உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்து பரிசீலிக்கத்தயார் - இரா.சம்பந்தன்
உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப் படையிலான தீர்வு அமைந்தால் பரிசீலிக்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கேசரி வார இதழுக்கு வழங் கிய செவ்வியில் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகளைத் தனிமைப்ப டுத்த வேண்டிய அவசியமில்லை. அரசியல் தீர்வு உருவாகினால் விடுதலைப்புலிகளும் அதில் பங்கு கொள்ளலாம் என்று தெரிவித்த அவர், ஆயுதங்களைக் கீழே வைப்பதற்கு காலம் நேரம் உருவாக வேண்டும் என்றும் தெரிவித்தார். அவர் கேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வியின் முழு விபரம் வருமாறு;
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து விட்டே தீர்வை முன் வைப்போம் என அரசாங்கம் கூறுகிறது. விடுதலைப் புலிகளின்றி முழுமையான தீர்வை காண்பது சாத்தியமா?
பதில்: அரசாங்கத்தின் கருத்தை முற்று முழுதாக நிராகரிக்கிறோம். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இன்றுவரை இந்த அரசாங்கம் அரசியல் தீர்வு சம்பந்தமாக உண்மையாக நியாயமான முறையில் நடந்து கொள்ளவில்லை. உதாரணமாக, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவால் சர்வகட்சி மாநாட்டுக்கு சமர்பிக்கப்பட்ட ஆலோசனைகள் தற்போது குப்பையில் போடப்பட்டுள்ளன.
சில கட்சிகள் அந்த ஆலோசனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தபடியால் இடைக்கால நிர்வாகம், இடைக்கால ஒழுங்கு என அரசாங்கம் நிறைவேற்ற முயற்சிக்கின்ற 13 ஆவது அரசியல் சாசன திருத்தத்தை உண்மையிலேயே சர்வகட்சி மாநாடு சிபா?சு செய்யவில்லை. அது ஜனாதிபதியால் சர்வகட்சி மாநாட்டு தலைவர் மீது திணிக்கப்பட்ட ஒரு விடயம்.
அதனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நாங்கள் உன்னிப்பாக பார்க்கும் பொழுது ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து அவர்கள் தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக் கொள் ளக்கூடிய ஒரு நியாயமான நிரந்தரத் தீர்வை முன் வைப்பதற்கு அவர்கள் தாயாராக இல்லை.
அந்த உண்மையான எண்ணம், விருப்பம், சிந்தனை அவர்களுக்கு இல்லை என்பதுதான் எங்களுடைய முடிவு. அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஓரங்கட்டி விட்டு அரசியல் தீர்வை வைப்போம் என்று கூறுவதை தமிழ் பேசும் மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மற்றது, அரசாங்கம் பிரதேசங்களை கைப்பற்றினாலும் தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாக இலகுவாக ஓரம் கட்டலாம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம்.
ஆகவே இது சாத்தியமான விடயம் அல்ல.
கேள்வி: தமிழ் நாட்டின் தற்போதைய எழுச் சியை இலங்கையின் தமிழ் அரசியல் தலைமை கள் எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டுடும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: தமிழ்நாட்டில் எழுச்சி ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தமிழ் நாட்டு மக்கள் இந்த அரசாங்கம் சமாதானமான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கு இந்த நாட்டில் ஒரு முறையான அரசியல் அந்தஸ்தை வழங்காது என்பதை அவர்கள் நன்கு உணர்கிறார்கள். இரண்டாவது விடயம் இலங்கை அரசாங்கம் தமிழர்களுடைய பிரச்சினையை இராணுவ ரீதியாக தீர்ப்பதற்கு கடும் முயற்சியுடனேயே இந்த யுத்தத்தை நடத்துகின்றது. உண்மையிலேயே தற்போது இலங்கையில் நடைபெறுவது ஒரு இனப்படுகொலை என்று தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள்.
இந்தக் காரணத்தினாலேயே தமிழ்நாட்டில் இவ்விதமான எழுச்சி ஏற்பட்டு பல மட்டங்களில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஊடகவிய லாளர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் நடிகர்கள் என பல மட்டங்களில் போராட்டங்கள் இன்று மிகவும் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. இவர்களது நோக்கம் இந்த யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து நல்லதொரு அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதே.
நாங்கள் இந்த நாட்டினுடைய பூர்வீக குடி மக்கள். நாங்களும் இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களைப் போல மிகவும் நீண்ட காலமாக வாழ்ந்து வந்திருக்கின்றோம்.
நாங்கள் ஒரு காலத்தில் எங்கள் பிரதேசங்களை ஆட்சி செய்தோம். நாங்கள் அன்னியர்கள் அல்ல. எங்களுடைய ஆட்சி இல்லாமல் போனது, இழந்தது அந்நிய நாடுகளிடம் வெவ்வேறாக இருந்த இலங்கைப் பிரதேசங்களை ஒன்றாக இணைத்தவர்கள் ஆங்கிலேயர்கள்.
இது 1833 ஆம் ஆண்டு நடைபெற்றது.
ஆகவே நாங்கள் கூறுகின்றோம், நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் நாங்கள் பெரும்பான்மையாக மிகக்கூடிய பெரும்பான்மையாக ஒரு கால கட்டத்தில் இருந்தோம். அந்த பிரதேசங்களில் எங்களுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்று நாங்கள் கேட்கின்றோம். அது ஒருமித்த நாட்டுக்குள் இருக்கலாம். அதனை நாங்கள் உதாசினம் செய்யவில்லை. ஏனெனில் இன்று சர்வதேசமுகம், நாடுகள் பிரிவதை விரும்பவில்லை.
இந்தியா கூட விரும்பவில்லை. ஆகவே உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் எமக்கொரு தீர்வை தருவதற்கு அரசாங்கம் முன்வந்தால், அதனை நாங்கள் பரிசீலித்து ஏற்கலாம். அவ்விதமான ஒரு தீர்வை தராமல் எங்களை ஏமாற்றி இராணுவ ரீதியாக இப்பிரச்சினைக்கு தீர்வை காணலாம் என அரசாங்கம் நினைத்தால் அதனை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்விதமாக ஒரு நிகழ்வு ஏற்படுமாக இருந்தால் தமிழ்நாட்டில் தற்போது உருவாகி இருக்கின்ற நிலைமை தொடர வேண்டும். தொடரும் என்பதே எங்களுடைய கருத்து.
கேள்வி: 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான தீர்வு சாத் தியமற்றது என கூறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான தீர்வை எதிர்பார்க்கிறது?
பதில்: 13 ஆவது அரசியல் சாசன திருத்த சட்டத்தின்படியான தீர்வை ஒரு போதும் ஏற்க முடியாது என்பது எங்களுடைய நெடுங்கால கருத்து. அந்த சட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே அது விடயம் தொடர்பாக காலஞ்சென்ற இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக கூறி இருந்தோம். இன்று உலகத்தில் பல நாடுகளில் பலவிதமான அரசியல் முறைமைகள் உள்ளன. உதாரணமாக, கனடாவில் வெவ்வேறான மொழிகளை பேசுபவர்கள் இருக்கிறார்கள். வெவ்வேறு கலாசாரங்களை பின்பற்றுகின்ற மக்கள் வாழ்கிறார்கள்.
அங்கே அந்த மக்களுடைய தனித்துவத்தை அங்கீகரித்து, மொழி உரிமையை அங்கீகரித்து அந்த மக்களுடைய அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்து ஒரு அரசியல் முறைமை அரசியல் சாசனம் உள்ளது.
இந்தியாவில் பிரிவினை ஏற்பட்ட பின்னர் அரசியல் சாசனம் உருவாகி இருந்தாலும் கூட ஒரு அரசியல் சாசனம் இருக்கின்றது. இப்படி பலவிதமான உதாரணங்கள் உலகத்தில் இருக்கின்றபோது அவை அனைத்தையும் தூக்கி ஒரு புறம் வைத்து விட்டு, ஒரு முழுமையான முறையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு அடிப்படையில் கிள்ளித் தருவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அரசியல் தீர்வை காண்பதற்கு விசுவாசமாக செயற்படாமல் நாங்கள் பிரச்சினையை தீர்த்து விட்டோம் என்று கூறுவதற்காக தமிழர்களுக்கு எதனையும் கிள்ளித் தந்து இந்த பிரச்சினையை தீர்க்கலாம் என்று அரசு நினைக்கக் கூடாது. அது ஒரு போதும் நடைபெறாது. நடைபெற முடியாது.
கேள்வி: தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் நீங்களும் நினைப்பது போல சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களுக்கு தீர்வை தருவார்களா?
பதில்: அவர்கள் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்று தருவதில் உடன்பட வேண்டும். சர்வதேச சமுகம், விசேடமாக இந்தியா அவர்களை ஒத்துவர செய்ய வேண்டும். சர்வதேச மரபுகளை எந்த நாடும் முழுமையாக உதாசீனம் செய்ய முடியாது. இந்த நாட்டில் சமாதானம் நிலவ வேண்டுமென்றால், இந்த பிராந்தியத்தில் சமாதானம் நிலவ வேண்டுமென்றால் மக்களுக்கு நீதி நியாயத்தின் அடிப்படையில் ஆட்சி வசதி அமைய வேண்டும். அதனை எவரும் நிராகரிக்க முடியாது. இலங்øகயிலே தமிழர்களுக்கு ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வை கொடுப்பதற்கு இலங்கை அரசு மறுக்கின்றபோது சமாதானம் சீர்குலைகிறது. சமாதானம் சீர்குலைகிறது. சமாதானம் இன்மை, அமைதி இன்மை இலங்கையில் மாத்திரம் ஏற்படவில்லை. பிராந்தியத்தில் ஏற்படலாம்.
இதனை ஒரு உதாரணமாக வைத்து உலகத்தின் பல பகுதிகளில் ஏற்படலாம். இன்று தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு இலங்கை நிலைமையின் காரணமாகவே.
எனவே இந்த வியாதி நிலைமை வேறு இடங்களுக்கும் பரவலாம். இலங்கையை உதாரணமாகக் கொண்டு வேறு நாடுகளிலும் இவ்வாறான நிலைமை ஏற்படலாம். ஆகையால் இவ்விதமாக சமாதானத்தை, அமைதியை குழப்புவதற்காக யாரும் பிடிவாதமாக இருந்தால் நியாயமான முறையில் அவ்விடயத்தில் சர்வதேச சமுகம் தலையிட்டு அதை தீர்க்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது.
சுயநிர்ணய உரிமை என்பது மக்களுடைய பிறப்புரிமை, மக்களுடைய மனித உரிமை.
அதனை எவரும் மறுக்க முடியாது. எனவே சுயநிர்ணய உரிமை மறுக்கப்படும் போது அது விடயம் தொடர்பாக சர்வதேச சமூகம் நீண்ட காலத்திற்கு அமைதியாக இருக்க முடியாது.
கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமை பற்றி உங்கள் கருத்து?
பதில்: அது பற்றி தெளிவாக எதுவும் தெரியாது. ஆனால் எங்களுடைய சில எம்.பி.க்கள் அவர்களுடைய வெளிநாட்டு விஜயங்களின் போது அவர்கள் தங்களுடைய பேச்சுக்களில் கூறிய சில கருத்துக்களை அடிப்படையாக வைத்து அரசாங்கத்தினுடைய பாதுகாப்பு அமைப்புகள் நடவடிக்கை எடுக்க முயல்வதாக நாங்கள் அறிகிறோம். அது பற்றி முழுமையான விபரங்கள் எங்களுக்குத் தெரியாது. எங்களுடைய எம்.பி. மார்கள் அப்படி தவறாக பேசி இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. அவர்கள் தங்களுடைய கருத்துக்களை துணிவாக, தெளிவாக கூறி இருக்கலாம்.
""இலங்கையில் தமிழர்களுக்கு ஒன்றையும் கொடுக்க முடியாது. இங்கு இனப்பிரச்சினை இல்லை. எதற்கு அரசியல் தீர்வு?'' என்று ஜே.வி.பி., ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் பேசுகின்றபொழுது, இவற்றை அரசாங்கம் பார்த்துக் கொண்டு மௌனம் சாதிக்கும்பொழுது, ஒரு அரசியல் தீர்வை காண்பதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வ மாக செயற்படாதபோது, தமிழ் மக்களை பிர திநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப் பினர்கள் உலக நாடுகளில் தங்களுடைய கருத்துக்களை கூறும்பொழுது, இதனடிப்ப டையில் இவ்வாறான நிலைமைகள் தொடரு மாக இருந்தால் அதனுடைய விளைவுகள் எவ்வாறு அமையும் என்பதை பற்றி அவர்கள் சில கருத்துக்களை கூறி இருக்கலாம். அதனடிப்படையில் பேசி இருக்கலாம். அது அவர்களுடைய பேச்சு சுதந்திரம். ஆகவே அவர்கள் பொம்மைகள் அல்ல. எனவே இவை நீதிமன்றங்களில் தீர்மானிக்க வேண்டிய விடயங்கள்.
உரிய காலத்தில் அது விடயம் தொடர்பாக என்ன செய்ய வேண்டுமோ அதனை நாம் செய்வோம்.
கேள்வி: தனி நபர் கருத்து சுதந்திரம் உள்ள போது தமிழீழம் பற்றி பேசுவது தவறென கூறுவது சரியா?
பதில்: இது தவறானது. நாங்கள் நாட்டு சட்டத்தை மீறக்கூடாது. அதனை நாங்கள் மறக்கவில்லை. அதே சமயத்தில் உண்மையை பேசுவதற்கு தயங்க வேண்டிய அவசியமில்லை.
நாட்டு சட்டம் உண்மையை பேசுவதற்கு தடை விதிப்பதாய் எவரும் கூற முடியாது. இலங்கையில் தமிழருடைய பிரச்சினை தொடர்பாக பிரச்சினையே இல்லை என கூறுவதற்கு பகிரங்கமாக குரல் எழுப்புகின்ற பொழுது அது ஏன் பிழை, அவ்வாறான நிலை தொடர்ந்தால் விளைவு எவ்வாறானதாக இருக்கும் என்று பேசுவதை குற்றமென கருத முடியாது.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. க்கள் அனைவரும் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக வதந்திகள் பரவிவி வருகிறதே இது உண்மையா?
பதில்: அவ்விதமானதொரு கலந்துரையாடலோ சிந்தனையோ எங்கள் மத்தியில் தற்போதைக்கு இல்லை.
கேள்வி: அரசாங்கம் தமிழ் மக்களை விடுவிப்பதாக கூறி மக்களை முகாம்களில் வைத்து ள்ளதே, இது பற்றி உங்கள் கருத்து?
பதில்: மக்களை விடுவிக்கின்றது என்ற கருத்துத் தொடர்பாக நான் மிக தெளிவாக நாடாளுமன்றத்தில் பேசி இருக்கின்றேன். சர்வதேச சமுகம் கூட சமீபத்திய அறிக்கைகளில் இது விடயம் தொடர்பாக தமது கருத்துக்களை கூறி இருக்கிறார்கள். இது ஒரு போலி நாடகம். மக் களை விடுவிப்பதென்றால் அதன் அர்த்தம் மக்களை கொலை செய்வது, மக்களை காயப்படுத்துவது, மக்களின் சொத்துக்களை அழிப்பது, மக்களை குடிபெயரச் செய்வது மக்களை நிர்க்கதியாக்குவது, மக்கள் உணவின்றி உடையின்றி, இருப்பிடமின்றி, மரங்களின் கீழ் வாழ்வது இதுதானா விடுதலை. ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஐப்பசி மாதம் 26 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்று ஒரு வாக்குறுதியை கொடுத்தார். தாங்கள் யுத்தத்தை நடத்துகின்ற பொழுது தமிழ் மக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாமல் யுத்தத்தை ?ன்னெடுப்போம் என்று. ஆனால் அவர் திரும்பி வந்த பின்னர் தொடர்ச்சியாக விமான குண்டுத் தாக்குதல்கள், எறிகணை தாக்குதல்கள், ஆழ ஊடுருவும் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது யுத்தமல்ல இனப்படுகொலை.
கேள்வி: வன்னி மக்கள் சோமாலியர்களைப் போல அல்லல்படுவதாக ஐ.நா. அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளமை குறித்த உண்மை நிலவரம் என்ன?
பதில்: அங்கு மக்களுடைய நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளது. ஒரு விதமான வசதிகளுமில்லை. மலசல கூடங்களோ, சுத்தமான குடிநீரோ இல்லை. உணவுத் தட்டுப்பாடு உள்ளது. வதிவிட வசதிகள் எதுவுமில்லை. வதிவிட வசதிகளை ஏற்படுத்துவதற்கு எடுத்து செல்லும் பொருட்களைகூட புலிகள் தங்களுக்கு பயன்படுத்தி கொள்வார்கள் எனக்கூறி இராணுவம் தடை செய்கிறது. இவ்வாறான நிலைமையில் மக்கள் மர நிழல்களில் வாழ்கின்றார்கள். மக்கள் சாக்குகளை பிரித்து மர கொப்புகளில் கட்டி அந்த நிழலில் வாழ்கிறார்கள்.
இது தொடர்பாக சர்வதேச அமைப்புகள் கூட தமது அறிக்கைகளில் தெரிவித்து இருக்கின்றன. எனவே அம்மக்களுடைய நிலைமை மிக மோசமாகவே உள்ளது.
கேள்வி: இந்திய பிரதமருக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு தள்ளிக் கொண்டே போகிறது. இதன் காரணம் என்ன? அச்சந்திப்பு எப்போது நடைபெறும்?
பதில்: இந்தியப் பிரதமர் சார்க் மாநாடுக்கு இலங்கை வந்திருந்தபோது, அவரை நாங்கள் சந்தித்தோம். அது ஒரு நல்ல சந்திப்பு. நீண்ட நேரம் இல்லாவிட்டாலும் எங்களுடைய கருத்துக்களை அவருக்கு தெளிவாக கூறுவதற்கு அது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. அவரும் எங்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார். அதற்கு முன்பதாக அவரை நாங்கள் புதுடில்லியில் சந்தித்தோம். அதன் பின்னர் அவரே எம்மிடம் கூறினார், நாங்கள் மறுபடி புதுடில்லியில் சந்திப்போம் என்று. அந்த கொள்கை கைவிடப்படவில்லை. பல்வேறு காரணங்கள் நிமித்தம் சந்திப்பு பின்போடப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் அணு ஒப்பந்தம் சம்பந்தமான சர்ச்சை. இப்படி தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களால் சந்திப்பு இடம்பெறவில்லை. அது இடம்பெறும்.
கேள்வி: பிரணாப் முகர்ஜியின் வருகையால் யுத்த நிறுத்தம் சாத்தியமாகுமா? இவ்விஜயத்தில் என்ன பயன் கிட்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்: அது விடயம் தொடர்பாக கருத்துகள் கூற நான் தயாராக இல்லை. ஆனால் நான் ஒன்றை மட்டும் தெளிவாக கூறுகிறேன். தமிழீழம் மீது தற்போது நடைபெறுகின்ற இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டுமாக இருந்தால் யுத்தம் தொடரக்கூடாது. அதை நாங்கள் தெளிவாக கூறுகிறோம். வன்னியில் தமிழ் மக்கள் தற்போது அனுபவிக்கின்ற துன்பங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதாக இருந்தால் யுத்தம் தொடர முடியாது. யுத்தம் தொடருமாக இருந்தால் இனப்படுகொலை தொடரும். அதனை நாங்கள் தெளிவாக திட்டவட்டமாக கூறுவோம். ஆகவே இலங்கை அரசாங்கம் எவ்விதமான முடிவை எடுக்குமென கூற முடியாது.
அவர்கள் எடுக்கின்ற முடிவுகளால் மேலும் பல விளைவுகள் ஏற்படலாம்.
கேள்வி: சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்க்க வேண்டும் என பேசப்படுகிறதே. த.தே. கூட்டமைமப்பு அதில் பங்குபற்ற உத்தேசித்துள்ளதா? பங்குபற்ற வாய்ப்புள்ளதா?
பதில்: சர்வகட்சி மாநாட்டுக்கு இன்றுவரை எங்களுக்கு அழைப்பு வரவில்லை. ஜனாதிபதி சிங்கள தரப்பில் ஒரு ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சர்வகட்சி மாநாட்டுக்கு அழைப்பேன் என முடிவு எடுத்துள்ளார். அது எமக்கு நன்கு தெரியும். எங்களுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. ஆனால் சர்வகட்சி மாநாடு தற்போது ஒரு பிணம். ஒரு உயிரில்லா உடல். அதன் மூலம் எதுவும் ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஒரு பிணத்திற்கு உயிர் கொடுப்பதற்காகவும் அரசாங்கத்தினுடைய இயலாமையை அவர்களுடைய பிடிவாதத்தில் இருந்து அவர்களை மீட்பதற்காகவும் சர்வகட்சி மாநாட்டில் ஒரு போதும் பங்குபற்ற மாட்டோம். எங்களுக்கு நன்கு தெரியும்.
