புலிகளின் நெருங்கிய நண்பனான கலைஞரே இலங்கை செல்லவேண்டும் என்கிறார் ஜெயலலிதா
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தார் சென்னை: இலங்கைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் அழைப்பை நிராகரித்திருக்கும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விடுதலைப் புலிகளின் தீவிரமான ஆதரவாளரான முதலமைச்சர் கருணாநிதியே செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற சந்திப்பின் போது தமிழக முதலமைச்சர் கருணாநிதியையும் தமிழக எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவையும் இலங்கைக்கு வருகைதருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை சென்னையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் நிராகரித்திருக்கும் ஜெயலலிதா , விடுதலைப் புலிகளுக்குத் தான் கடுமையான எதிராளியெனவும் ஆயுதங்களை கைவிடுமாறு தான் கேட்டால் அவர்கள் செவிமடுக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
அதேசமயம், கருணாநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் எனவும் அவர் புலிகளின் தீவிர ஆதரவாளரும் நெருங்கிய நண்பருமாகையால் அவர் செல்வதை புலிகள் கவனத்தில் எடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டாலேயே இலங்கையில் யுத்த நிறுத்தத்தை வென்றெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்ததாக ஏஜன்சி செய்திகள் தெரிவித்தன.
0 விமர்சனங்கள்:
Post a Comment