நெடுங்கேணியைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு: கிளிநொச்சியில் தொடரும் மோதல்கள்
முல்லைத்தீவு மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியை இராணுவத்தினரின் விசேட படையணி-4 கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை காலை முதல் இராணுவத்தினர் நடத்திய வெற்றிகரமான தாக்குதல்கள் மூலம் நெடுங்கேணியை கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் கிளிநொச்சியில் கடும் மோதல்கள் தொடர்ந்து வருவதாகவும், இதில் இரண்டு தரப்புக்கும் இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் 57வது படைப்பிரிவுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று காலை 6 மணிக்கும் பின்னர் மாலை 6 மணிக்கும் இரணைமடு வடக்குப் பகுதியில் கடும் மோதல்கள் நடந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, இந்த மோதல்களில் 12 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் காணாமல் போயிருப்பதாகவும், 34 பேர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய மோதல்களில் விடுதலைப் புலிகளுக்குக் கடும் இழப்புக்கள் ஏற்பட்டமை அவர்களின் தொலைத்தொடர்பு கருவிகளை ஒட்டுக்கேட்டதன் மூலம் அறிந்துகொண்டதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.
அதேநேரம், கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு பகுதியில் இராணுவத்தினருடன் நடந்த மோதல்களில் 60 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 150 பேர் காயமடைந்திருப்பதாக விடுதலைப் புலி வட்டாரங்களை மேற்கோள்காட்டி இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் காரணமாக இரணைமடுவில் இராணுவத்தினர் கைப்பற்றிய பகுதியிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரம் பின்நோக்கித் தள்ளப்பட்டிருப்பதாக அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டும் மோதல்கள் தொடரும்
இதுஇவ்விதமிருக்க வன்னியில் தற்பொழுது நடைபெற்றுவரும் நாலாம்கட்ட ஈழப் போர் இந்த வருடத்துடன் முடிவடைந்துவிடாது எனவும், 2009ஆம் ஆண்டும் மோதல்கள் தொடரும் எனவும் இராணுவ ஆய்வாளரான இக்பால் அதாஸ் தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு விரைவில் கைப்பற்றப்பட்டுவிடும் என பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுகின்றபோதும், விடுதலைப் புலிகளும் கடுமையான பதில் தாக்குதல்களை நடத்திவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கும் புலிகளின் தளபதிகள், “தமிழ் மக்களைப் பாதுகாக்கும் இறுதிக்கட்டப் போர்” தற்பொழுது நடைபெற்று வருவதாகவும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பாதுகாக்கப்படும் எனவும் கூறியிருப்பதாக இக்பால் அதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இராணுவத்தினரின் கடுமையான தாக்குதுல்களால் முன்னரே கிளிநொச்சி கைப்பற்றப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்புடன் பல சர்வதேச ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்தாகவும், விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் அவர்கள் நாடு திரும்பியிருப்பதாகவும் இராணுவ ஆய்வாளரான இக்பால் அதாஸ் தெரிவித்துள்ளார்.
ஐஎன்லங்கா இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment