பொதுமக்களை விடுவிக்காவிட்டால் புலிகள் அமைப்பு மீது தடை?
விருப்பத்துக்கு மாறாகத் தடுத்துவைத்திருக்கும் பொதுமக்களை விடுவிக்காவிட்டால் விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுவிடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.
மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதியளிக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி, “இந்த வருடத்துக்குள் அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்படும்” என ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி கூறியிருப்பதாக சர்வதேச செய்திச்சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் 1998ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டதுடன், 2002ஆம் ஆண்டு தடை நீக்கப்பட்டு போர்நிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்டது.
2008ஆம் ஆண்டு ஆரம்பத்தில் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் விலகிக் கொண்ட பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பை அரசாங்கம் தடைசெய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், புலிகள் அமைப்பைத் தடைசெய்யவேண்டிய தேவை இல்லையென அரசாங்கத்தில் கூறப்பட்டு வந்தது.
இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையிலேயே, தமது கட்டுப்பாட்டிலிருக்கும் பொதுமக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்காவிட்டால் அவர்கள் தடைசெய்யப்படுவார்கள் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை, பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு இலங்கை அரசாங்கம் தமிழன அழிப்பில் ஈடுபட்டு வருவதாக இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment