யுத்தம் சரணம் பாகம் 12
நவீன உலகில், பிரம்மசரிய விரதம் பூண்டு முழு நேர மதப்பணி ஆற்றிய முதல் துறவி என்று அனகாரிக தர்மபாலாவை சிங்களர்கள் குறிப்பிடுவார்கள். தேசிய உணர்வையும் மத உணர்வையும் சிறப்பாக காக்டெயில் செய்யலாம் என்று பின்னர் வந்த தலைமுறைக்குக் கற்றுத் தந்தவர் அவர். History of an Ancient Civilization : Ceylon Under British Rule என்கிற அவரது புத்தகம், பேச்சு மற்றும் எழுத்து மூலம் அதிகபட்சம் எவ்வளவு சாதிக்கலாம் என்று சொல்லும்.
எங்கு தட்டினால் யாருக்கு வலிக்கும், எங்கே சீண்டினால் துள்ளி எழுவார்கள், எப்படிச் சொன்னால் எடுபடும், யாரை உசுப்பேற்ற எவரை மட்டம் தட்டலாம். கணக்கு மாதிரி படிப்படியாக விரிவடைந்திருக்கின்றன அவரது பேச்சும் எழுத்தும். ஒரு வகையில் ஹிட்லரின் ஆரிய மேலாதிக்க மனோபாவத்துடன் தர்மபாலாவின் ஆரிய மேலாதிக்க மனோபாவத்தை நம்மால் ஒப்பிட இயலும். ஹிட்லருக்கு யூதர்கள், தர்மபாலாவுக்குத் தமிழர்கள். ஹிட்லரின் உளவியல் பிரச்னைகள் அவரைக் கொலை வரை கொண்டு போயின. தர்மபாலாவின் புத்திசாலித்தனம், தலைமுறை தோறும் விரோதபாவத்தை வளர்த்துவிடுவதற்கு உதவி செய்தது! இருவருக்கும் ஆரிய மேலாதிக்க மனோபாவம்தான். ஆனால் தர்மபாலாவின் ஆரியவாதம், ஹிட்லருடையதைப் போல் தத்துவப் பின்னணியற்ற தாதாத்தனம் கொண்டதல்ல. தன் தீர்மானத்தைத் தானே செயல்படுத்தி முடிக்கும் வேட்கையும் அவருக்கில்லை. ஒரு தொடர் செயலாக அதனை முன்னெடுத்துச் செல்லவே அவர் உத்தேசித்தார். தவிரவும், தனக்கென எதையும் சேர்த்துக் கொள்ளாத துறவியாக அவர் இருந்தபடியால், சிங்கள இனத்தவர்கள் அவரை ஒரு மீட்பராகக் கண்டார்கள்.
இலங்கையைப் பொறுத்தவரை, அந்தச் சிறு தீவில் சிங்களர்கள் மெஜாரிட்டியினர் என்பது அவருக்குப் பெரிய வசதியாக இருந்தது. தனி இனம், கலப்பில்லாத சுத்த ரத்தம், கலாசார பலம், மக்களின் அறிவுத்தளத்தில் பவுத்தம் நிகழ்த்திய புரட்சி என்று ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்குள்தான் அவரது பிரசங்கங்கள் சுற்றி வருகின்றன. மிகக் கவனமாக, ஒரு கௌரவச் சின்னமாக அன்றி, தத்துவ தரிசனமாகவோ, வாழ்வியல் நெறியாகவோ பவுத்தத்தை அவர் முன்வைப்பதைத் தவிர்த்துவிடுகிறார். பவுத்தத்தை உணர்வதல்ல, அதனை ஏற்றிருப்பதே உயர்ந்த செயல் என்பது தர்மபாலாவின் பக்கம்.
போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் காலத்தில் இருந்தே சிங்களர்களைத் தமிழர்கள் ஓரம் கட்டி வந்தார்கள், சமூக அரசியல் தளத்தில் அவர்களுடைய இடமும் இருப்பும் பிரதானமாக இருந்தது என்னும் தர்மபாலாவின் தொடர் பிரசாரங்களுக்கு உரிய ஆதாரங்கள் நமக்குப் பொதுவாகக் கிடைப்பதில்லை. அதே சமயம் தமிழர்களைப் பல இடங்களில் அவர் காட்டுமிராண்டிகள் என்றும் வருணித்திருப்பது நெருடுகிறது. போர்த்துக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் காட்டுமிராண்டிகளுக்கு அத்தனை அதிகாரம் அளித்திருப்பார்களா? போர்த்துக்கீசியர் மற்றும் டச்சுக்காரர்கள் காலத்தில் எழுதப்பட்ட இலங்கைச் சரித்திரங்களில் இத்தகைய குறிப்புகள் எங்கும் கிடைப்பதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
அன்றைய வட இலங்கையில் வசித்த தமிழர்கள் வசதியாக இருந்திருக்கிறார்கள். விவசாயம், வர்த்தகம் என்கிற இரு துறைகளில் நிறைய சம்பாதித்திருக்கிறார்கள். கல்வி வளர்ந்திருக்கிறது.
இந்த மூன்று அம்சங்களும் தென்னிலங்கைச் சிங்களர்களின் வாழ்வில் ஒப்பீட்டளவில் அப்போது குறைவு என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சமூகமும் பண்படுவதற்கு எடுத்துக்கொள்கிற கால அவகாசம் மாறுபடக்கூடியது.
தமிழர்களிலேயேகூட, தமிழ் பேசும் முஸ்லிம்கள் சாதித்த அளவுக்கு ஈழத்தின் ஆதித் தமிழர்களால் வர்த்தகத்தில் பெரிய அளவில் சாதிக்க முடிந்திருக்கவில்லை. தமிழ் மொழி என்கிற ஓரம்சத்தை மட்டும் வைத்து இலங்கையில் வசிக்கும் மொத்தத் தமிழர்களையும் ஒரே வகையினராகப் பார்ப்பதில் பல சிக்கல்கள் வரும்.
அனகாரிக தர்மபாலாவின் சிங்கள தேசிய இன வாதம் மேலோங்கத் தொடங்கிய காலத்தில் இலங்கையின் வர்த்தக முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்கள்தாம். தர்மபாலாவின் தேசியவாதம் என்பது அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல் சமூக, பொருளாதார தளங்களையும் உள்ளடக்கியதாக இருந்ததன் விளைவாக, சிங்கள வர்த்தகர்கள் எழுச்சிபெறத் தொடங்கினார்கள்.
எனவே தர்மபாலாவின் தாக்குதலுக்குத் தமிழ் முஸ்லிம்களும் முக்கிய இலக்கானார்கள். ஹிந்துவா, முஸ்லிமா என்று பார்க்காதே. தமிழனா? ஒதுக்கித் தள்ளு. அவன் அபாயகரமானவன். வளர விடாதே. அவன் இந்தியத் தொடர்புடையவன். நம் மண்ணுடன் சம்பந்தமில்லாதவன். போர்த்துக்கீசியர்கள் அன்னியர்களா? டச்சுக்காரர்கள் அன்னியர்களா? தமிழனும் அன்னியன். தள்ளி வை. நீ முன்னுக்கு வா. நீ மேலே வா. நீ வளர வேண்டும். நீ வாழவேண்டும். அவனை ஒதுக்கித் தள்ளு. இடம் கொடுக்காதே.
அறிவுத் தளத்தில் சிந்தித்து வினா எழுப்பவோ, விடை காணவோ இத்தகைய தூண்டி விடல்களில் இடமில்லை. தர்மபாலா முற்றிலும் உணர்ச்சித் தளத்தில் செயல்பட்ட அறிவுஜீவி!
அதுதான் பிரச்னை.
