கிளிநொச்சி, பரந்தனில் இராணுவத்தின் மும்முனை முன்நகர்வுகள் முறியடிப்பு! - 41 சிப்பாய்கள் பலி; 102 பேர் காயம் என்கின்றனர் புலிகள்
கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளில் படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நேற்று முறியடிக்கப்பட்டுள்ளன என்றும், இதில் 41 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 102 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் புலிகள் தரப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மேலும் அத்தரப்பு வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு-
பரந்தனில் இருந்து கிழக்காக முரசுமோட்டை நோக்கியும், பன்னங்கண்டி நோக்கியும், கிளிநொச்சியில் கனகாம்பிகைக்குளம் பகுதியில் இருந்து இரணைமடு நோக்கியும் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் படையினரால் செறிவான ஷெல் தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் இம்மும்முனை முன்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
முன்நகர்வுகளுக்கு எதிராக கனரகச்சூடுகள் மற்றும் ஷெல் தாக்குதல்களின் துணையுடன் விடுதலைப் புலிகள் செறிவான முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.
விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குதல்களால் நேற்றுப் பிற்பகல் 5 மணியளவில் படையினரின் நகர்வுகள் முறியடிக்கப்பட்டன. இம்முறியடிப்பின்போது படைத்தரப்பில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 102 பேர் காயமடைந்துள்ளனர்.
முறியடிப்பு தாக்குதல்களின் பின்னர் விடுதலைப் புலிகளால் போர் ஆயுத தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. படையினரின் சடலங்களும் வேறு ஆயுதப் பொருட்களும் களமுனையில் சிதறிக் காணப்படுகின்றன என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.
Uthayan






0 விமர்சனங்கள்:
Post a Comment