யுத்தம் சரணம் பாகம் 13
இலங்கையில், சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமான முதல் நேரடி மோதல் என்பது சிங்களர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்குமான மோதலாகத்தான் ஆரம்பமானது. உபயம், பிரித்தாண்ட பெருந்தகை பிரிட்டிஷார். வேறு யார்?
ஒரு விஷயம். மோதல் என்றும் கலவரம் என்றும் வருணிக்கப்பட்டாலும் இதன் உண்மை வடிவத்தைக் காணும்போது இதனை ஓர் உள்நாட்டு யுத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவே நியாயம். சிறு யுத்தம்தான். 1915-ம் ஆண்டு மே 28-ம் தேதி தொடங்கி ஜூன் 5-ம் தேதி முடிவடைந்து விட்டாலும் இதன் தாக்கம் பெரிது.
146 பேர் கொல்லப்பட்டு, 405 பேர் குற்றுயிரும் குலை உயிருமாக எடுத்துச் செல்லப்பட்டார்கள். பிழைத்தவர்கள் எத்தனை பேர் என்கிற விவரம் பிறகு வெளிவரவில்லை. தவிரவும் சுமார் 6065 முஸ்லிம் பெண்கள் இந்தத் தினங்களில் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கண்டி தொடங்கி தென் இலங்கை முழுவதிலுமாக மொத்தம் நாலாயிரம் முஸ்லிம் வர்த்தக நிறுவனங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. உச்சகட்டம், 85 மசூதிகள் சேதப்படுத்தப்பட்டன.
செய்தது சிங்களர்கள். பிரமாதமான அரசியல் காரணங்கள் ஏதும் இதற்குக் கிடையாது. வர்த்தகக் காரணங்களே முக்கியமாக இருந்திருக்கிறது. முன்பே பார்த்தபடி அன்றைய நிலவரப்படி, இலங்கையில் வர்த்தகத்தைப் பொறுத்த அளவில் முஸ்லிம்களின் கையே மேலோங்கியிருந்தது. ரத்தின வியாபாரம் அது இது என்று என்னென்னவோ செய்துகொண்டிருந்தார்கள். நல்ல பணப்புழக்கம். உலகெங்கும் தொடர்புகள். வளமான வாழ்க்கை. வசதிமிக்க சூழல்.
போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள் காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு வர்த்தகம் பெரும் பிரச்னையாகத்தான் இருந்தது. அவர்களுக்கு அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் சிக்கல்கள் ஏதும் இல்லாதிருந்தாலும் வர்த்தகம் செய்வதில் எப்போதும் உண்டு இடர்ப்பாடுகள்.
இந்த நிலைமை மாறத்தொடங்கியதே பிரிட்டிஷார் காலம் வந்த பிறகுதான். பிரிட்டிஷ் ஆட்சியை ஒரு பொற்காலமாக அவர்கள் கருத ஆரம்பித்திருந்தார்கள். எந்தச் சிக்கலும் இல்லை. ஏற்றுமதி, இறக்குமதி விஷயங்களில் லைசென்ஸ், பர்மிட் வகையறாக்களுக்குக் காத்திருக்க அவசியமே நேரவில்லை. ஒழுங்காக வரி கட்டு. மிச்சம் உன் பாடு என்கிற கொள்கை எத்தனை உன்னதமானது!
அப்படித்தான் நினைத்தார்கள். ஆனால், ஒரு பக்கம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருந்த சிங்கள தேசியவாதம் அனகாரிக தர்மபாலா கோஷ்டி மற்றும் அரசியல் தளத்தில் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த அந்நாளைய சிங்கள தேசியத் தலைவர்களான டி.எஸ். சேனநாயகா, எஃப்.ஆர். சேனநாயகா கோஷ்டிகள் தூண்டி விட்ட துவேஷ உணர்வு வெடிப்பதற்கு நாள் பார்த்துக்கொண்டிருந்தது.
