டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணத்தில் உயர் மட்ட மாநாடு
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும், வடமாகாணத்திற்கான விஷேட செயலணியின் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் யாழ்.மாவட்டத்தின் நிர்வாகம், அபிவிருத்தி மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பான உயர்மட்ட மாநாடு நடைபெற்றுள்ளது.
அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இந்த உயர்மட்ட மாநாட்டில் யாழ்.அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் உட்பட மாவட்டத்தின் உதவி அரசாங்க அதிபர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.குடா நாட்டு மக்களின் நலனைக் கருத்திற் கொண்டும், அம்மக்களின் தேவைகளை இனங்கண்டும் தாம் மேற்கொள்ளவுள்ள பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கக் கூடிய விதத்தில் அரச பணியாளர்கள் தங்களது பங்களிப்புகளை வழங்க முன்வரும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் நல்லதொரு நிலைக்குக் கொண்டு வர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலன்சார்ந்த பணிகளைத் தாம் முன்னெடுக்கும் போது அதற்குத் தடையாகவோ அலலது அப்பணிகளைத் திசை திருப்பும் முகமாகவோ எவரும் நடந்து கொள்ளக் கூடாதெனக் கேட்டுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் நலன் கருதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் எவருக்காவது மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் அதனைத் தமக்குத் தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள குடாநாட்டு மக்களின் வாழ்க்கை நிலையைத் துரிதகதியில் இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டியதின் அவசியத்தை உணர்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதன்பொருட்டு பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய திட்டங்களைச் சிறந்த முறையில் முன்னெடுப்பதின் மூலம் எமது மக்களைப் பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய உயர்மட்ட மாநாட்டின் போது அண்மைக் காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பிரதேச செயலாளர் பிரிவுகள் வாரியாக வழங்கப்பட்ட நிவாரணங்கள் குறித்தும், சேதங்கள் தொடர்பாகவும் பிரதேச செயலாளர்களினால் அமைச்சருக்கு எடுத்துக் கூறப்பட்டது.






0 விமர்சனங்கள்:
Post a Comment