இன்று அது உயிரிழந்து, வலுவிழந்து போயிருக்கின்ற ஒரு அமைப்பு. பிறகேன் அதற்கு உயிர் கொடுக்க வேண்டும். கொன்றவர்கள் அரசாங்க தரப்பினர். இவ்விதமான சூழ்நிலையில் நாங்கள் அதில் பங்குபற்றுவது அர்த்தமற்ற ஒரு விடயம். எங்களுடைய சுயமரியாதைக்கு மாறான ஒரு விடயமாக இருக்கும். எனவே அந்த நிலைக்கு நாங்கள் ஒரு போதும் ஆளாக மாட்டோம்.
கேள்வி: புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தாலே பேச்சுவார்த்தை என அரசாங்கம் கூறுவது குறித்து?
பதில்: ஆயுதம் கீழே வைப்பது என்பது ஒரு நிரந்தரமான சமாதானம் ஏற்படும்போது நடைபெறுகின்ற ஒரு விடயம்தான். அது ஒரு புது விடயம் அல்ல. ஆனால் ஆயுதம் எப்போது கீழே வைக்கப்பட வேண்டும், என்ன சூழ்நிலையில் கீழே வைக்கப்பட வேண்டும் என்பது வேறொரு விடயம். உதாரணமாக, அயர்லாந்தில் புரட்சி செய்தவர்கள் ஆயுதங்களை கீழே வைத்தார்கள். ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு தீர்வு ஏற்பட்டு அந்த தீர்வை அந்த நாட்டு மக்கள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரித்து அந்த தீர்வை அமுல்படுத்துவதற்கு ஒழுங்குகள் செய்த பிறகு, பயங்கரவாதம் சம்பந்தமாக இருந்த ஒழுங்குகளில் மாற்றம் வந்த பின்னர் ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே வைப்பார்கள். சமாதானம் ஏற்பட ஆயுதங்கள் கீழே வைக்கப்பட வேண்டும் என்பது உண்மை. அதனை எவரும் மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த ஆயுதங்கள் எப்போது கீழே வைக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமான கேள்வி.
ஆயுதங்களை கீழே வைக்க ஒரு காலம், நேரம் உருவாக வேண்டும். அரசு பிரச்சினையை தீர்ப்பதற்கு எவ்விதமான முயற்சியும் எடுக்காமல், ஆயுதங்களை கீழே வைக்கும்படிகேட்பது தங்களுடைய வசதிக்காக கேட்பதே தவிர, பிரச்சினையை தீர்ப்பதற்காக முன்வைக்கின்ற ஒரு கோரிக்கை அல்ல. ஆகவே இவ்விடயம் தொடர்பாக புலிகள்தான் தீர்மானம் எடுக்க வேண்டும்.
கேள்வி: அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலம் புலிகளை தனிமைப்படுத்த, பலவீனப்படுத்த முடியும் என அமெரிக்க தூதுவர் அடிக்கடிடி கூறி வருகிறார். இதனை நீங்கள் எப்படி நோக்குகிறீர்கள்?
பதில்: புலிகளை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வு உருவாகினால் எல்லோரும் அதில் பங்குபற்றி கொள்ளலாம். புலிகளும் பங்குபற்றி கொள்ளலாம்.
அவ்விதமானதொரு தீர்வு ஏற்படாத காரணத்தின் நிமித்தம்தான் புலிகள் உருவாகினார்கள்.
மிதவாத தலைவர்களின் காலத்தில் அவ்விதமானதொரு தீர்வு ஏற்பட்டிருந்தால் புலிகள் உருவாகி இருக்க மாட்டார்கள்.
மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இலங்கை அரசுக்கு முடியுமென்றால் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும்.
கா. பொன்மலர்
வீரகேசரி வார இதழ் 14.12.08
0 விமர்சனங்கள்:
Post a Comment