3 ஆயிரம் இந்திய படையினரை இலங்கைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு
இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த துரோகத்தை மறைக்கவே வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றுள்ளார் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு;
கடந்த ஒரு வாரமாக முல்லைத்தீவுப் பகுதியில் சிங்கள இராணுவம் நடத்தும் தாக்குதலில் தினமும் நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். திங்கட்கிழமை கூட பாதுகாப்பான பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் தங்கியிருந்த 500 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்திய அரசு கொடுத்துள்ள ஏவுகணைகளைப் பயன்படுத்தித்தான் இலங்கை இராணுவம் இத்தகைய படுகொலையை நடத்தி வருகிறது.
இலங்கை விமானப் படைக்கு ராடார்களைக் கொடுத்தது. சிங்கள விமானிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்திய விமானப் படையின் தொழில்நுட்பப் பிரிவினரை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. பலாலி விமானத் தளத்தையே இந்திய அரசின் செலவில் பழுதுபார்த்துக் கொடுத்தது. ஏராளமான இராணுவத் தளபாடங்களை இலங்கைத் தரைப்படைக்கு வழங்கியது என இந்திய அரசின் தமிழினத் துரோகம் தொடர்கிறது.
துரோகத்தின் உச்சக் கட்டமாக இலங்கை இராணுவத் தாக்குதலுக்கு உதவ இந்திய இராணுவத் தாங்கிகளையும், 3,000 இராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சித் துறைமுகத்திலிருந்து அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன.
இது உண்மையாக இருக்கக் கூடாது என உள்ளம் பதைக்கிறது. எனினும் இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்திலிருந்து ஏராளமான இராணுவத் தாங்கிகள் ஈரோடு வழியாக கேரளாவுக்கு அனுப்பப்பட்ட படங்கள் செய்தித் தாள்களில் வெளியாகியுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அரசு செய்துவந்துள்ள காரியங்களை எண்ணும் போது இதையும் மத்திய அரசு செய்யக்கூடும் என்ற எண்ணமே வலுக்கிறது.
7 கோடி தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு தமிழ் இனத்துக்குச் செய்யும் துரோகத்தை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்.
இந்த துரோகங்களை மறைக்கவே வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 3 மாதமாகப் போர்நிறுத்தம் பற்றி ஒருவார்த்தை கூட மத்திய அரசு கூறவில்லை. அது எங்கள் வேலையில்லை எனக் கூறிய பிரணாப் முகர்ஜி, இப்போது மட்டும் இலங்கை செல்லும் மர்மம் என்ன?
உலகெங்கும் உள்ள தமிழர்கள் பதறிய நெஞ்சத்தோடு உள்ள நிலையில், பிரணாப் முகர்ஜி திடீரென விடுதலைப் புலிகளுக்குக் கண்டனம் தெரிவிப்பது ஏன்?
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை 900 தடவைக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடத்திய போது இலங்கையைக் கண்டித்து இந்தியா ஒருவார்த்தையாவது கூறியதுண்டா?
எனவே, தமிழக மக்களையும் உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்காக அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறி ஏதோ திடீர் ஞானோதயம் ஏற்பட்டதைப் போல பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றுள்ளார் எனக் கூறியுள்ளார் வைகோ.
0 விமர்சனங்கள்:
Post a Comment