யாழ்ப்பாணத்தில் அயுதம் தாங்கிய அரசியற் கட்சி அலுவலகம் குறித்து ஆனந்தசங்கரி கவலை
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துச் இராணுவச் சோதனைச் சாவடிகளுக்கும் அருகில் ஓர் அரசியல் கட்சியின் காரியாலயம் இயங்கி வருவதன் காரணமாக அங்கு வாழும் தமிழ் மக்களின் நடமாடும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதோடு மட்டுமன்றி குற்றம் செய்தவர்கள் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் வாய்ப்பை அளிப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, அங்கும் இங்குமென ஓர் அரசியல் கட்சி தனது அலுவலகங்களைத் திறக்க வேண்டிய அவசியமில்லையென நான் கருதுகிறேன். அத்துடன் இது பொதுமக்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் ஒரு விடயமுமாகும்.
ஓர் அரசியல் கட்சி தான் வெளியிடும் வாராந்த பத்திரிகையை யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களுக்குப் பலாத்காரமாக விற்பனை செய்து வருகிறது. ஒரு வீட்டுக்குச் சென்று பார்த்தால் ஒரு பத்திரிகையின் மூன்று பிரதிகளைக் கூட அங்கு காணக் கூடியதாகவிருக்கும். ரூபா 30க்கு விற்கப்படும் இந்தப் பத்திரிகைகளை மக்கள் பயத்துக்காகவே வாங்குகின்றனர்.
சந்தேக நபர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதனால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். சிலர் நியாயமற்ற முறையில் தடுத்து வைக்கப்படுகின்றனர். எதுவித குற்றமும் புரியாத அப்பாவி மக்களும் குறிப்பாக பெண்கள் கூட துரதிஷட வசமாகத் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
கடந்த சில வருடங்களாக பொதுமக்கள் பலர் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் உள்ளனர். இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்ட பலர் சட்ட விரோதமா தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே உண்மையான முறையில் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான தகவல்களை பகிரங்கமாக வெளியிட வேண்டுமென நான் உங்களைக் கேட்கிறேன். இதன் மூலம் இனந்தெரியாத நபர்களினால் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை மக்கள் அறியக் கூடியதாகவிருக்கும்.
அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தக் கூடிய இன்னொரு விடயம் என்னவெனில்,வன்னியில் வாழும் மக்கள், விடுதலைப் புலிகளிடமிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகின்றனர். அவ்வாறு வருவோர் தடுத்து வைக்கப்படவோ தொந்தரவுக்குள்ளாக்கப்படவோ மாட்டார்களென அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பியே அவர்கள் வருகின்றனர்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மக்களை அரச படைகள் தொந்தரவுபடுத்துவதாக வன்னயில் புலிகள் பொய்ப் பிரசாரம் செய்த வருகின்றனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்களெனச் சந்தேகிக்கப்படுவோரும் புலிகளிடமிருந்து தப்பி வந்தவர்களென கருதி நிபந்தனைகளுடன் பெற்றோரிடம் கையளிக்கபட்டலாம்.
அவ்வாறு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்பி வருபவர்கள் தடுத்து வைக்கப்படுவார்களேயானால் புலிகளிடமிருந்து தப்பி வர மக்கள் தயங்குவர். ஆகவே இது தொடர்பான தெளிவான அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் எனறு அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment