மூன்று மாதத்துக்குள் முல்லைத்தீவை கைப்பற்றுவோம் தென்பகுதியில் 117 தற்கொலைக் குண்டுதாரிகள் ஊடுருவல் - அரசாங்கம் அறிவிப்பு
முல்லைத்தீவை கைப்பற்றி விடுதலைப் புலிகளுக்கு முழுமையான தோல்வியை பெற்றுக் கொடுக்கும் இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்னும் மூன்று மாதகால எல்லைக்குள் முல்லைத்தீவையும் கைப்பற்றி வன்னிப் பரப்பிலும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வோம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தோல்வியை தழுவிக் கொண்டுள்ள புலிகள் கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக 17 தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைத் தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில், தமிழீழ கனவுலகின் தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சியை கைப்பற்றியுள்ள எமது படையினர் முல்லைத்தீவை கைப்பற்றி விடுதøலப் புலிகளுக்கு முழுமையான தோல்வியை பெற்றுக் கொடுக்கும் இறுதி யுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
அங்கு மக்களை புலிகள் பலிக்கடாக்களாக பணயம் வைத்துள்ளனர். எனவே படை நடவடிக்கைகள் அனைத்தும் மக்களை பாதுகாக்கும் விதத்திலேயே முன்னெடுக்கப்படும். இன்னும் மூன்று மாதகால எல்லைக்குள் முல்லைத்தீவையும் கைப்பற்றி வன்னிப் பரப்பில் பாதுகாப்புத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டவுடன் அரசாங்கம் உடனடியாக அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
இதன்போது வெளிநாடுகளின் உதவிகள் கோரப்படும் அவ்வாறான உதவிகளை அரசாங்கம் ஊடாக வடபகுதியின் அபிவிருத்திக்கு செலவிடப்படும். தென்பகுதி மக்கள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திட்டமாகும். இது தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் மனிதாபிமான யுத்தமாகும்.
நாம் பயங்கரவாதத்தை எதிர்க்கின்றோம். தமிழ் மக்களை எதிர்க்கவில்லை. ஆனால் ஒரு சிலர் ஜனாதிபதியும் அரசாங்கமும் இனவாதிகளென சித்தரிக்க முனைகின்றனர். சர்வதேச மற்றும் தேசியரீதியில் மேற்கொள்ளப்படும் இப்பொய்ப் பிரசாரங்களை முல்லைத்தீவை மீட்டு முறியடிப்போம்.
வீரகேசரி நாளேடு






0 விமர்சனங்கள்:
Post a Comment