இந்த ஒருமித்த எதிர்ப்புக்குத் தமிழர்கள் தரப்பில் ஒரே குரல் அல்லது செயலிலான பதில் நடவடிக்கை இருந்திருக்குமானால் கதை வேறு விதமாகியிருக்கக் கூடும். அந்தத் தருணத்தில் மொழி உணர்வு, இன உணர்வைக் காட்டிலும் வர்த்தகம் முக்கியமாகப்பட்ட தமிழ் பேசும் முஸ்லிம்கள், தன்னிச்சையான சில பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியது, தமிழர்களுக்குள்ளேயே இருந்த வேறுபாட்டினை முதல் முறையாக வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியது.
இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால், கொழும்பு நகரை மையமாக வைத்துச் செயல்பட்டுக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்துத் தமிழர்கள், (கல்வி சார்ந்த துறைகளில் தீர்மானிக்கும் சக்திகளாக அன்றைக்கு இருந்தவர்கள்) தமிழ் பேசும் முஸ்லிம்களோடு கடுமையாக அபிப்பிராய பேதம் கொள்ளத் தொடங்கியது இதன்பிறகுதான். ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பது, காலை வாரிவிடச் சந்தர்ப்பம் தேடுவது என்று தமிழர்களுக்குள்ளேயே பிரிவினை தலை தூக்கிய சமயம், தர்மபாலாவின் சிங்கள தேசிய வாதம் அதன் உச்சத்தைத் தொட்டுவிட்டிருந்தது.
பவுத்தம் ஒன்றைத் தவிர பிற எந்த மதத்தவரோடும் நமக்குச் சம்பந்தமில்லை என்கிற நிலைபாட்டை சிங்களர்கள் எடுத்திருந்தார்கள். கிறிஸ்துவர்கள் ஆகாது. தமிழர்கள் ஆகவே ஆகாது. முஸ்லிம்கள் கூடவே கூடாது. சிங்கள இனம். பவுத்த மதம். சுத்த ரத்தத்தின் முதலும் முடிவுமான ஒரே அடையாளம். மற்ற யாரானாலும் விரோதியே என்னும் மனோபாவம் மேலோங்கத் தொடங்கியதன் விளைவாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் இரு இனங்களுக்குமான பெரும் மோதலின் முதல் அத்தியாயங்கள் எழுதப்படத் தொடங்கின.
1915-ல் நடந்த சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம், அதன் தொடக்கம். அதனைப் பார்ப்பதற்கு முன்னால் இலங்கை முஸ்லிம்களைப் பற்றிய எளிய அறிமுகத்தைச் செய்துகொண்டுவிடுவது நல்லது.
ஆரம்பத்திலேயே பார்த்தோம் என்றாலும் மீண்டுமொரு முறை இங்கே நினைவுபடுத்திக்கொண்டு விடுவோம். இது மிகவும் முக்கியம்.
`இலங்கைத் தமிழர்' என்று பொதுவில் சொல்லப்பட்டாலும், இலங்கையில் இருப்பது மூன்று விதமான தமிழர்கள்.
இலங்கையின் பூர்வகுடித் தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள், தமிழகத்திலிருந்து காப்பி தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டு, கண்டியைச் சுற்றிய மலைப்பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட தமிழர்கள்.
இதில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்பவர்கள் மொத்தத் தமிழர்களில் சுமார் 28-29 சதவிகிதம் வரை வரக்கூடியவர்கள். Sri Lankan Moor இலங்கைச் சோனகர் என்று இவர்கள் பொதுவில் குறிப்பிடப்படுவார்கள். பெரும்பாலும் சன்னி முஸ்லிம்கள்.
கி.பி. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு அரேபிய வர்த்தகர்கள் வந்துபோகத் தொடங்கியதிலிருந்து இஸ்லாம் அங்கே பரவத் தொடங்கியதாகச் சரித்திரம் சொல்வது ஒருபுறமிருக்க, ஜாவா, சுமத்ரா பகுதிகளிலிருந்து வந்த டச்சுப் படைகளில் இருந்த முஸ்லிம்கள் இலங்கையிலேயே தங்கி, சந்ததி வளர்த்ததையும் கணக்கில் எடுத்தாக வேண்டும்.
