யுத்தம் சரணம் பாகம் 11
இலங்கைத் தீவு வசமானதுமே பிரிட்டிஷ் அரசு வேலையைத் தொடங்கிவிட்டது. அவர்களது நோக்கம் தெளிவானது. விவசாயத்தைப் பெருக்குவது. அதன்மூலம் வர்த்தகத்தை அதிகரிப்பது. ஒரு தேசத்தைக் கைப்பற்றுவதும் ஆள்வதுமல்ல பெருமை. அதிகபட்சம் அங்கிருந்து என்ன சம்பாதிக்க இயலும்? அதைச் சாதிக்க வேண்டும். அதைத்தவிர வேறொன்றும் முக்கியமல்ல.
மேற்கிந்தியத் தீவுகளில் அதற்கு முன்னால் அவர்கள் காப்பி பயிரிட்டுக்கொண்டிருந்தார்கள். ஜமைக்காவில் சற்று அதிகம். லட்சக்கணக்கான அடிமைகளைப் பயன்படுத்தி, விவசாயம் செய்து கப்பல் கப்பலாக ஏற்றுமதியாகிக்கொண்டிருந்தது. ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்தப் பக்கமெல்லாம் அடிமை முறை ஒழிக்கப்பட்டுவிட, பிரிட்டிஷ் காப்பித் தோட்டங்களில் வேலை பார்க்க ஆளில்லாமல் போனது. காப்பிப் பொருளாதாரம் நலிவடையத் தொடங்க, என்ன செய்து சமாளிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். அப்போது சிக்கியதுதான் சிலோன் என்கிற இலங்கை.
கவனமாகத் திட்டமிட்டு, தமிழகத்திலிருந்து கூலியாட்கள். இன்னும் கவனமாகத் திட்டமிட்டு இலங்கைத் தமிழர்களிலிருந்து வேலை வாங்கும் அதிகாரிகள். மேலும் கவனமாகத் திட்டமிட்டு சிங்களர்களுக்கு திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா.
தலைமன்னாரிலிருந்து கண்டி கூப்பிடு தூரம் என்று சொல்லப்பட்டு நடத்தி அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களில் பலர் வழியில் பசியாலும் நோயாலும் விஷக்கடிகளாலும் இறந்தே போனார்கள். யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு பொற்காலத்தைக் கனவு கண்டபடி இலங்கைக்குச் சென்றவர்கள், தப்பித்தால் போதும் என்று நினைக்கும்படியானது.
ஆனால் தப்பிப்பது அத்தனை சுலபமல்ல. இறந்து போவது தவிர, தப்பிக்க வேறு வழியில்லை என்னும்படிதான் இருந்தது. முரண்டு பிடித்தவர்கள், பாதி வழியில் திரும்ப அடம்பிடித்தவர்கள், தப்பிக்கப் பார்த்தவர்கள் எல்லோரையும் கட்டி வைத்து சித்திரவதை செய்தார்கள். அதட்டி, மிரட்டி அழைத்துச் சென்றார்கள். கண்டியை அவர்கள் நெருங்கிய வேளையில் உண்மை தெரிந்துவிட்டது. சுகவாசிகளாக அல்ல; கொத்தடிமைகளாக வேலை பார்க்கவே நாம் இங்கு வந்திருக்கிறோம். சேரப்போவது செல்வமல்ல; நோயும் பசியும் வலியும் வேதனைகளும்தான். திரும்பவும் தமிழகம் செல்வது என்பது கனவிலும் முடியாத காரியம்.
இப்படித்தான் மலையகத் தமிழர்கள் என்னும் மூன்றாவது தமிழினம் இலங்கையில் உருவானது. 1840-50 காலகட்டங்களில் மொத்தமாகச் சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் மலையகத்தில் கொண்டு குடிவைக்கப்பட்டார்கள். அதுவும் எப்படி? தோட்ட வேலை பார்க்க வந்த இவர்களை, வேலையில்லாமல் எரிச்சலடைந்திருந்த சிங்கள அடித்தட்டு மக்கள் வசித்த பகுதியிலேயே கொண்டுபோய்ச் செருகினார்கள். தொடக்கம் முதலே இரு தரப்புக்கும் வெறுப்பும் விரோதமும் வளர்வதற்கு இது முக்கியக் காரணமானது.
ஏற்கெனவே பல சிங்களக் குடியிருப்புகளை காலி செய்து ஊரை விட்டே துரத்தியிருந்த கோபம் அவர்களுக்கு பலமாக இருந்தது. இப்போது கொண்டு வந்து பயிரிடும் புதிய இனம். தமிழர்கள். தமிழகத்திலிருந்து வந்திருக்கும் தமிழர்கள். வேலை பார்க்க வந்திருப்பவர்கள். அங்கு அதுநாள் வரை வேலை பார்த்துக்கொண்டிருந்த சிங்கள விவசாயக் கூலிகளுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டிருப்பவர்கள்.
புரிகிறதா? இது ஒரு சூழ்ச்சி. மிகப்பெரிய சூழ்ச்சி. தங்கள் தொழில் தடங்கலற்று நடைபெறுவதற்காக, பார்த்துப் பார்த்து மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பயங்கரவாத நடவடிக்கை. இன்று இலங்கையில் தலைவிரித்தாடும் இனவெறிக்கெல்லாம் ஆணி வேர் இங்குதான் இருக்கிறது.
ஆங்கிலேயர்களின் காப்பிப் பயிர் முயற்சி, பூச்சித் தாக்குதலால் அற்பாயுளில் அழிந்து, அங்கே அவர்கள் தேயிலை பயிரிட ஆரம்பித்தது, பயிர் போனாலும் உயிர் போகாத தமிழர்கள் தொடர்ந்து அங்கே அவல வாழ்வைத் தொடர்ந்தது, வட இலங்கைத் தமிழர்கள், தென் இலங்கைச் சிங்களர்கள், மலையகத் தமிழர்களுக்கிடையே கண்ணுக்குப் புலப்படாத திரை ஒன்று விழுந்து ஒவ்வொருவரும் தனித்தனியே துண்டிக்கப்பட்டது போலானது எல்லாம் ஒரு பக்கமிருக்க, சிங்களர்கள் மத்தியில் அப்போதுதான் மெல்ல மெல்ல தங்கள் இனத்துக்கான அரசியல், சமூகப் பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு சார்ந்த அச்சம் கலந்த கவனம் ஏற்படத் தொடங்கியது.
மலையகத்தில் அவர்கள் வஞ்சிக்கப்பட்டது உண்மை. அது பிரிட்டிஷாரின் சூழ்ச்சி என்று பாராமல் தமிழர்களின் மேலாதிக்கம் பரவுகிறது என்று கருதியதுதான் அவர்களது வன்மத்தின் தொடக்கப்புள்ளி. இத்தனைக்கும் தோட்டத்தொழிலுக்குப் பணியமர்த்தப்பட்ட அத்தனை லட்சம் பேரும் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள்தான், இலங்கையின் பூர்வ தமிழர்கள் அல்லர் என்பது அவர்களுக்குத் தெரியும். இலங்கையின் ஆதிகுடிகளான தமிழர்களிலிருந்து ஒரே ஒரு தோட்டத்தொழிலாளர் கூடப் பணியமர்த்தப்படவில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். எஸ்டேட்டுகளில் அதிகாரிகளாகச் சில தமிழர்கள் இருந்தார்கள். ஆங்கிலம் அறிந்த தமிழர்கள். ஒப்பீட்டளவில் மிகவும் சொற்பமான எண்ணிக்கையினர். ஆயினும் மொழியை முன்வைத்து இரு தரப்பினருக்கும் வித்தியாசம் இல்லை என்று அவர்கள் நினைத்தார்கள். அந்தச் சொற்ப அளவு வாய்ப்புக்கூட சிங்களர்களுக்கு வழங்கப்படாததும், நிலங்களைப் பறித்துக்கொண்டு அவர்களை ஏமாற்றி விரட்டியதும்தான் வன்மத்தின் வேர்.
இந்த வகையில் இலங்கையின் இன்றைய அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரண புருஷர்களாக பிரிட்டிஷ்காரர்கள் இருந்திருக்கிறார்கள். சமீபத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசிவிட்டுத் திரும்பிய வைகோவின் உரையில் இதுவே வேறு சொற்களில் வெளிப்பட்டதை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
அது நிற்க. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சிங்களர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்வதன் பொருட்டு முதன் முதலாக ஒரு பெரிய ஆயுதத்தைக் கையில் எடுக்க ஆரம்பித்தார்கள். அதன் பெயர் தேசியவாதம்.
அதுநாள் வரை மண், நிலம், தேசம், உரிமை, மெஜாரிட்டி, மைனாரிட்டி என்றெல்லாம் அநாவசியத்துக்கு யோசித்துக்கொண்டிருக்காமல் கண்டியில் சிங்கள மன்னர் ஆண்டாலும் சரி, தமிழ் மன்னர் ஆண்டாலும் சரி, கண்டி உள்பட மொத்தத் தீவையும் போர்த்துக்கீசியர் ஆண்டாலும் சரி, டச்சுக்காரர்கள் ஆண்டாலும் சரி எனக்கென்ன போச்சு என்று இருந்தவர்கள்தான்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கூட ஒரு துரும்பைக் கிள்ளிப் போட யாரும் நினைக்கவில்லை. ஆனாலும் தமிழர்கள் மீதான வன்மம் அவர்களை தேசியவாதம் பேசவைத்தது. பிரித்தாண்ட பிரிட்டிஷாரைக் காட்டிலும் தமிழர்கள் விரோதிகளாகிப் போனார்கள். வட இலங்கையில் அன்றைக்கு இருந்த வளமை, கல்வியில் தமிழர்கள் காட்டிய ஆர்வம், அவர்களுக்குச் சுலபத்தில் கிடைத்த அங்கீகாரங்கள், வர்த்தகத்தில் அவர்களிடையே இருந்த ஆர்வம், கிடைத்த வாய்ப்புகள், வாழ்வில் திளைத்த செழிப்பு இவையெல்லாம் அந்த வன்மத்தின் அடியே நீரோட்டமாக இருந்த காரணங்கள்.
கொழும்பில் டான் கரோலிஸ் ஹெவவிதரன (Don Carolis Hewavitharana) என்று ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். நிலச்சுவான்தார். அவரது மனைவி மல்லிகா தர்ம குணவர்த்தன (Mallika Dharmagoone wardena).. இவர்களுக்குப் பிறந்த ஒரு பிள்ளை டான் டேவிட் ஹெவவிதரன (Don David Hewavitarnne).
இந்த டான் டேவிட் ஹெவவிதரன, இந்த இடத்தில் ஒரு முக்கியப் பாத்திரம். இந்த இடத்தில் மட்டுமல்ல; சிங்கள தேசியவாதம் அல்லது சிங்களப் பேரினவாதம் என்று சொல்லப்படும் கருத்தாக்கத்தினை வடிவமைத்தவர்களுள் மிக முக்கியமானவர் என்கிற வகையில் இந்த சரித்திரம் முழுவதற்குமே அவர் ஒரு முக்கியப் பாத்திரம். மகாநாம தேராவின் மகா வம்சத்துக்குப் பிறகு, போற்றிப் பாடடி பெண்ணே என்று சிங்களர்கள் கொண்டாடுவது அவரது கருத்துகளைத்தான்.
கிறிஸ்துவப் பெற்றோருக்குப் பிறந்து, கிறிஸ்துவப் பள்ளியிலும் கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்து பட்டம் முடித்த டான் டேவிட் ஹெவவிதரன, பவுத்தத்தைத் தழுவியதன் காரணங்கள் நமக்கு முக்கியமல்ல. (பள்ளி நாட்களிலேயே இந்த மதமாற்றம் நிகழ்ந்துவிட்டது.) பவுத்தத்தையும் சிங்கள தேசிய இனவாதத்தையும் ஒரு நேர்க்கோட்டில் வைத்து, மிகத் தீவிரமாகப் பிரசாரம் செய்து, பவுத்தம்தான் இலங்கையின் ஒரே மத அடையாளம், சிங்களம்தான் இலங்கையின் ஒரே இன அடையாளம் என்று திரும்பத் திரும்பச் சொல்லி சிங்களர்களை அவர் வீறுகொண்டு எழச் செய்தது முக்கியம்.
தேசியவாதம் ஒரு நல்ல ஆயுதம். பயன்படுத்தும் விதத்தில் அதன் பலன் இருக்கிறது. பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்தும்போது அது பல்லிளித்துவிடும். அந்த வகையில் சிங்கள தேசியவாதத்துக்கு வித்தூன்றியவர் என்று தயங்காமல் டான் டேவிட் ஹெவவிதரனவைச் சொல்லலாம்.
அது அவரது பூர்வாசிரமப் பெயர். பிரம்ம ஞான சபை (Theosophical Society)யைத் தோற்றுவித்த மேடம் பிளவாட்ஸ்கியும் கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டும் (Henry Steel Olcott)1880-ல் இலங்கைக்கு வந்து பவுத்தத்தை ஏற்று, ஏராளமான பவுத்தப் பள்ளிக்கூடங்களைத் திறந்ததும் ஆதரவற்றோருக்கும் அகதிகளுக்கும் புனர்வாழ்வு வழிகளைக் காட்டியதும் டான் டேவிட் ஹெவவிதரனவை மிகவும் பாதித்தது. டான் டேவிட், தர்மபாலாவானது பெரிய விஷயமல்ல. அவர் `அனகாரிக' தர்மபாலாவானதுதான் இங்கே முக்கியம்.
அனகாரிக என்கிற சொல்லுக்கு எளிதாகத் துறவி என்று பொருள் சொல்லிவிடலாம். ஆனால் பிரம்மச்சரியம், கொள்கைத் தீவிரம், போராளி மனோபாவம் போன்றவற்றை தவம், சடங்குகள், சாது ஒழுக்கங்களுக்கு மேலாக வைத்து இயங்குவோரையே இந்தச் சொல்லில் குறிப்பது வழக்கம்.
பவுத்தத் துறவிகளைப் போல் அனகாரிக தர்மபாலா மொட்டை அடித்துக் கொண்டதில்லை. நல்ல, படிய வாரிய கிராப்தான் வைத்திருந்தார். இதனை விமரிசித்தவர்களுக்கு அவரளித்த பதில்: `எனக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. உலகம் முழுதும் நான் சுற்றியாக வேண்டும். இப்படி இருப்பதுதான் மக்கள் கூட்டத்துடன் கலக்க வசதி.' புத்தம் சரணம் கச்சாமி என்று மடம் கட்டிக்கொண்டு உட்கார்ந்து மதம் பரப்பிய துறவி இல்லை அவர். மாறாக, இலங்கையில் மதத்தையும் அரசியலையும் ஒன்றிணைத்து, அரசியலை ஆளும் சக்தியாக மதத்தை மேலெடுத்துச் சென்றவர். ஆயுதம் ஏந்திய புத்த பிக்குகள், கலவரம் செய்த புத்த பிக்குகள், தற்கொலை வீரராகக் கூடக் களமிறங்கத் தயாரான புத்த பிக்குகளை நாம் இலங்கை சரித்திரத்தில் காண்கிறோம். அவர்களுக்கெல்லாம் முன்னோடி, தர்மபாலா.
இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் பவுத்தம், பிற தேசங்களில் புழக்கத்திலிருக்கும் பவுத்தத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று இந்தத் தொடரின் தொடக்கத்தில் பார்த்தோமல்லவா? அந்த மாறுதலைக் கொண்டுவந்தவர் என்று தர்மபாலாவைச் சொல்லலாம்.
இலங்கையின் பெரும்பான்மை மக்கள், சிங்களர்கள். பெரும்பான்மையினரால் கடைப்பிடிக்கப்படுகிற மதம் பவுத்தம். ஆனால் ஒடுக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் யார்? இந்தப் பெரும்பான்மையினரே அல்லவா? உங்களுக்கெல்லாம் சுரணை இல்லையா? வெட்கமாக இல்லையா? இந்தியாவில் நமது புத்தர் நிர்வாணமடைந்த மகாபோதி ஆலயம் சைவ பூசாரிகளால் நிர்வகிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இத்தனை காலமாக என்ன செய்துகொண்டிருக்கிறோம் நாம்? வெற்றுக்கூச்சல் போடாதீர். செயல், செயல் முக்கியம். என்னுடன் வர யார் தயாராக இருக்கிறீர்கள்? நான் மொட்டை அடித்துக்கொள்ளாததைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள். இங்கே நம் சமூகம் முழுமைக்கும் மொட்டையடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. விழித்துக்கொள்ளுங்கள் சிங்களர்களே.
அனகாரிக தர்மபாலா இந்தியாவுக்கு வந்ததோ, மகாபோதி ஆலயத்தை சைவர்களிடமிருந்து மீட்க அவர் ஓர் இயக்கம் தொடங்கியதோ இங்கு முக்கியமல்ல. ஆனால் அவர் ஆரம்பித்த இயக்கம்தான் பின்னால் சிங்களப் பேரினவாதம் பெருக ஒரு முக்கியமான தொடக்கப்புள்ளியாயிற்று. மிகத் தீவிரமான மத வெறி, மிகத் தீவிரமான இன வெறி என்று சிங்களர்கள் மாறிப்போனதன் காரண புருஷர் அவர்தான்.
(தொடரும்)
நன்றி
குமுதம்
0 விமர்சனங்கள்:
Post a Comment