பொலிஸ் உத்தியோகத்தரை கடித்த பிரான்ஸ் விளையாட்டு வீராங்கனை
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அவதூறு செய்து கடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட பிரான்ஸ் முன்னாள் விளையாட்டு வீராங்கனையும் உலக சம்பியனுமான எயுனைஸ் பார்பருக்கு 4,271 ஸ்ரேலிங் பவுன் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து பார்பர் (34 வயது) விபரிக்கையில், ""இத் தீர்ப்பானது மிகமோசமானதும் அநீதியானதுமாகும்'' எனத் தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு செயின்ட் டெனிஸ் நகரில் வாகன நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த வீதியொன்றில் பார்பரின் கார் நுழைய முயன்ற வேளை, பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டபோதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பொலிஸ்காரர் ஒருவர் தனது முகத்தில் அடித்ததாகவும் அவரது தாக்குதலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முகமாகவே தான் கடிக்க நேர்ந்ததாகவும் பார்பர் நீதிமன்ற சாட்சியத்தின்போது தெரிவித்தார்.
எனினும் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர், தான் தவறான காரியம் எதையும் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.
மேற்படி பொலிஸ் உத்தியோகத்தரைக் கடித்த சம்பவத்தையடுத்து, 28 மணி நேரத்தை பார்பர் பொலிஸ் தடுப்புக் காவலில் கழித்தார்.
சியராலியோனைப் பிறப்பிடமாகக் கொண்ட பார்பர், 1999 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் உலக நீளம் பாய்தல் சம்பியன் போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment