எம்.ரி.வி., சிரச ஊடக வலையமைப்பின் கலையகம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்
பன்னிப்பிட்டிய, தெ பானமவில் உள்ள எம்.ரி.வி, சிரச, சக்தி ஊடக வலையமைப்பின் பிரதான கலையகம் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் இன்று அதிகாலை மேற்கொண்ட தாக்குதலில் பிரதான கட்டுப்பாட்டறை முற்றாக சேதமடைந்ததுடன் நிலையத்தின் ஏனைய பகுதிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலையடுத்து வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளன.
அதிகாலை 2.10 மணியளவில் இலக்கத்தகடற்ற வெள்ளை வானில் வந்த 15க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கலையகத்தை கண்மூடித்தனமாக தாக்கியதுடன் பிரதான கட்டுப்பாட்டறையினை தீ வைத்து எரித்துள்ளனர். கட்டுப்பாட்டறைக்குள் கண்மூடித்தனமாக இவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தையும் நடத்தியுள்ளனர்.
வெள்ளை வானில் வந்தவர்களில் சிலர் கலையகத்தின் பிரதான வாயிலால் ஏறிக் குதித்து கதவினை திறந்துள்ளனர். இதனையடுத்து ரி56 ரக துப்பாக்கிகள், கிரனேட்டுக்கள், வாள்கள், இரும்புக் கம்பிகளுடன் உட்புகுந்த ஆயுததாரிகள் நிலையத்தின் பாதுகாப்பு அறைக்குள் சென்று அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களை தாக்கி தலையை குனிந்து கொண்டிருக்குமாறு அச்சுறுத்தி விட்டு உள்நுழைந்துள்ளனர்.
கலையகத்துக்குள் உட்பிரவேசித்த குழுவினர் அகப்பட்ட பொருட்களையெல்லாம் அடித்துடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் நிலையத்திலுள்ள கண்ணாடிகளை உடைத்தெறிந்துள்ளனர். ஊழியர் ஒருவரை பிடித்த ஆயுததாரிகள் பிரதான கட்டுப்பாட்டறையினை காட்டுமாறும் இல்லாவிட்டால் சுட்டுக் கொல்லப்போவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து குறித்த ஊழியர் பிரதான கட்டுப்பாட்டறையினை காண்பித்துள்ளார். கட்டுப்பாட்டு அறைக்குள் உட்பிரவேசித்த ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் தீ வைத்தும் எரித்துள்ளனர்.
பிரதான கட்டுப்பாட்டறையை தீ மூட்டி எரித்தவர்கள் அங்கிருந்து வெளியேறி நிலையத்தில் காணப்பட்ட கணனிகள் மற்றும் முக்கிய இயந்திரங்களையும் அடித்துடைத்துள்ளனர். கண்ணாடிகளையும் அவர்கள் துவம்சம் செய்தனர். சுமார் அரை மணிநேரம் கலையகத்துக்குள் நின்று அட்டகாசம் புரிந்த ஆயுதக் குழுவினர் 2.40 மணியளவிலேயே நிலையத்தை விட்டுச் சென்றுள்ளனர்.
ஆயுததாரிகள் கலையகத்துக்குள் புகுந்ததும் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன் திரும்பிச் செல்லும்போது கிரனேட் ஒன்றையும் வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த கிரனேட் வெடிக்காமையினால் இதன் மூலம் ஏற்படவிருந்த சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கலையகத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் கடமையில் இருந்த ஊழியர்கள் மீதும் கடும் தாக்குதலை நடத்தி விட்டே சென்றுள்ளனர். கலையகத்துக்குள் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பின்னரே ஆயுததாரிகள் தப்பிச் சென்றுள்ளனர். ஆயுததாரிகள் சென்றதும் சம்பவம் குறித்து பாதுகாப்பு ஊழியர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து தீயணைக்கும் படையினரும் பொலிஸாரும் ஸ்தலத்திற்கு வந்து போதும் கலையகத்துக்குள் குண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீயணைப்புப் படையினர் உடனடியாக உள்ளே சென்று தீயை அணைக்க முன்வரவில்லை.
இதனால் இராணுவ குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வந்த பின்னரே தீயணைப்பு படையினர் தமது கடமையில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்தே தீ பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊழியர் கருத்து
வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டு உள்நுழைந்த ஆயுததாரிகள் என்மீது தாக்குதல் நடத்தினர். பிரதான கட்டுப்பாட்டறையினை காட்டுமாறு கேட்டனர். காட்டாவிட்டால் கொல்லப்படுவாய் எனவும் எச்சரித்தனர். இதனையடுத்து நான் கட்டுப்பாட்டறையினை காண்பித்தேன் என்று சம்பவ நேரம் கடமையிலிருந்த எம்.ரி.வி. ஊடக நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அதிகாரி
எமது ஊடக நிறுவனத்தின் வாகனம் ஒன்று அதிகாலை 2.10 மணியளவில் வந்தது. அதனை பின்தொடர்ந்து இலக்கத் தகடற்ற வெள்ளை நிற வான் வந்தது. இதனைக் கண்டதும் 119 என்ற அவசர பொலிஸுக்கு தொலைபேசி எடுக்க நாம் முயன்றோம். அதற்குள் ஆயுததாரிகள் நிலைய வளவுக்குள் பிரவேசித்து விட்டனர் என்று இங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அறைக்குள் ஆயுததாரிகள் நுழைந்த போது நாம் எம்மிடமிருந்த இரண்டு குறிபார்த்து சுடும் துப்பாக்கிகளை தூக்கினோம். ஆனால், ஆயுததாரிகள் எமது தலையில் ரி 56 ரக துப்பாக்கிகளை வைத்து அச்சுறுத்தியதுடன் எம்மிடருந்த துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து என்னையும் மற்றொரு பாதுகாப்பு உத்தியோகத்தரையும் சேட் கொலரில் பிடித்து இழுத்து வந்த ஆயுததாரிகள் தலையை குனிந்து கொண்டிருக்குமாறு கூறிவிட்டு நிலையத்துக்குள் சென்றனர். அவர்கள் தாக்குதல் நடத்திவிட்டு சென்ற பின்னரே நாம் தலையை நிமிர்ந்து பார்த்தோம் என்றும் அவர் கூறினார்.
அசோகா டயஸ் கருத்து
சம்பவம் தொடர்பாக நிலைய தலைமையக பொறுப்பதிகாரியான அசோக டயஸ் கூறுகையில், இன்று அதிகாலை 2.10 மணியளவில் முகங்களை மறைத்துக் கொண்டு சுமார் 15க்கும் அதிகமானோர் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு பிரதான நுழைவாயில் ஊடாக பன்னிப்பிட்டிய தெப்பானவில் அமைந்துள்ள சிரச ஒளிபரப்பு நிலையத்திற்குள் உட்புகுந்துள்ளனர். அங்கு இரவு நேர கடமையிலிருந்த ஊழியர்களை தாக்கியதோடில்லாமல் நிலையத்தை நோக்கி குண்டுகளை எறிந்ததோடு துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டுள்ளனர்.
இதன்போது எமது ஒளிபரப்பு தலைமையகம் முற்றாக செயலிழந்துள்ளது. பிரதான கட்டுப்பாட்டு மற்றும் ஒலி, ஒளிபரப்பு நிலையங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. நிலையத்தின் அறைகள் யாவும் சேதமாக்கப்பட்டுள்ளதால் மேலதிக சேதவிபரங்கள் தொடர்பாக கூறமுடியாத நிலை உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை எமது தலைமையகம் மீது இடம்பெற்ற பெற்றோல் குண்டு வீச்சிற்கு பின்பு கடந்த திங்கட்கிழமை இலக்க தகடு குறிக்கப்படாத வான் ஒன்று அங்கும் இங்குமாக சென்று ஒளிபரப்பு தலைமை நிலையத்தை நோட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நாங்கள் உடனடியாக மஹாரகம பொலிஸுக்கு தெரியப்படுத்தியிருந்தோம். இதற்கு பின்னரே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸாரும் படையினரும் விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவத்தை கேள்வியுற்று அரசியல்வாதிகளும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பெருமளவானோர் எம்.ரி.வி. தலைமையகத்துக்கு நேற்று விஜயம் செய்தனர். கலையகத்தின் பிரதான கட்டுப்பாட்டறை தாக்குதலில் முற்றாக சேதமடைந்துள்ளமையினால் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள் நேற்று முற்றாக ஒளி, ஒலிபரப்பப்படவில்லை.
வீரகேசரி நாளேடு






0 விமர்சனங்கள்:
Post a Comment