''சிங்கள ராணுவத்துக்கு தமிழக மருந்து..''
தொடரும் நிவாரணத் துயரங்கள்..
நமது தமிழக அரசு அனுப்பியநிவாரணப் பொருட்கள் இலங்கைத் தமிழர் களுக்குச் சென்று சேராத சோகம் குறித்துக் கடந்த 7.12.08-ம் தேதியிட்ட ஜூ.வி-யில், 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை!' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்ற முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத் துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் நிவாரணப் பொருட்கள் உரியவர்களுக்குச் சென்று சேராத பிரச்னை குறித்து வலியுறுத்தினார். இதற்கிடையில், ஐ.நா. சபை உள்ளிட்ட பொதுநல அமைப் புகளும், 'போர்க் காலங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுப்பது உலகளாவிய குற்றம். சிங்கள அரசின் மனிதாபிமானமற்ற செயலை உலக நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்!' என வலியுறுத்தத் தொடங்கின. இத்தகைய நெருக்கடியைத் தொடர்ந்து, நிவாரணப் பொருட்களை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கத் தொடங்கி இருக்கிறது சிங்கள அரசு. அவற்றைப் புகைப்படமெடுத்து உலகளாவிய மீடியாக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால், வன்னி ஏரியாவில் நிவாரணப் பொருட்களைப் பெற்ற தமிழர்களோ,
''சிங்கள ராணுவம் வேண்டுமென்றே நிவாரணப் பொருட்களை சேதப்படுத்திக் கொடுக்கிறது. தமிழக அரசு பேக் பண்ணி கொடுத்தனுப்பிய நிவாரணப் பொருட்கள் கிழித்து எடுக்கப் பட்டிருக்கின்றன. முக்கிய உணவுப் பொருட் களையும் மருந்துப் பொருட்களையும் அவர்கள் எடுத்துக்கொண்டு, பெயரளவுக்கு மட்டுமே நிவாரணப் பொருட்களை சிங்கள ராணுவம் தமிழர்களுக்கு வழங்குகிறது!'' என வேதனையோடு குற்றச்சாட்டு எழுப்பு கிறார்கள்.
இதுகுறித்து இலங்கை தமிழ் எம்.பி-க்களான துரை ரத்தினசிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினோம். ''நிவாரணப் பொருட்களை வழங்கும் விஷயத்தில் சிங்கள அரசு முடிந்த அளவுக்கு முட்டுக்கட்டைகள் போட்டுப் பார்த்தது. கடும் மழையில் நிவாரணப் பொருட்கள் வேண்டுமென்றே பாழ்படுத்தப்பட்டன. அதையும் தாண்டி நிவாரணப் பொருட்கள் வழங்கப்படாத சோகம் பெரிதாக எதிரொலிக்க, வேறு வழியில்லாமல் இலங்கை அதிபர் ராஜபக்ஷே ராணுவத்தின் மூலமாக நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். 'செஞ்சிலுவை சங்கத் தின் மூலமாகவே நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படும்' என தமிழக முதல்வர் உறுதியாக அறிவித்திருந்த நிலையில், சிங்கள ராணுவமோ செஞ்சிலுவை சங்கத்தை மிரட்டி ஓரங்கட்டி விட்டது. கண்காணிப்பு என்ற பெயரில் நிவாரணப் பொருட்களை ராணுவத்தினரே எடுத்துக் கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக மருந்துப் பொருட்களை முழுவதுமாக எடுத்துக்கொண்டு விட்டார்கள். தமிழகத்தின் உதவி சிங்கள ராணுவத் துக்குப் போய்ச் சேருவதைப் பார்த்து எங்களால் குமுற மட்டுமே முடிகிறது!'' என இயலாமையை விளக்கிச் சொன் னார்கள் துரை ரத்தினசிங்கமும், சுரேஷ் பிரேமச்சந்திரனும்.
தமிழக அரசின் நிவாரணத் திரட்ட லுக்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்த கவிஞர் தாமரையிடம் இது குறித்துக் கேட்டோம்.
''ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதாக இலங்கை யிலிருந்து வருகிற செய்திகள் எல்லாம் சிங்கள அரசால் காட்டப்படுகிற தோற்றம் மட்டுமே. பசியாலும் காயங்களாலும் அல்லல்படும் தமிழ் மக்க ளுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக வழங்கப்பட வேண்டிய நிவாரணத்தை சிங்கள அரசு ஏன் வழங்குகிறது? உலகப் பொதுநல அமைப்புகளுக்கு பயந்து, செஞ்சிலுவை சங்கம் மூலம் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கிற சிங்கள அரசு, அங்கே யாரும் போக முடியாதபடி பாலங்களை இடித்துப் போட்டு விடுகிறது. இதர தரைவழிப் பாதை களையும் பாதுகாப்பு என்ற பெயரில் அடைத்துப் போட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் மூலமாக மட்டுமே நிவாரண உதவிகளை செஞ்சிலுவை சங்கத்தால் வழங்க முடியும். அதற்கு சிங்கள அரசு ஒருபோதும் அனுமதி கொடுக்காது!
இலங்கையின் நிவாரண நிலவரத்தை கவனிக்க தமிழகத்தில் இருந்து அமைச்சர்கள், மனித உரிமைப் பணியாளர்கள், படைப்பாளர்கள் அடங்கிய குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். நிவாரண விஷயத்தில் புகைப்பட ஆதாரங்களுக்காக மட்டுமே ஒருசில இடங்களில் நியாயமுடன் வழங்குவது போல சிங்கள அரசு ஜோடிப்பு காட்டுவதாக தகவல்கள் வருகின்றன. நிவாரண விஷயத்தில் உண்மையான நிலவரத்தை சர்வதேச செஞ்சிலுவை சங்கம்தான் சொல்ல வேண்டும்!'' எனச் சொன்னார் தாமரை.
விகடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment