அப்பாவி பொதுமக்களை விடுவிப்பதற்குப் புலிகளுக்கு 48 மணிநேர கால அவகாசம்
மோதல்கள் இடம்பெறுகின்ற பிரதேசங்களில் சிக்குண்டிருக்கின்ற அப்பாவி பொதுமக்களின் சுதந்திர நடமாட்டம், பாதுகாப்பு கருதி மக்களை விடுவிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளுக்கு 48 மணிநேர கால அவகாசம் விதித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட கையொப்பமிட்டு வியாழக்கிழமை இரவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட எமது அரசாங்கம், இலங்கை பிரஜைகளின் நலன்புரி விடயத்தில் மிக கவனமாக செயல்படுகிறது.
அத்துடன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள் குறித்தும் கவனத்தை செலுத்தியுள்ளது. இந்த நலன்புரி விடயம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள இலங்கை பிரஜைகளுக்கும் முக்கியமானது. அந்த பகுதியிலுள்ள மக்களின் அபிலாஷைகள் புலிகளினால் அதிகாரம் செலுத்தப்படுகின்றது. எனினும், எமது அரசாங்கம் ஒவ்வொருவருடைய நல்வாழ்விலும் கவனம் செலுத்துகின்றது.
அதன் பிரதிபலனாக எமது அரசாங்கத்தின் மூலமாக இலங்கையிலுள்ள சகல பிரிவுகளிலும் வாழ்கின்ற மக்களுக்கு சமாதானத்தை அனுபவிக்க முடிகின்றது. வடக்கு கிழக்கு மக்களின் அபிலாஷைகளின் பிரகாரம் அவர்களின் ஜனநாயக உரிமையின் படி தேர்தலின் மூலமாக தலைவரை தெரிவு செய்து கொள்ளலாம். அவர்களை அரசியல் - ஜனநாயக நீரோட்டத்திற்குக் கொண்டு வந்து நாட்டை செழிப்பான வழிக்கு இட்டுச் செல்வதற்கு இன்னும் நீண்டகாலம் எடுக்கும்.
எப்படியாயினும் இறுதியான தீர்வு அமைதியானதாக இருக்கவேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் புலிகளைத் தள்ளி வைத்துள்ளனர். இலங்கை மக்களுக்கு எதிரான புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை ஓரளவு நாம் அவிழ்த்து விட்டுள்ளோம். பயங்கரவாதத்தை நிர்மூலமாக்குவதற்கு தற்பொழுது முன்னெடுக்கப்படுகின்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் காரணமாக பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பொதுமக்கள் வேதனையை அனுபவித்து கொண்டிருக்கின்றனர்.
எனினும், அரசாங்கமும் பாதுகாப்பு படையினரும் பொதுமக்களின் நலன்புரி விடயங்களில் மிகவும் கவனமாக இருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை, சொத்து என்பவை ஜனநாயக தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் பாகம் என்பதை மக்களுக்கு எந்த நேரமும் தெளிவுபடுத்தியுள்ளோம். நாம் அனைவரும் இலங்கையின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டுக்காக செயல்பட வேண்டியுள்ளது.
இலங்கையிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் ஜனநாயக கட்டமைப்புக்குள் தீர்வு காணப்படும். அதேபோல பாதுகாப்பு படையினர் சிறந்த முறையில் அவர்களது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதனை அரசாங்கமும் மக்களும் மதிக்கின்றனர்.
படையினரின் நடவடிக்கையின் பெறுபேறாக புலிகள் பொதுமக்களை ஒரு சிறிய பகுதிக்குள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் பெருந்தொகையான பொதுமக்களை புலிகள் பலவந்தமாகத் தடுத்து வைத்திருப்பதனால் அந்த அப்பாவி மக்களின் உயிருக்குப் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே பொது மக்களின் நலன்புரி விடயத்தைக் கவனத்தில் கொண்டு மோதலற்ற பிரதேசம் ஒன்றை நாம் பிரகடனப்படுத்தினோம். எனினும், மோதலற்ற பிரதேசத்தின் மீதும் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அந்த மோதலற்ற பிரதேசத்திற்கான இணைப்புப் பணிகளைப் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், பாதுகாப்பு படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் பாதுகாப்பற்ற நிலையிலேயே பொதுமக்கள் இருக்கின்றனர். புலிகள் மோதலற்ற வலயத்தில் உள்ள சிவிலியன்கள் மீதும் படையினர் மீதும் ஆட்லறி தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக படையினரும் பலியாகி வருகின்றனர்.
சகல பொதுமக்களுக்கும் பாதுகாப்பான சூழலொன்று ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்பதோடு, வடக்கிலும் மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பகுதிகளிலும் பொதுமக்களின் நலன் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும்.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் தற்போது இறுதி கட்டநிலையில் இருக்கின்றன என்பதனால் தீர்க்கப்படாத சகல பிரச்சினைகளும் வன்முறைகள் மூலமாக அன்றி பேச்சுவார்த்தை ஊடாகத் தீர்க்கப்படும்.
இந்நிலையில், அப்பாவி பொதுமக்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் 48 மணிநேர காலஅவகாசத்தைப் புலிகளுக்கு விதித்துள்ளது. இந்த காலஅவகாசத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலமாக மோதல்கள் இடம்பெறுகின்ற பிரதேசங்கள், விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்கள், வடக்கில் வாழும் சகல மக்களுக்கும் அமைதி, சுதந்திரம், சமாதானம் பெற்றுக் கொடுக்கப்படுவதுடன் இதன் மூலமாக நாட்டின் அனைத்து பிரஜைகளுக்குமான உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment