பிறக்கின்ற புத்தாண்டு என்ன ஆண்டு ?
சிந்தனைச் செல்வர் எழிலன்
எல்லாருக்கும் நீதியும் எல்லாருக்கும் அமைதியும் எல்லாருக்கும் சுதந்திரமும் எல்லாருக்கும் நிம்மதியும் எல்லாருக்கும் மகிழ்ச்சியும் எல்லாருக்கும் நற்சுகமும் எல்லாருக்கும் வாய்ப்புகளும் எல்லாருக்கும் எல்லா நலமும் எல்லாருக்கும் இறை துணையும் கிட்டி எல்லாருக்கும் இனிதான,நலமான, வளமான புத்தாண்டாக 2009 அமைய வேண்டும் என்பதைத்தான் நல்ல எண்ணம் கொண்ட எல்லாருமே நினைத்து வாழ்த்துச் சொல்வார்கள் என்பதனால் முதன் முதலில் எனது இதயந்திறந்து மேற்சொன்ன அனைத்தும் கிடைக்க வேண்டுமென புத்தாண்டு வாழ்த்தினைச் சொல்லிக் கொள்கிறேன்.
மணம் வீசும் மல்லிகையாய் நம் மனித மனங்கள் குணவியல்பில் மணம் வீசும்படி மலரட்டும். நீங்கள் அனைவரும் வாழ்க!
wish you all a bright 2009!
இனி சற்று சிந்தனையைச் சற்றுச் சுழல விட்டுப் பார்ப்போம்.
நாமெல்லாரும் நல்ல , பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்கின்ற படியினால் மார்கழி31 ஆம் திகதி நள்ளிரவு நகன்றதுமே நடுவானத்தில் வெடித்துச் சிதறி, ஒளி வெள்ளத்தில் வண்ணங்களையும் பலவகை வடிவங்களையும் பலவித ஓசைகளையும் அள்ளி வழங்குகின்ற பட்டாக்களின்பால் எத்தனை ஈர்ப்பும் ஆர்வமும் ஆவலும் மகிழ்ச்சியுமாக இருக்கின்றன! அதே சமயத்தில் உலகத்தின் பிசாசுகளும் பூதங்களும் அரசோச்சும் படுமோசமான பல நாடுகளில் இவற்றையொப்ப விழாவின் மகிழ்ச்சிக்குப் பதிலாக , ஒரே மரண ஓலங்களும் உடல் சிதறிச் சின்னாபின்னப்பட்டுத் துடிதுடித்து மரணிக்கும் அல்லது வாழ்நாளின் இயல்பு நிலையையே இழக்கும் அப்பாவிப் பொது மக்களின் அவலக் குரல்களும் உங்கள் உள்மனங்களில் கேட்கின்றதா?
அந்த உயிர்களின் மேல் கேவலம் , வெறும் சம்பளத்துக்காக குண்டு வீசிக் கொன்றழித்து , அதன் மூலம் பதவி உயர்வுக்காகக் கனவு காணுகின்ற மனித விரோத கீழ்மனம் கொண்ட இன, மொழி, மத வெறித்தனம் மிகுந்த மனிதர்கள் தங்களின் சகமனிதர்களின் அவலங்களைத் தங்களின் விமானங்களிலிருந்து கண்டு குதூகலிக்கின்ற கொடிய காட்சிகளை உணருகின்றீர்களா?
சுட்டுத்தள்ளியும் சுட்டெரித்தும் கடத்தியும் கற்பழித்தும் கப்பம் பறித்தும் கடைகள் உடைத்தும் பொருள் சேர்க்கின்ற கொடுமனத்தோருக்குச் சட்டத்தின் காவலர்களும் ஆள்பவர்களும் பாதுகாவலளித்துக் கையசைப்பதைக் கண்டு , அச்சத்தினால் தாங்கள் நிரந்தரமாகவே ஓர் அடுப்புக்குள் தள்ளப்பட்டு விட்டதைப்போன்று பதறிக் கண்ணீர் வடித்து நிற்கும் வழியற்ற மக்களின் பரிதாப நிலைமையை உங்கள் இதயங்கள் உணர்கின்றனவா?
தேசத் தலைவர்களென்றும் மந்திரிகளென்றும் முதல்வர்களென்றும் ஆதரவாளர்களென்றும் தீமைகளுக்குத் தெரிந்தே துணை போகின்ற பாவிகளுக்கும் பாதகர்களும் கொள்ளைக்காரர்களும் கடத்தல்காரர்களும் அரசியல் இயந்திரத்தின் இயக்குனர்களாக இருந்துகொண்டு, உலகின் எத்தனையோ நாடுகளில் தமது மக்களையே அழித்தொழித்துக் கொண்டு வீரவேச தம்பட்டமடித்துக் கொண்டிருப்பதைக் காண்கின்றீர்களா?
