புலம்பெயர் மக்களுக்கு வெற்றிச்செய்தியை மிக விரைவில் அனுப்பிவைப்போம் - பா.நடேசன்
புலம்பெயர் மக்களின் நிதிப் பங்களிப்பு எங்கள் போராட்டத்தின் முதுகெலும்பாகவே உள்ளது. உலக அரங்கில் நீங்கள் செய்யும் பரப்புரைப் பணியை மேலும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்யுங்கள் வெற்றி தரும் மகிழ்ச்சியை விரைவில் நாங்கள் அனுபவிப்போம் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
சுவிஸில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் வெளிவரும் ‘நிலவரம்’இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கிளிநொச்சி மீதான முற்றுகை இறுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றியே ஆவதெனச் சிங்களம் சூளுரைத்துள்ள நிலையில், என்ன விலை கொடுத்தாவது கிளிநொச்சியைக் காப்பாற்றியே தீர்வதென விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. களநிலவரம் உண்மையில் எவ்வாறாக இருக்கின்றது?
சிங்களப் படைகளின் சிறப்பு டிவிசன்கள் இரண்டின் படையணிகள் கிளிநொச்சிக்கான சமரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் கிளிநொச்சியின் மேற்கே பலமுனைகளில் கடும் சண்டைகள் நாள்தோறும் நடக்கின்றன.
சிங்களப் படைகளின் முயற்சியை முறியடிக்கும் எதிர்ச்சமரில் புலி வீரர்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர். இதுவரை இரண்டு காலக்கெடுக்களைச் சிங்களத் தளபதிகள் கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு என்று விதித்தும், அது அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை.
கிளிநொச்சிக்கான சண்டைகளில் சிங்களப் படைகள் கடுமையான உயிரிழப்புக்களைச் சந்தித்து வருகின்றன. புதிய வியூகங்கள்- தந்திரோபாயங்களுடன் கிளிநொச்சியைப் பாதுகாக்கும் எதிர்ச்சமரில் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.
வன்னியில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஏதிலிகளாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் துயரம் மிக மோசமாக ஆகியிருக்கின்றது. மக்களை வவுனியாவிற்கு வருமாறு அரசு கோரி வருவதுடன், அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாகவும் பிரசாரம் செய்து வருகின்றது. ஏதிலிகளாக உள்ள மக்கள் வவுனியாவிற்கு வருகைதராமைக்குக் காரணம் என்ன?
சிங்களப் படைகள் நிலங்களை ஆக்கிரமிக்கும் போது அங்கிருந்து மக்கள் இடம்பெயர்ந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பாதுகாப்புத் தேடுவதுதான் வழமை. இதுதான் இப்போதும் நடைபெறுகின்றது.
தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு காட்டும் அக்கறை 'ஆடு நனையுதென்று ஓநாய் அழுத' கதைதான். இன அழிப்பிற்கும், சமூகச் சீரழிப்பிற்கும் எமது மக்களை உட்படுத்திப் போராட்டத்தை அழிக்கும் நாசகார நோக்குடனேயே சிங்கள அரசு தனது பகுதிக்குள் வருமாறு மக்களை அழைக்கின்றது. எத்தனை தடவைகள் இடம்பெயர்ந்தாலும், புலிகளின் கட்டுப்பாட்டு நிலத்தில் வாழவே மக்கள் விரும்புகின்றனர். சிங்கள அரசின் அழைப்பை மக்கள் தாமாகவே நிராகரிக்கின்றனர்.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில் சமாதானப் பேச்சுக்கள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் எட்டாத தொலைவில் உள்ளன. அதேவேளைஇ விடுதலைப் புலிகளைப் புறந்தள்ளி அரசியல் முனைப்புக்களில் ஈடுபட மேற்குலக நாடுகள் ஒரு சிலவற்றின் ஆசீர்வாதத்துடன் ஒருசில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
புலிகளையும் - தமிழ் மக்களையும் பிரித்துப் பார்த்து குரூரமாக திருப்தியடையச் சில சக்திகள் விரும்புகின்றன. ஆனால், அவையெல்லாம் கற்பனைகளாகவே இருக்கும். தமிழரின் தலைமைச் சக்தி புலிகள் இயக்கம்தான். இதனை தமிழ் மக்களும் பல தடவைகள் தேர்தல் நடைமுறைகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தமிழ்த் தேசியத்திற்கு விரோதமான சில தனிநபர்கள் தம்மைத் தலைவர்களாகக் கற்பனை செய்துகொண்டு திரிவது கேலிக்கூத்தானது. இதுபற்றி புலிகள் இயக்கம் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.