மேற்கே முதல் உலக யுத்தம் சூடு பிடித்துக்கொண்டிருந்த சமயம் அது. விளம்பர இடைவேளையில் வெளியே வந்து ஒரு பீடி கொளுத்திப் போடுவது போல, தனது கட்டுப்பாட்டில் இருந்த இலங்கைத் தீவை அதன் உள்நாட்டுப் பிரச்னைகளோடு மட்டும் உறவாடச் செய்ய நினைத்தது பிரிட்டிஷ் அரசு. என்ன கெட்டு விட்டது? ஏழெட்டு நாள் அடித்துக்கொண்டு சில நூறு உயிர்கள் போகும். அவ்வளவுதானே? சில வருடங்களுக்காவது சிந்தனை மாறாது.
தொடக்கத்திலிருந்தே சிங்களர்களையும் தமிழர்களையும் பிரித்துப் பிரித்து அடையாளம் காட்டி வந்தது, தமிழர்களுக்குள்ளே சாத்தியமுள்ள அனைத்து விதங்களிலும் பிரிவினை விதைத்தது, சிங்களர்களுக்குள்ளேயும் விஷ வித்துக்களை விதைத்தது என்று திருச்செயல்களுக்கு எப்போதும் குறைவிருந்ததில்லை.
ஆனபோதிலும் இன்றளவு அப்போது முழுப்பிரிவினை இல்லை. குறிப்பிட்ட காரணம் என்று ஏதுமில்லாமல், சடாரென்று உதித்து மறைந்த அந்த 1915 கலவரத்திலிருந்தே இதற்கு உதாரணம் பெறலாம்.
கலவரம் அல்லது மோதல் அல்லது யுத்தம் நடந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தார்கள், மரண ஓலம், மரண பய ஓலம். கண்டி தொடங்கி கொழும்பு வரை எங்கும் அச்சம். கடையடைப்பு. கடை உடைப்பு. தீவைப்புச் சம்பவங்கள். பெண்கள் வீதிக்கு வரவே முடியாத மாபெரும் அவலச் சூழல்.
பாதிக்கப்பட்டிருந்த அத்தனை பேரும் தமிழ் முஸ்லிம்கள். இதில் சற்றும் சந்தேகமில்லை. காரண கர்த்தாக்கள் சிங்களர்கள். அதாவது சிங்கள அரசியல்வாதிகள். அவர்களால் தூண்டிவிடப்பட்ட செயல்வீரர்கள்.
அடித்து நொறுக்கும் வரை காத்திருந்துவிட்டு இறுதியில் காரண புருஷர்களான டான் ஸ்டீபன் சேனநாயகாவையும், அவரது சகோதரர் பிரடரிக் ரிச்சர்ட் சேனநாயகாவையும் கைது செய்தது பிரிட்டிஷ் அரசு.
பின்னாளில் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது, முதல் பிரதமராகப் பொறுப்பேற்றவர் இந்த டி.எஸ். சேனநாயகாதான். 1915 கலவர காலத்தில் அவர் ஓர் இளம் அரசியல்வாதி. வயதுக்குரிய வேகம், ஆரம்ப அரசியலுக்கே உரிய அடங்காத ஆர்வங்கள். அண்ணனுக்கேற்ற தம்பி, ஜாடிக்கேற்ற மூடி.
இந்தக் கைதுச் சம்பவத்துக்கு எதிராக வாதாட முடிவு செய்து, லண்டனுக்கே சென்று ராணியைச் சந்தித்துப் பேசி, வென்று திரும்பியவர் பொன் ராமநாதன் என்கிற தமிழர்.
அன்றைக்கு சர். பொன் ராமநாதன், தமிழர்களுக்கு மட்டும் தலைவரல்லர். இலங்கை தேசிய அரசியலில் அவர் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் லண்டன் சென்று வாதாடித் திரும்பியபோது, வரவேற்க துறைமுகத்தில் காத்திருந்தவர்கள் எல்லோரும் சிங்கள அரசியல்வாதிகள்.