இவர்கள் தமிழர்கள் இல்லை. ஆனாலும் தமிழ் பேசும் முஸ்லிம்களுடன் பழகி, தமிழ் அறிந்தவர்களாக ஆகியிருக்கிறார்கள்.
ஒரு வித்தியாசம் என்னவென்றால், இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழர் மாகாணங்களில் மட்டும் வசிப்பதில்லை. சிங்களர்கள் மத்தியிலும் அவர்கள் குடியிருப்புகள் உண்டு. சொல்லப்போனால் தமிழர் பகுதியில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்களைக் காட்டிலும் சிங்களர் பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். வர்த்தகம் பிரதானம் என்னும்போது இது தவிர்க்க முடியாததாகிறது.
இந்த வகையில் தமிழர் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களின் பொருளாதாரம், சிங்களர் பகுதிவாழ் முஸ்லிம்களின் பொருளாதாரத்துடன் சம்பந்தமில்லாதது!
தமிழர் மாகாணங்களில் வசிப்பவர்களுக்கு விவசாயமும் மீன் பிடித் தொழிலுமே பிரதானம். கொழும்பு, கண்டி போன்ற சிங்கள நகரங்களில் வசிப்போருக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் இருந்தன. அவர்களால் பல தொழிற்சாலைகளையே உருவாக்க முடிந்தது. அரசு ஒப்பந்தங்கள் பல அவர்களுக்குக் கிடைத்தன. உள்நாட்டிலும் கடல் கடந்தும் தமது வியாபாரத்தை விஸ்தரிக்க வழிகள் இருந்தன.
இந்த வேறுபாடு கல்வி விஷயத்திலும் உண்டு. தமிழர் மாகாண முஸ்லிம்களைக் காட்டிலும் சிங்களப் பகுதி வாழ் முஸ்லிம்களிடையே மத்திய தர, உயர் மத்திய தர வகுப்பினர் எண்ணிக்கை அதிகம்.
சொல்லிக்கொள்ளும்படியான ஒரே ஒற்றுமை, தமிழ்.
எனவேதான் இயல்பாகவே கொழும்பு வாழ் முஸ்லிம் தமிழர்கள் வடக்கு -கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தக்கூடிய சக்தி மிக்கவர்களாக ஆகிப் போனார்கள்.
கவனிக்க வேண்டும். சிங்கள தேசியவாதம் என்பது இனத்தையும் மதத்தையும் முன்னிறுத்திக் கட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது, தமிழர்களில் ஒரு பிரிவினரான தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே வர்த்தகத்தை முன்னிலைப்படுத்தி அடக்கியாளும் பண்பு மேலோங்கத் தொடங்கியது.
இதன் நீட்டல் விகாரம், தமிழர் பகுதி முஸ்லிம் குடியிருப்பில் வசிப்போர் குறித்த அக்கறையே கொழும்பு உயர்தட்டு தமிழ் முஸ்லிம்களுக்கு இல்லாது போயிற்று. கொழும்பில் அவர்கள் அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். ஒரு வார்த்தை பேசினால் என்னவும் சாதிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். வர்த்தகப் புலிகள், வருமானம் கொண்டு வருபவர்கள், எதையும் செய்து முடிக்க வல்லவர்கள். ஆனாலும் பின்னாளில் தமிழர் மாகாணங்களில் முஸ்லிம்களின் வசிப்பிடங்கள் நிறைந்த பகுதிகளில் சிங்களக் குடியிருப்புகள் நிறுவப்பட்டபோது கண்டுகொள்ளாமலேயே போனார்கள்!
பல்லாயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட நிலப்பகுதிகள் இப்படியே களவுபோயின.
(தொடரும்)
நன்றி
குமுதம்
0 விமர்சனங்கள்:
Post a Comment