அதிபருக்கு நேர்ந்த அவமானம்
- எம். மணிகண்டன்
இண்டர்நெட்டில் புதிய வகையான விடியோ கேம்கள் கடந்த சில நாள்களாக வேகமாகப் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. இந்த விளையாட்டின் முக்கிய ஆயுதம் ஷு. அந்த ஷுவைக் கொண்டு அமெரிக்க அதிபர் புஷ்ஷை எத்தனை முறை சரியாகத் தாக்குகிறீர்களோ அவ்வளவு புள்ளிகள் கிடைக்கும். வெற்றி பெற்றவுடன் திரையில் தோன்றும் வாசகம், "யெஸ் யூ கேன்'.
இதைப்போன்று நூற்றுக்கணக்கான கட்டணமில்லாத விடியோ கேம்கள் இப்போது இணையத்தில் உலவிக் கொண்டிருக்கின்றன. ஏதோ புஷ் மீது கோபம் கொண்ட குறும்புக்காரர்கள் சிலர் இதுபோன்ற விடியோ கேம்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறார்கள் என்று நினைத்தால், அது முற்றிலுமாகத் தவறு. உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இதுபோன்ற விடியோகேம்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புஷ்ஷின் மதிப்பு எந்த அளவுக்குச் சரிந்து கிடக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணம்.
பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் தனது அறியாமையை வெளிப்படுத்தி நகைப்புக்குள்ளாவது புஷ்ஷின் வழக்கம். ஆப்பிரிக்கா என்றால் எந்த ஊருக்குப் பக்கத்திலிருக்கிறது என்று கேட்பார்; அஞ்சலி செலுத்தும் கூட்டங்களில் சிரித்துக் கொண்டிருப்பார்; என்ன நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என்றே தெரியாமல் தொடர்பே இல்லாத விஷயத்தைப் பற்றி சீரியஸôகப் பேசுவார். அதுதான் புஷ். இப்படி அவர் நடந்து கொண்டதால், அவரைக் கிட்டத்தட்ட ஒரு கோமாளிபோல ஊடகங்கள் சித்திரித்து வந்தன.
இராக்கில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவரை நோக்கி ஜெய்தி என்ற இளைஞர் ஷுவை எறிந்த சம்பவம் புஷ்ஷுக்கு இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையையும் சிதைத்திருக்கிறது. அதன்பிறகு, காபூலில் புஷ் கலந்து கொண்ட கூட்டத்துக்கு பத்திரிகையாளர்கள் யாரும் ஷு அணிந்து வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கும் அளவுக்கு நிலைமை போனது. இராக்கில் அமெரிக்க ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து "ஷு தாக்குதல்' நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்காக மட்டுமே அதிபர் மீது ஷுவை வீசுவதற்கு யாருக்கும் தைரியம் வராது. புஷ்ஷைப் பற்றி ஏற்கெனவே இருக்கும் அபிப்ராயமும்தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும். புஷ் அல்லாத வேறு ஒருவர் அதிபராக இருந்து, இராக்கில் அமெரிக்க ராணுவம் நுழைந்திருந்தால்கூட, இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்பது சந்தேகமே.
தாம் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்று புஷ் கூறியிருந்தாலும், இந்த விவகாரத்தில் உலகத் தலைவர்கள் யாரும் பெரிய அளவில் கண்டனம் தெரிவிக்காதது புஷ்ஷுக்கு நிச்சயம் வேதனையளித்திருக்கும். இதனால், புஷ் எதிர்ப்பாளர்கள் இப்போது உள்ளூரச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று வெனிசுலா அதிபர் சாவேஸிடம் கேட்டதற்கு, பலமாகச் சிரித்து விட்டு அவர் கூறினார், "ஷுவை வீசியவர் ரொம்ப தைரியசாலி'.
ஷுவை வீசிய ஜெய்திக்கு அரபு நாடுகளிலிருந்து பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து கொண்டிருக்கின்றன. அவரது செயலை அவரது குடும்பத்தினர் உள்ளிட்டவர்களும் ஆதரிக்கிறார்கள். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டங்கள்கூட நடத்தப்பட்டு வருகின்றன. எப்படியோ புஷ்ஷை நேரடியாக அவமதிக்க முடியாதவர்கள், இந்தச் சம்பவத்தின் மூலம் திருப்தியடைந்திருக்கிறார்கள்.
விருந்தினராக வந்த வேற்று நாட்டு அதிபர் மீது ஷுவை வீசி அவமானப்படுத்துவதை, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அதேசமயம், உலகின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஆதரவிழந்த அதிபருக்கு நல்ல மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. தம்மீது உலகம் எவ்வளவு வெறுப்பாக இருக்கிறது என்பதை புஷ் உணர்ந்து கொள்வதற்கு இது ஒரு சந்தர்ப்பம்; ஆட்சியாளர்கள் கேட்டுக் கொண்டாலொழிய, அடுத்த நாட்டு விவகாரங்களில் அத்துமீறித் தலையிடுவது தவறு என்பதை வல்லரசு நாடுகளுக்கு உணர்த்தும் பாடமும்கூட.
தினமணி
0 விமர்சனங்கள்:
Post a Comment