வெற்றிக் கொடி கட்டிய கப்பலில் வந்து இறங்கிய ராமநாதனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பன்னிரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியொன்று தயாராக இருந்தது.
ஆனால், இழுத்துச் சென்றது குதிரைகள் இல்லை. ஒரு மாபெரும் உணர்ச்சிப் பெருக்கெடுத்த காட்சி அங்கே அரங்கேறியது. சேனநாயகாவை மீட்டுத் தந்த தமிழரல்லவா? குதிரைகளா அவரது வண்டியை இழுப்பது? அப்புறமென்ன மரியாதை?
பூட்டிய குதிரைகளை அவிழ்த்துவிட்டு, சிங்கள அரசியல்வாதிகளே ராமநாதனின் ரதத்தை இழுத்துச் சென்றார்கள். அவரது வீடு வரை கொண்டுபோய் இறக்கிவிட்டுவிட்டுத்தான் திரும்பினார்கள்! கொழும்பு நகரமே இந்தக் காட்சியைக் கண்டுகளித்தது. யாரும் அதற்கு முன்னால் பார்த்திராத அற்புதக் காட்சி. இன்னொரு முறை கிடைக்க வாய்ப்புண்டா என்று சொல்லமுடியாது. எனவே, கண்குளிரக் கண்டார்கள். பரவசப்பட்டார்கள்.
இது சரித்திரம்.
புல்லரிக்கச் செய்யக்கூடிய சரித்திரம்தான். ஆனாலும் இதன் பின்னால் உள்ள அரசியலையும் கவனித்தாக வேண்டும்.
கலவரம் நடந்தது யாருக்கிடையில்?
சிங்களர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும். காரண புருஷர்கள் சிங்களர்கள். கைதானதும் சிங்களத் தலைவர்கள்தாம்.
அவர்களது கைது பொறுக்காமல் லண்டனுக்குக் கப்பலேறிச் சென்று வாதாடி மீட்டுத் திரும்பியவர் ஒரு தமிழர் தலைவர் என்னும்போது புரிந்திருக்க வேண்டும். இலங்கையில், சிங்கள தேசியவாதம் என்பது மொழி மற்றும் மதம் சார்ந்து வீறுகொள்ளத் தொடங்கிய நேரத்தில் தமிழ் தேசியத் தலைவர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்களை ஒரு பொருட்டாகக் கருதவேயில்லை.
இலங்கையில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்களுக்கும் ஆதிக்குடித் தமிழர்களுக்குமான இடைவெளி எங்கிருந்து உருவாகத் தொடங்கியது என்பதை இந்தப் புள்ளி சுட்டிக்காட்டும்.
ராமநாதன், அவரையொத்த வேறு சில அந்நாளைய தமிழ்த் தலைவர்களைப் பற்றி இருவேறு அபிப்பிராயங்கள் இன்றளவும் உண்டு. தமிழர்களுக்கிடையே நிரந்தரமான பிளவினை உருவாக்க அவர்களது அன்றைய நடவடிக்கைகள் முதன்மைக் காரணமாயிருந்தன என்பது ஒரு வாதம்;
சிங்கள மக்கள் இனவாதம் பேசத் தொடங்கிய காலத்தில், தமிழர் தலைவர்கள் தங்களது இனத்தை முதன்மைப்படுத்தாமல், இலங்கை தேசத்தின் குடிகளாக மட்டுமே தங்களை வெளிப்படுத்திக்கொண்டனர் என்பது இன்னொரு வாதம். சிங்களர், தமிழர் பாகுபாடு எங்கள் மனத்தில் இல்லை என்பதைச் சுட்டுவதாகவே அவர்களது நடவடிக்கைகள் இருந்தன என்பது இதன் பொருள்.
ஆனால், பெரும்பான்மையானவர்கள் இதனை ஒப்புக்கொள்வதில்லை. இந்தக் கப்பலேறிச் சென்று மீட்டு வந்த சம்பவத்தைக்கூட, பதவியின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே பார்ப்பவர்களுண்டு. பன்னிரண்டு குதிரைகள் பூட்டப்பட்டு, பிறகு அவிழ்த்துவிடப்பட்டு சிங்கள அரசியல்வாதிகளாலேயே ரதம் இழுக்கப்பட்டு, ராமநாதன் கொழும்பு துறைமுகத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டபோதும், வழியில் இருந்த பல முஸ்லிம் கடைகள் தாக்கப்பட்டன. கொண்டாட்டத்தின் ஒரு பகுதி.
யாரும் தட்டிக்கேட்கவில்லை. ஏனென்று விசாரிக்கவில்லை. சேனநாயகா விடுதலையாகிவிட்டார். அவரது தம்பியும் வெளியே வந்துவிட்டார். கைதான அனைத்து சிங்களத் தலைவர்களுக்கும் விடுதலை. கைது செய்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு விசாரணை காத்திருக்கிறது. சர். பொன் ராமநாதன் சாதித்திருக்கிறார். கொண்டாடாமல் எப்படி?
கலவரமெல்லாம் நடந்து ஓய்ந்த மறு வருடம் (1916) நடைபெற்ற தேசிய சபைத் தேர்தலில் ராமநாதனும் ஒரு வேட்பாளர். அவரை எதிர்த்து நின்றவர் ஒரு சிங்கள வேட்பாளர். பெயர் ஜெயவர்த்தனே.
வெற்றி பெற்றது ராமநாதன் தான். சிங்களர்கள் அவருக்கே ஓட்டளித்திருந்தார்கள்!
ஒரு சாதாரணமான கலவரமாகக் கூட அந்தச் சம்பவம் கடந்து போயிருக்கலாம். கைதுச் சம்பவங்களைத் தட்டிக்கேட்ட ராமநாதன் போன்றவர்களுக்கு இலங்கைக்குள்ளேயே விரும்பிய பதிலை அளித்திருக்கலாம். ஆனால் ஒரு மகத்தான நாடகத்தின் உச்சகட்ட காட்சியைப் போல் வடிவமைத்து, யுத்த காலத்தில் அவர் கப்பலேறி பிரிட்டனுக்குச் சென்று மகாராணியைச் சந்தித்து, வாதாடி, வெற்றி பெற்றுத் திரும்புவதற்கு வாய்ப்பளித்ததன்மூலம் பிரிட்டிஷ் அரசு என்ன சாதித்தது?
சுலபம். பிரித்தாளும் நடவடிக்கையின் ஒரு முக்கிய அத்தியாயம் அது. சிங்களர் - முஸ்லிம் கலவரமாக அந்த வினாடி வரை தோற்றமளித்த சம்பவத்தை சிங்களர் - தமிழர் - முஸ்லிம் விரோதமாகப் பரிமாணம் கொள்ளச் செய்ததே அவர்களுடைய வெற்றி.
கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் இழப்புக்கு முன்னால் ராமநாதனின் தேசியவாத நடவடிக்கை எடுபடக்கூடியதல்ல என்பது பிரிட்டிஷ் அரசுக்குத் தெரியும். சிங்கள இனவாதம், ராமநாதனின் நாட்டுப்பற்றையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
அடுத்த தேர்தலில் அவர் வென்றாரா, தோற்றாரா என்பதல்ல விஷயம். மூன்று வேறுபட்ட கலாசாரப் பின்னணி கொண்ட மக்களை நிரந்தரமான பகையில் வைத்திருக்க அவர்களுக்கு அதுவே போதுமானதாக அமைந்துவிட்டது!
(தொடரும்)
நன்றி
குமுதம்
0 விமர்சனங்கள்:
Post a Comment