யுத்தம் சரணம் பாகம் 14
1948 பிப்ரவரி 4-ம் தேதி இலங்கை சுதந்திரம் அடைந்தது.
இரண்டாம் உலகப்போரின் முக்கிய விளைவுகளுள் ஒன்றாக, அதுநாள் வரை அடிமைப்பட்டுக் கிடந்த பெரும்பாலான தேசங்கள் அப்போது விடுதலை பெறத் தொடங்கியதன் தொடர்ச்சியாகத்தான் இது நிகழ்ந்தது.
வித்தியாசம் ஒன்று. மற்ற நாடுகளில் சுதந்திரப் போராட்டம் என்பது பல்லாண்டு காலம் மிகத் தீவிரமாக நடந்து, இறுதியில் ஆசுவாசப் பெருமூச்சாக அமைந்த இந்த வைபவம், இலங்கையைப் பொறுத்த அளவில் பெரிய போராட்டங்கள் ஏதுமில்லாமலேயே சித்தித்தது.
ஒரேயடியாக யாருமே சுதந்திரம் கோரவில்லை என்று சொல்லிவிடுவதற்கில்லை. கேட்டார்கள். ஆனால், 1935 க்குப் பிறகுதான் இந்த எண்ணமே அங்கு வந்திருக்கிறது. அதுவும் ஆரம்பித்து வைத்தவர்கள் கம்யூனிஸ்டுகள். அந்த வருடம் பிறந்த லங்கா சம சமாஜக் கட்சி (Lanka Sama Samaja Party - LSSP)யின் முதல் கொள்கை விளக்க அறிக்கையில் இந்தக் கோரிக்கை இருந்தது. பூரண சுதந்திரம்.
முன்னதாக 1919 லேயே சிலோன் தேசிய காங்கிரஸ் (Cyclon National Congress - CNC) பிறந்துவிட்டதென்றாலும் சுதந்திரம் அவர்களுடைய முக்கியக் கொள்கையாக இல்லை. இலங்கையின் முதல் தலைமுறை தேசியவாதிகளான அவர்களுக்கு, அனகாரிக தர்மபாலாவின் பேரலல் அரசியலை எப்படிச் சமாளிப்பது என்கிற கவலையே பெரிதாக இருந்தது.
தர்மபாலாவைப் பின்பற்றி பவுத்தத்தை ஏற்று, மத முத்திரையுடன் அரசியலில் ஈடுபட்ட சிங்களர்களை அவர்கள் ப்ராட்டஸ்டண்ட் பவுத்தர்கள் என்று அழைத்தார்கள்.
இந்த அடைமொழியின் பின்னால் உள்ள அரசியல், நியாயமாக ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவ பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கடும் கோபம் விளைவித்திருக்க வேண்டும். மாறாக, முட்டிக்கொள்ளத்தானே எல்லாம்? ஜோராக முட்டிக்கொள்ளுங்கள் என்று வேடிக்கை பார்ப்பதுடன் நிறுத்திக்கொண்டார்கள்.
பிரச்னை இல்லாமல் இல்லை. நிறையவே இருந்தது. தேசிய அரசியலில் தமிழர்கள் கணிசமாகவும் காத்திரமாகவும் பங்களித்துக்கொண்டிருந்- தாலும், அவர்களை ஏற்பதில் சிங்கள அரசியல்வாதிகளுக்கு அப்போதே தயக்கங்களும் சங்கடங்களும் இருந்தன. சிலோன் தேசிய காங்கிரஸுக்குள்ளேயே இருந்த தமிழ்த் தலைவர்களுடன் எப்போதும் சட்டை பிடிக்கத் தயாராகச் சிலர் இருக்கவே செய்தார்கள்.
இதனிடையே தர்மபாலாவினால் உந்தப்பட்டு அரசியலுக்குள் நுழைந்த இளைஞர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைய இளைஞர் பேரவைகளை உருவாக்கத் தொடங்கியிருந்தார்கள். அதற்கு முன்பே யாழ்ப்பாணத்தில் ஓர் இளைஞர் அமைப்பு தொடங்கப்பட்டுவிட்டிருந்தது. 1924-ல் யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் என்று அதற்குப் பெயரும் இடப்பட்டது.
இந்த இளைஞர்களின் அப்போதைய ஆதர்சமாக இலங்கையில் யாருமில்லை. மாறாக, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தமக்கு முன்னுதாரணமாகக் கொள்ளத் தொடங்கினார்கள். காந்தியும் நேருவும் படேலும் சுபாஷும் போட்டோக்களாகவும் புத்தகங்களாகவும் கப்பலேறி இலங்கைக்கு வந்து சேர்ந்தது அப்போதுதான்.
இந்த இளைஞர் காங்கிரஸின் கொள்கைகள் மிக எளிமையானவை. சுதந்திரமல்ல; சுயாட்சி அதிகாரம் வேண்டும். தேசிய ஒற்றுமை என்பது பேச்சளவில் அல்லாமல் சிங்கள - தமிழர் ஒற்றுமை உண்மையிலேயே உறுதிப்பட வேண்டும். சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
மகாத்மா காந்தியை இலங்கைக்கு அழைத்தது, 1931-ல் நடைபெற்ற ஒரு மாகாண கவுன்சில் தேர்தலைப் புறக்கணித்தது, ஒரு ஸ்பின்னிங் மில் வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தியது, சிங்கள மொழியில் ஒரு பத்திரிகை நடத்தியது என்று கொஞ்சம் தீவிரமாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு வகையில் தர்மபாலாவின் இளைஞர் கோஷ்டிகள் பெருகவும் மூலைக்கொரு பேரவை தொடங்கவும் இந்த யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர்களின் அமைப்பு ஒரு முக்கியக் காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். இதில்கூடத் தமிழர்கள் முந்திக்கொண்டார்களே என்கிற கடுப்பு அவர்களுக்கு.
யாழ்ப்பாணத் தமிழர்களைப் பார்த்து தர்மபாலா வழிச் சிங்கள இளைஞர்கள் பேரவைகளாக உற்பத்தி செய்துகொண்டிருந்தது, தர்மபாலாவின் எதிர்கோஷ்டி சிங்கள அரசியல்வாதிகளின் வயிற்றில் மிளகாய் சேர்த்து புளியைக் கரைத்தது. ஏதாவது செய்து தங்களது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள மிகவும் விரும்பினார்கள்.
சிங்களர் நலனுக்காகப் பாடுபடுவது தாங்கள்தாம் என்பதை நிறுவுவது ஒன்று; ஏற்கெனவே தொடங்கிவைக்கப்பட்டிருந்த சிங்களர் - தமிழர் பிரிவினைத் திருவிழாவுக்கு தூபம் போடவேண்டியது மற்றொன்று. என்ன செய்யலாம்?
1931-ம் ஆண்டு டி.எஸ். சேனநாயகாவின் முயற்சியால் சில மாபெரும் குடியேற்றத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
காலம் காலமாகத் தமிழர்கள் வசித்து வரும் பகுதிகளில் சிறுகச் சிறுக சிங்கள மக்களைக் குடியமர்த்துவது. அவர்களுக்கு நிலம் கொடுப்பது. வீட்டு வசதி செய்துகொடுப்பது. அங்கே புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது.
இதன்மூலம் மூன்று லாபங்கள். தமிழர்களை ஓரம்கட்டலாம். சிங்களர்களைச் சந்தோஷப்படுத்தலாம். தர்மபாலா பிராண்ட் அரசியல் மயக்கத்திலிருந்து சிங்கள இளைஞர்களை வெளியே கொண்டுவந்து சிலோன் தேசிய காங்கிரஸ் நீரோட்டத்தில் இணைக்கலாம்.
சேனநாயகாவின் முயற்சியின் விளைவாக, முதன் முதலில் கல்லேய குடியேற்றத் திட்டம், கந்தளாய் அல்லை குடியேற்றத் திட்டம் என்ற இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. வருஷம் 1931.
அவை தமிழர் பகுதிகள். பெரும்பாலும் மத்தியதர, கீழ் மத்தியதர, கீழ்த்தட்டு மக்கள் அதிகமும் விவசாயிகள் வசித்து வந்த பகுதிகள். முஸ்லிம்களும் இருந்தார்கள். தமிழ் பேசும் முஸ்லிம்கள்.
சட்டென்று ஒருநாள் காலை கட்சிக் கொடி நட்டு, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பது போன்ற செயலல்ல இது. திட்டமிட்டுச் செய்யப்பட்டது. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், என்ன பிரச்னை வந்தாலும் சமாளிக்கத் தயாராகத் தொடங்கப்பட்டது.
ஆனால் என்ன பெரிய பிரச்னை வந்துவிடும்?
அன்றைய காலகட்டத்தில் சிங்களர்களாவது அரசியல் தளத்தில் மட்டும் இரண்டாகப் பிரிந்திருந்தார்கள். தர்மபாலா கோஷ்டி, சேனநாயகா கோஷ்டி. தமிழர்கள்?
அரசியலுக்கு அப்பாலே அவர்கள் மூன்றாக அல்லவா இருந்தார்கள்? ஆதிகுடித் தமிழர்கள் ஒருபக்கம். தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஒரு பக்கம். இந்தியாவிலிருந்து கொண்டுபோய் நடப்பட்ட மலையகத் தமிழர்கள் ஒரு பக்கம்.
இதற்குள்ளே ஆயிரத்தெட்டு ஜாதிகள், நூற்றியெட்டு பிரிவுகள்.
தவிரவும் அதிகார வர்க்கத்துடன் நெருக்கமாகவும் அதிகாரம் செலுத்தக்கூடியவர்களாகவும் இருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் (கொழும்புவில் மையம் கொண்டிருந்தவர்கள் இவர்கள்) முற்றிலும் வேறானவர்களாக இருந்தார்கள்.
காலனியாதிக்க தேசமாக இருந்த இலங்கைக்குள் சில குட்டிக் காலனிகள் அமைக்க அன்றைக்கு சிங்களத் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சியை- அவர்கள் அளவு, சொல்லப்போனால் அவர்களைக் காட்டிலும் ஒரு படி மேலான செல்வாக்குடன் இலங்கை அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொன்னம்பலம் ராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்கள் நினைத்திருந்தால் முளையிலேயே தடுத்திருக்க இயலும்.
ஆனால் செய்யவில்லை.
இது தமிழர்களுக்கிடையே இருந்த பிரிவினையை சிங்களர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் மிகச் சரியாகச் சுட்டிக்காட்டிய விஷயங்களுள் முக்கியமானது.
நாற்பத்தெட்டு பிப்ரவரியில் பிரிட்டிஷ் அரசு விடைபெற்றுக்கொண்டு இலங்கைக்குப் பூரண சுதந்திரமும் பெரும்பான்மை மக்களான சிங்களர் வசம் ஆட்சியுரிமையும் அளித்துவிட்டுக் கப்பலேறிய பிறகு மேற்கொள்ளப்பட்ட முதல் காரியமே தமிழர் தலையில் கைவைத்ததுதான்.
அதற்குக் குடியுரிமைச் சட்டம் என்று பெயர். குடி அகல்வுச் சட்டம் என்று தமிழர்கள் சொல்வார்கள். ஒருவகையில் அதுவே சரி.
இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம், சிங்கள அரசு குப்பை என்று கருதுவதைப் பெருக்கித் தள்ளுவது.
எது குப்பை? தமிழர்கள். ஆதியிலிருந்து இருக்கிறவர்கள் போதாதென்று பாதியில் இந்தியாவிலிருந்து வேறு வந்து குவிந்திருக்கிறார்கள். மலையகம் பெரிது. விளைச்சல் பெரிது. பிரிட்டிஷார் மூட்டை கட்டிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இனி அங்கே தமிழர்கள் இருப்பது அபாயமல்லவா? இத்தனை வருடங்களாக இருந்த தமிழர்கள், உழைத்த நிலத்துக்கு ஆளுக்கொரு வேலி போட்டுக்கொண்டு விட்டால்?
இதனை உத்தேசித்துக் கொண்டுவரப்பட்டதே அந்தச் சட்டம்.
இதோ பார், இனி இது சுதந்திர இலங்கை. பவுத்தம் ஆளும் மதம். சிங்களம் ஆளும் மொழி. தமிழர்கள் சிறுபான்மை இனத்தவர்கள். சரி ஒழியட்டும். ஆதிகாலம் தொட்டு இருந்து வருகிறார்கள். நம்புகிறோம். ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நாலைந்து தலைமுறைகளாகவாவது இருப்பதற்கு சாட்சி வேண்டும். உன் அப்பா யார்? தாத்தா என்ன செய்துகொண்டிருந்தார்? கொள்ளுத்தாத்தாவுக்கு யாழ்ப்பாணத்தில் வீடு இருந்ததா? எள்ளுத் தாத்தா ராஜகைங்கர்யம் செய்திருக்கிறாரா? அவருக்கு முன்னால்?
என்னது? உன் அப்பா இந்தியாவில் இருக்கிறாரா? நீ பிழைக்க வந்தாயா? சரி, பிழைத்தது போதும், நடையைக் கட்டு.
நம்புங்கள். சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்கள் ஒரே நாளில் தங்கள் குடியுரிமையை இழந்து நடுத்தெருவில் நின்றார்கள். இனி அவர்களுக்குக் கல்வி கிடையாது. வேலை வாய்ப்புகள் கிடையாது. வோட்டுரிமை கிடையாது. தொழில் செய்ய அனுமதி கிடையாது.
போய்விட வேண்டுமென்பதுதான் நோக்கம். இருந்தே தீருவேன் என்றால் இதெல்லாம் கிடையாது. இருக்கவிடாமல் இருக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவில் எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு விளம்பர இடைவேளை.
இலங்கையில் மிக மோசமான ஒடுக்குமுறை என்பது அத்தேசம் சுதந்திரம் பெற்ற ஆண்டே தொடங்கியது. சிங்கள தேசியவாதிகளின் செயல்திட்டமே அதுவாகத்தான் இருந்தது.
சுமார் நானூறு ஆண்டுகளாக யார் யாரோ வந்து ஆண்டு அனுபவித்துவிட்டார்கள். முதன் முதலாக சுதந்திரம் என்று ஒன்று அகப்பட்டிருக்கிறது. உலக யுத்தமெல்லாம் முடிந்து அமைதி மாதிரி ஏதோ ஒன்று எல்லா இடங்களிலும் தழைக்க ஆரம்பித்திருக்கிறது. நாமும் கொஞ்சம் அனுபவிப்போம், என்ன பிரச்னை என்றாலும் நிதானமாகப் பார்ப்போம் என்று யாரும் நினைக்கவில்லை.
சுதந்திரம் பெற்றதே தமிழர்களை ஒழிக்கத்தான் என்பதாக அவர்கள் எடுத்துக்கொண்டதற்கு அரசியல்ரீதியிலான பிரமாதமான காரணங்கள் ஏதுமில்லை. இன உணர்வு என்பது வன்மமாகப் பரிமாண வளர்ச்சி பெற்றதன் விபரீத விளைவு. சில அரசியல்வாதிகள் இதற்கு தூபமிட்டிருக்கிறார்கள்.
ஆனால் அடிப்படையில் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்கள் மீது ஆதியிலிருந்தே இருந்து வந்த எதிர்ப்பு மற்றும் வெறுப்புணர்வுக்குக் காரணங்கள் தேடிக்கொண்டிருப்பது நேர விரயம்.
கல்வி, பொருளாதார, சமூகக் கட்டமைப்புத் தளங்களில் தமிழர்கள் தொடக்கத்திலிருந்தே அங்கு மேம்பட்டிருந்ததைத்தான் இதன் காரணமாகச் சொல்லவேண்டும்.
(தொடரும்)
நன்றி
குமுதம்
0 விமர்சனங்கள்:
Post a Comment