மனித இனத்தின் சகோதரத்துவத்தின் அத்திவாரத்தைத் தகர்த்தழிப்பதையே அரசியல் சாணக்கியமென்றும் விவேகமென்றும் காட்டிக்கொண்டு, தத்தமது சுயநல நோக்கங்களின் வெற்றிகளுக்காகத் தங்களுடன் எதுவித தொடர்புமே அற்றவர்களையும் எதுவித தீங்குகளையும் செய்யாத அப்பாவிகளையும் பச்சைக் குழந்தைகளையும் இளையோர்களையும் , ஏன் அவர்கள் தஞ்சம் புகும் ஆலயங்களையும் மருத்துவ மனைகளையும் பாதுகாவல் தருமில்லங்களையும் கூட அழித்தொழித்து மகிழும் மனித உருப் பிசாசுகளையும் அவர்களின் நண்பர்களையும் உங்களின் மனங்கள் காண்கின்றனவா?
கபடங்களை மூலதனமிட்டு மக்களை வளைக்கின்ற சுயநலக் குணம் நிறைந்த காரியக்காரர்களையும் நீதியோடு சேர்ந்து, நிமிர்ந்து நிற்காமல் தனது நிழலில் நின்று கொண்டு தம்மையும் நீதிக்கான குரலெழுப்புபவர்களாகக் காட்டிக் கொண்டு சமுதாயங்களை ஏய்த்துக் கொண்டிருக்கும் ""நல்ல' பாம்புகளை அடையாளங் காண்கின்றீர்களா?
சட்டமென்று கூறிக் கொண்டு, சட்ட விரோதங்களைக் கட்டிக் காக்கின்ற கண்ணியவான்கள் எங்கேதான் இல்லாமலிருக்கின்றார்கள்? அப்படியானால் நாம் வழங்க விழையும் நல்வாழ்த்தின் பெறுமதி என்ன? அடிப்படை என்ன? உண்மைதானென்ன ? உண்மையாக, பொறுமையாக ஒரேயொரு நிமிடம் மட்டும் ஒதுக்கிச் சிந்தித்துப் பாருங்கள் . அப்போதுதான் மனிதாபிமானம் படும் பாடும் இவர்கள் அதனைப் படுத்தும் பாடும் உங்களுக்குப் புரியும்.
தவறானவர்களின் தவறான வழிகாட்டல்களிலும் திரிபுபடுத்தப்பட்ட விளங்கப்படுத்தல்களினாலும் அதிதந்திரமான அணுகு முறைகளினாலும் பாவங்கள் நியாயங்களாகவும் அடக்குமுறைகள் இறைமையைக் காக்கும் நல்ல நோக்கங்களாகவும் இனவொடுக்கல்களும் இனவழிப்புகளும் பலம் சார்ந்த தீயவர்களின் உரிமைகளாகவும் நீதிக்கான குரலெழுப்பல்கள் பயங்கரவாதங்களாகவும் அநீதியாகத் திரிபுபடுத்தப்பட்டு சனநாயக விரோதிகளை உலகம் சனநாயக வாதிகளாகக் காண்கின்ற புற்று வியாதி உங்களுக்குப் புரியும்.
நாம் மனிதரென்ற தகுதியை உடையவராக இருக்க வேண்டுமெனில் சகமனிதரின் நலனைப் பற்றிச் சுயமாகச் சிந்திக்கும் நமது உரிமையை நாம் உணர்ந்துதான் ஆகவேண்டும் . அவ்வாறின்றேல் நாம் மனிதரே அல்லர், வெறும் மனித உருவங்கள் மட்டுமேதான்,
புத்தாண்டு பிறக்கையிலே உங்களை மனம் நோகச் செய்வதல்ல எனது நோக்கம், உங்கள் மனதைத் தட்டி விட முயல்வது ஒன்றே எனது நோக்கம்.
வாழ்த்துவோம்! வாழ்த்துவோம்! மனம் நிறைந்து வாழ்த்துவோம்! எல்லா நல்ல இதயங்களுக்கும் நாம் விழையும் நன்மைகள் முழுமையாகக் கிடைக்கட்டும். இதர அனைத்தும் கெட்ட இதயங்களும் திருந்த வேண்டி வாழ்த்துவோம்! திருந்தாவிடின் திருத்த வேண்டி இறைவனைப் பிரார்த்திப்போம்!
மறுத்தால்.... அவர்களைத் தண்டித்தாவது திருத்து இறைவா! ஏனெனில் வரும் 2009 ஆம் ஆண்டை மனம் திருந்திய மனிதர்களுக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்த வேண்டிய தேவையில் இந்த உலகம் இருக்கின்றது. நீதான் அதற்கு உதவி செய்ய வேண்டும்.
தமிழமுதம்
0 விமர்சனங்கள்:
Post a Comment