைச்சரோ உறுதிமொழி வழங்கவில்லை. போர்நிறுத்தம் பற்றிப் பேச்சு நடத்துவதற்கு வெளிவிவகார அமைச்சரையாவது இலங்கைக்கு அனுப்ப முடியுமா என நாங்கள் கேட்டோம். அதற்கு சரியெனப் பதில் வழங்கப்பட்டது” என பாண்டியன் கூறினார்.
இதேவேளை, இலங்கைப் பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடும் நோக்கில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு நேற்று வியாழக்கிழமை புதுடில்லி சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்திருந்தது.
இந்தச் சந்திப்பில் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், இதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்ததாக தமிழக முதல்வர் ஊடகங்களிடம் கூறினார்.
போர்நிறுத்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வெளிவிவகார அமைச்சர் பிரணாம் முஹர்ஜியை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாகப் பிரதமர் உறுதிமெழி வழங்கியதாகக் குறிப்பிட்ட அவர், கூடிய விரைவில் வெளிவிவகார அமைச்சர் இலங்கை செல்வார் எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிராணம் முஹர்ஜி இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மாற்றம் ஏற்படும் என நம்புவதாக தமிழக முதல்வர் கூறினார்.
நேற்றைய அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவில் அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளவில்லை.
இலங்கையில் போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்தவதற்குத் தம்மால் முடியுமென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதிமொழி எதனையும் வழங்கவில்லையென கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் பாண்டியன் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment