வன்னி நிலைமை; ஐ.நா. பிரதிநிதிக்கு தமிழ் கூட்டமைப்பினர் விளக்கம்
இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு பிரதிநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை சந்தித்து நேரில் முறையிட்டனர்.
கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் இணைப்பாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள வதிவிடப் பிரதிநிதி நீல்புகுணேவை சந்தித்துப் பேசினர்.
வன்னியில் நடைபெறுகின்ற போரின் பொதுமக்கள் கொல்லப்படுவது மற்றும் படுகாயமடைவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கவலையும் கண்டனமும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக நீல்புகுணே கூறியுள்ளார்.
போரில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகள், அவலங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தகவல்களை பெற்று வருவதாகவும் நீல்புகுணே தெரிவித்துள்ளார்.
சுமார் ஒரு மணித்தியாலமாக நடைபெற்ற இச்சந்திப்பில் அல்லற்படும் மக்களுக்கு உதவிகள் வழங்குவது தொடர்பாக அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கில் விரைவில் கூட்டம் ஒன்று நடைபெறும் என்றும் நீல்புகுணே கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இடம்பெயர்ந்து செல்கின்ற மக்கள் மீது படையினர் வேண்டுமென்றே ஷெல் தாக்குதல் நடத்துவதாகவும் இதன் காரணமாகவே பெருமளவிலான மக்கள் கொல்லப்படுகின்றனர் என்றும் நீல்புகுணேக்கு எடுத்து விளக்கியதாக மாவை சேனாதிராஜா கூறினார்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருந்துகள் இல்லை எனவும் ஷெல் பீரங்கி தாக்குதலில் மருத்துவமனைகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டது என்றும் நீல்புகுணேக்கு விளக்கமளித்ததாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
காயமடைந்த மக்களை வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்ற ஒன்பது வாகனங்கள் படையினரால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்தும் விளக்கமளித்ததாக மாவை சேனாதிராஜா கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment