3 லொறிகளில் உணவுப்பொருட்கள்; புலிகளின் 11 சடலங்களும் ஐ.சி.ஆர்.சியினால் கொண்டு செல்லப்பட்டன என்கிறது இராணுவம்
ஒரு வார காலத்தின் பின்னர் வன்னிப்பிரதேசத்திற்கு 3 லொறிகளில் வியாழனன்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் சுமார் 100 லொறிகளில் உலக உணவுத் திட்டம் உட்பட மற்றும் அரச அதிகாரிகளின் வாகனத்தொடரணியில் வன்னிப்பிரதேசத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.
இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் கடும் சண்டைகள் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையின் பின்னர் வன்னிப்பகுதிக்கான வீதி திறக்கப்படவில்லை. போக்குவரத்துக்கள் தடைபட்டிருந்தன.
இதனால் வன்னிப்பிரதேசத்திற்குச் சென்றிருந்த லொறிகள் உணவுப் பொருட்களை இறக்கிவிட்டு வவுனியாவிற்குத் திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது என்றும், நேற்று வியாழக்கிழமை வன்னிப்பகுதிக்கான போக்குவரத்து நடைபெற்ற போதிலும் லொறிகள் இல்லாத காரணத்தினால் 3 லொறிகளில் மாத்திரமே உணவுப் பொருட்களை அனுப்பக் கூடியதாக இருந்தது என்றும் வவுனியாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, வன்னிக்களமுனைகளில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு, வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 11 சடலங்களும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரால் வன்னிப்பகுதிக்கு நேற்று எடுத்துச் செல்லப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அண்மைய வாரங்களாக விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் இடையே சீரான போக்குவரத்து இடம்பெறாததனாலும், அடிக்கடி போக்குவரத்துக்கள் தடைபட்டிருந்ததனாலும், வவுனியா வைத்தியசாலையில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 80 சடலங்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய வவுனியா பூந்தோட்டம் பகுதியில் விசேடமான ஒரிடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சடலங்களை விடுதலைப்புலிகள் உரிமை கோரி, அவற்றை தம்மிடம் ஒப்படைப்பதற்குரிய வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரிடம் விடுதலைப் புலிகள் கோரியிருந்தார்கள் என்றும், இருந்த போதிலும், வன்னிக்கான வீதி மூடப்பட்டிருந்ததுடன், அந்த நிலையிலும் இந்தச் சடலங்களை வன்னிப்பகுதக்குக் கொண்டு செல்வதற்கு தமது பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை மோதல்களில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினருமே உறுதிப்படுத்த தவறியதனால், அந்தச் சடலங்களை வன்னிப்பகுதிக்குத் தம்மால் கொண்டு செல்ல முடியாமல் போனது என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறை சடலங்களினால் நிறைந்திருந்ததுடன், மேலும் மேலும் கொண்டு வரப்படுகின்ற சடலங்களை குளிர் நிலையில் பாதுகாப்பாக வைப்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டிருந்தது என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கமைய விடுதலைப் புலிகளின் 80 சடலங்களும் இரண்டு தடவைகளில் அரச செலவில் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஏற்பாட்டில் அவர்களது முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டன.
பொங்கல் தினமாகிய கடந்த 14 ஆம் திகதி 42 சடலங்களும், கடந்த 20 ஆம் திகதி 38 சடலங்களும் இவ்வாறு சர்வதேச செஞ்சிலுவைக்குழு பிரதிநிதிகளின் முன்னிலையில் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் விசேடமாக அடையாளமிடப்பட்டுள்ள ஓரிடத்தில் பொலிஸார் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களினால் அடக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி
0 விமர்சனங்கள்:
Post a Comment