உலகத் தமிழர்களின் ஆதரவோடு சவால்களை புலிகள் எதிர்கொள்வர் - அரசியல் பொறுப்பாளர் நடேசன் தெரிவிப்பு
தமிழ் மக்களின் ஆதரவு உலகத் தமிழ் சமூகத்தின் ஆதரவுடன் விடுதலைப் புலிகள் தற்போதைய சவால்கள், எதிர்கால சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள் என விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றியுள்ளமை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை முக்கியத்துவமற்ற பின்னடைவு என இணையத்தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ள அவர், இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:-
கிளிநொச்சி நகரை முன்னரும் இலங்கை இராணுவத்தினர் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் கைப்பற்றியுள்ளனர். இதேபோன்று நாங்களும் அந்த நகரை முன்னர் பல தடவைகள் கைப்பற்றியுள்ளோம். நகரத்தை எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து நிர்வாக உட்கட்டமைப்புத் தேவைகளை நிறைவேற்றியுள்ளோம்.
கிளிநொச்சியிலேயே முன்னரும் இலங்கைப் படையினர் வரலாற்றுத் தோல்விகளைச் சந்தித்துள்ளனர்.
தேசமொன்றின் உண்மையான மக்கள் பிரதிநிதிகளைத் தனிமைப்படுத்தி ஆக்கிரமிப்பு இராணுவமொன்றின் கைப்பொம்மைகளையும் துணை இராணுவத்தினரையும் மக்கள் பிரதிநிதிகளாகக் காண்பிப்பதற்கான முயற்சிகள் பலனளிக்கா.
1977 ஆம் ஆண்டின் தேர்தலில் ஜனநாயக முறை ஊடான ஆணை மூலம் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளைத் தெளிவாக வெளிப்படுத்தி விட்டனர்.
இதன் பிறகு மக்களின் அந்த ஆணையை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தை எமது இயக்கம் முன்னெடுத்துச் செல்கின்றது.
விடுதலைக்காகப் போராடும் தேசத்தின் உண்மையான பிரதிநிதித்துவம் என்பது, மக்கள் இட்ட ஆணைக்காக அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தின் மூலமாக வருவது.
எமது மக்களும் உலகின் முழுத் தமிழ் சமூகமும் எம்முடன் உள்ளன. அரசியல் கைக்கூலிகளைப் பதவியிலமர்த்தும் அர்த்தமற்ற நடவடிக்கை பலனளிக்காது. கொழும்பின் நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்து சில தரப்புகள் கருத்து வெளியிட்டுள்ளன. இது ஆபத்தானது இல்லையா?
நாங்கள் முன்னரும் பல இராணுவ, அரசியல் சவால்களை எதிர்கொண்டுள்ளோம். அவற்றை மக்களின் ஆதரவோடுவெற்றிகரமாக முறியடித்துள்ளோம்.
எமது மக்களின் உறுதியான ஆதரவு மற்றும் உலக சமூகத்தின் தார்மீக ஆதரவுடன் தற்போதைய சவால்களையும் வெற்றி காண்பதற்கு உறுதிபூண்டுள்ளோம்.
நாங்கள் 30 வருடங்களாக எமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். மக்களின் ஆதரவு தற்போதைய எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவும் என உறுதியாக நம்புகிறோம்.
இலங்கை அரசு தமிழ் மக்கள்மீது கோழைத்தனமான, கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு மோசமான இனக்கொலையை முன்னெடுக்கின்றது.
இவ்வாறான தாக்குதல்கள் காரணமாகக் காயங்கள் ஏற்படுவதிலிருந்து எவ்வாறு தங்களைப் பாதுகாப்பது என்பது குறித்து எமது மக்களுக்கு அறிவுறுத்தி பயிற்சியளித்துள்ளோம்.
இனக் கொலைகளை எதிர்கொள்வதற்கான துணிச்சலையும் மனவுறுதியையும் எமது மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் - என்றார்.
Uthayan






0 விமர்சனங்கள்:
Post a Comment