சிறிலங்கா அரசு தொடர்ந்தும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றது. அண்மையிலும் கூட இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்களின் மீது வானூர்தி குண்டுவீச்சுக்களை நடாத்தியிருக்கின்றது. இத்தனை அநியாயங்களைச் சிங்களம் மேற்கொண்டு வரும் நிலையிலும் அனைத்துலகம் இன்னமும் சிங்களத்தின் பக்கமே நிற்பதற்குக் காரணம் என்ன?
சிங்கள அரசு செய்து வரும் தமிழின அழிப்பிற்குச் சில நாடுகள் உதவி வருகின்றன என்பது எல்லோரும் அறிந்ததே. நீதி, நியாயம், தர்மம் என்பவற்றிற்கு முரணாக ஒரு இன அழிப்பு அரசுக்கு இந்த நாடுகள் முண்டு கொடுப்பது தமிழ் மக்களுக்கு வேதனையையும் கோபத்தையும் கொடுக்கின்றது.
எமது விடுதலைப் போராட்டம் பற்றியும், புலிகள் இயக்கம் பற்றியும் சிங்கள அரசு கூறும் பொய்ப் பிரச்சாரத்தை ஒருதலைபட்சமாக நம்புவதன் விளைவே மேற்குறித்த செயற்பாடுகளாகும். இதுபற்றி மீண்டும் மீண்டும் உலக நாடுகளுக்கென பல விளக்கங்களை, வேண்டுகோள்களை விடுத்து வருகின்றோம்.
பல நாடுகள் எமது குரலுக்குச் செவிசாய்த்துச் சிங்கள அரசுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியுள்ளன. ஆயினும் சில நாடுகள் சிங்கள அரசின் வலையில் சிக்குண்டு தமிழின அழிப்பிற்கு உதவுகின்றன.
"சிங்களத்தின் இராணுவ வெற்றிகள் பற்றிய கனவுகள் நிச்சயம் கலையும்" எனத் தேசியத் தலைவர் தனது மாவீரர் நாள் உரையில் தெரிவித்திருந்தார். அதன் அர்த்தமென்ன?
இராணுவ வெற்றி பற்றிய சிங்களத்தின் கனவு அதன் கூடப்பிறந்த குணமாகவே உள்ளது. ஒரு இராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டு கனவு காண்பதும் பின்னர் அந்தக் கனவு கலைந்து இராணுவத் தோல்விக்குள் சிக்குவதும் கடந்தகால உண்மைகளாகும்.
இப்போதும் அத்தகையதொரு இராணுவ வெற்றி பற்றிய கனவில் சிங்கள தேசம் ஆழ்ந்துள்ளது. தக்க நேரத்தில் சிங்களத்தின் இராணுவத் திமிருக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்.
அண்மைக்காலமாகத் தமிழ்நாட்டில் ஏற்பட்டுவரும் எழுச்சி மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றது. இந்த எழுச்சி தமிழ் மக்களின் விடுதலையை எவ்வகையில் விரைவுபடுத்துமென நினைக்கின்றீர்கள்?
ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டுத் தமிழ் மக்களின் ஆதரவு ஒரு முக்கியமான விடயமாகும். நாம் தனித்து விடப்படவில்லை உலகத் தமிழர்கள் எம்முடன் உள்ளனர் என்ற உணர்வே எமக்குச் செயல் வேகத்தையும் உற்சாகத்தையும் தரவல்லன.
தமிழ் நாட்டின் இனவெழுச்சி சிங்களத்திற்கு அச்சமூட்டக்கூடிய வகையிலேயே உள்ளது. அத்துடன், அரசியல் ரீதியாக உலக அபிப்பிராயத்தை எம்பக்கம் திருப்பத் தமிழ்நாட்டின் இனவெழுச்சி உதவும். தமிழ்நாடு சட்டசபையில் எமது மக்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட அனைத்துக் கட்சித் தீர்மானம் எமது விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரமாகவும் உள்ளது.
இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவது தொடர்பில் விடுதலைப் புலிகள் தற்போது அதிக அக்கறை கொண்டுள்ளதைப் போன்று தென்படுகின்றது. அதேவேளை, இது சிலரால் பலவீனத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகின்றதே?
ஈழத் தமிழருக்கும் இந்தியாவிற்குமான உறவு ஒரு வரலாற்று உறவாகும். இடையில் சிங்களத்தின் சதியால் அந்த உறவு அறுந்திருந்தது. மீண்டும் அந்த உறவைக் கட்டியெழுப்பும் புறச்சூழல் இருதரப்பிலும் ஏற்பட்டு வருகின்றது. இந்த இருதரப்பு உறவைச் சிங்கள இனவாதிகள் விரும்பவில்லை. எனவே, இந்த முயற்சியை கொச்சைப்படுத்தி திருப்தி காண முயல்கின்றனர்.
அண்மையில் மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலால் இந்தியாவின் அரசியல் சூழலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் இதன் பாதிப்பு மேலும் உணரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப் புதிய சூழ்நிலை தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்துமென எதிர்பார்க்கின்றீர்கள்?
மும்பாய் மீதான குண்டுத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தியாவின் பாதுகாப்பிற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான ஒரு சீரழிப்பு முயற்சியே அது. குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளை இந்தியப் புலனாய்வுத்துறை கண்டறிந்துள்ளது.
இந்தியாவிற்கு எதிராகச் சில நாடுகள் திரைமறைவில் செயற்படுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான அந்தப் பகைமை நாடுகளுடன் சிங்கள அரசு உறவு பேணி வருகின்றது என்பது வெளிப்படை. இது இந்திய இராஜதந்திரிகளுக்கும் நன்கு தெரியும்.
ஒரு இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழம் போராடுகின்றது. இதுவொரு விடுதலைப் போராட்டம் காலங்காலமாக அடக்கப்பட்ட இனங்கள் விடுதலை கோரிப் போராடுவது வரலாற்று வழமை. தமிழீழ மண்ணில் தமிழரின் நலன்களை முன்வைத்து எமது போராட்டம் நடக்கின்றது.
அண்மையில் வன்னியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக எத்தகைய பாதிப்புக்கள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின் நிலை தற்போது எவ்வாறு உள்ளது?
இம்முறை வெள்ள அனர்த்தம் ஏறக்குறைய ஆழிப்பேரலையை நினைவூட்டும் அளவிற்கு அழிவுகளை சேதங்களைக் கொடுத்துள்ளது. அதுவும் இடம்பெயர்ந்த மக்கள் அதிகளவில் வாழும் வன்னியில் விளைவுகள் கடுமையாகவே இருக்கின்றன.
வன்னியில் வாழும் மக்களில் ஏறக்குறைய எண்பது வீதம் மக்கள் இந்த வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான இடர் நிவாரண உதவிகளைச் சிங்கள அரசு அனுமதிக்கவில்லை.
இப்போது வெள்ளம் வடிந்து விட்டது, ஆயினும் அம்மக்களிற்கான நிவாரண உதவிகள் சரியாகக் கிடைக்கவில்லை. போருக்கும் முகங்கொடுத்தபடி இந்த இடர் நிவாரணப் பணிகளில் எமது இயக்கத்தின் கட்டமைப்புகளே பெரிதும் ஈடுபட்டுள்ளன.
வன்னிக்குத் தொடர்ந்து உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதாக அரசு கூறி வருகின்றது. ஆனால், எமக்குக் கிடைக்கும் செய்திகளோ அங்கு மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. உண்மையில் அங்கு போதுமான உணவு இருக்கிறதா? தமிழ்நாட்டில் சேகரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட பொருட்கள் வந்து சேர்ந்துவிட்டனவா?
வன்னி மீது சிங்கள அரசு ஒரு பொருண்மியத் தடையை இறுக்கமாகக் கடைப்பிடிக்கின்றது. உணவு, மருந்து மற்றும் விவசாய, மீன்பிடி உள்ளீடுகளை அனுமதிக்கவில்லை. இதனால் உணவிற்கும் தட்டுப்பாடு, மருந்திற்கும் தட்டுப்பாடு, எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
உலகத் தொண்டு நிறுவனங்களையும் சிங்கள அரசு வெளியேற்றியதால் நெருக்கடி அதிகரித்துள்ளது. சிங்கள அரசும் உதவிப் பொருட்களை அனுப்பவில்லை. உலகத் தொண்டு நிறுவனங்களையும் அனுப்ப அனுமதிக்கவில்லை. ஒப்புக்காகச் சிறிதளவு பொருட்களையே அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாட்டின் உதவிப் பொருட்களில் ஒரு பகுதி எமது மக்களை வந்தடைந்துள்ளது. இப்போது வன்னியில் மோசமான உணவுத் தட்டுப்பாடு நிலவுகின்றது. இது மேலும் அதிகரித்துச் செல்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.
தாயகத்தில் நிலவும் சூழ்நிலைகள் காரணமாக புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவிதச் சோர்வு ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. அந்த மக்களுக்குக் கூறவிரும்பும் செய்தி என்ன?
சோர்வு என்பது அவநம்பிக்கையால் வருவது. அவநம்பிக்கை என்பது நிலைமைகளைப் பகுத்தாய்ந்து புரிந்து கொள்ளாமையால் வருவது. ஒரு இராணுவ நெருக்கடி தாயகத்தில் நிலவுகின்றது என்பது உண்மைதான். ஆனால், மீளமுடியாத நெருக்கடி என்று அதைக் கருதுவது தவறு. இதைவிடப் பாரிய நெருக்கடிகளை முன்னர் நாம் சந்தித்து மீண்டிருக்கின்றோம்.
தற்போதைய நெருக்கடியையும் தகர்த்தெறிந்து வெற்றி கொள்வோம். புலம்பெயர் மக்கள் தமது வழமையான போராட்டப் பணிகளில் உற்சாகத்துடனும் வேகத்துடனும் செயற்பட வேண்டும்.
உங்களது நிதிப் பங்களிப்பு எங்கள் போராட்டத்தின் முதுகெலும்பாகவே உள்ளது. உலக அரங்கில் நீங்கள் செய்யும் பரப்புரைப் பணியை மேலும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்யுங்கள் வெற்றி தரும் மகிழ்ச்சியை விரைவில் நாங்கள் அனுபவிப்போம்.
வன்னியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களுக்குப் புலம்பெயர் தமிழ் மக்கள் எத்தகைய உதவிகளை நல்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?
இடம்பெயர்ந்த மக்களுக்கான இருப்பிடங்களை அமைப்பதும், உணவு, மருந்து ஏற்பாடுகளைச் செய்வதும், கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் எமது தலையாய பணிகளாக உள்ளன.
இப்பணிகளை ஆற்றப் பெருந்தொகை நிதி தேவை. இதை எமது புலம்பெயர் உறவுகளே வழங்கி உதவ வேண்டும். ஏற்கெனவே நீங்கள் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றீர்கள் தொடர்ந்தும் இந்த உதவிகளை உங்களது தாயகத்து உறவுகள் எதிர்பார்த்திருக்கின்றனர் என்றார் அவர்.
http://www.swissmurasam.net/news/breakingn...2-17-48-36.html
0 விமர்சனங்கள்:
Post a Comment