யுத்தம் சரணம் பாகம் 5 "கப்பமும் அப்பமும்"
பாபர் இந்தியாவுக்கு வருவது பற்றி எண்ணிக் கூடப் பார்த்திராத காலம். படாதபாடு பட்டு ஹிந்துகுஷ் மலையைத் தாண்டி அப்போதுதான் அவர் காபூலுக்கு வந்திருந்தார். இந்தப் பக்கம், அதே சமயம் போர்ச்சுக்கலில் இருந்து ஃப்ரான்சிஸ்கோ த அல்மெய்தா (Francisco de Almeida) என்கிற வர்த்தகர் - மாலுமி - படைத்தளபதி, இந்தியாவுக்கான போர்ச்சுக்கல் மன்னரின் பிரதிநிதியாக கேரளக் கடற்கரைப் பக்கம் வந்து இறங்கினார். அநேகமாக கோழிக்கோடு. சரியாகத் தெரியவில்லை. ஆனால் வருடம் சரியாக இருக்கிறது. 1505. வாஸ்கோடகாமா வந்து போனதற்குச் சரியாக ஏழு வருடங்கள் கழித்து.
ஃப்ரான்சிஸ்கோவுக்கு அப்போது ஐம்பது வயதுக்கு மேலே. அவரோடு அவருடைய மகன் லாரன்ஸோ த அல்மெய்தாவும் (Lourenco de Almeida), ஆயிரத்தைந்நூறு படை வீரர்களும் கூட வந்தார்கள். இருபத்திரண்டு கப்பல்களில் வந்துகொண்டிருந்த அந்தக் கூட்டத்தின் ஒரு பகுதி, தற்செயலாக திசை தப்பி இலங்கையின் தெற்குப் பகுதிக்குப் போய்ச் சேர்ந்தது. ஒரு புயலடித்தது என்று வையுங்கள். ஃப்ரான்சிஸ்கோவின் மகன் லாரன்ஸோ, அந்தக் கப்பல்களில் ஒன்றில்தான் இருந்தார்.
இந்தியாவானால் என்ன, இலங்கையானால் என்ன? தெற்கு ஆசியாவில் வியாபாரம் என்பதுதான் அவர்களுடைய ஆரம்ப இலக்கு. ஆங்காங்கே ஆண்டுகொண்டிருக்கும் மகாராஜாக்களுக்குப் பரிசுப் பொருள்கள் கொடுத்து மடக்கி, வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொள்வது. பிறகு உட்கார்ந்து தொழில் நடத்த ஒரு கோட்டை கட்டிக்கொள்வது. முடிந்தால் இடங்களை வளைப்பது. அப்படியே தொடர்ந்து, இடத்தைக் கொடுத்தவர்களின் மடத்தைப் பிடுங்கினால் தீர்ந்தது விஷயம்.
புயலில் மாட்டி, தற்செயலாகத் தென் இலங்கைப்பக்கம் வந்து சேர்ந்த லாரன்ஸோ குழுவினருக்கு, அவர்களே எதிர்பாராவிதமாக அங்கே பலமான வரவேற்பு இருந்தது. ஜெயவர்த்தனபுரம் என்று அழைக்கப்படும் அன்றைய கோட்டையை (kotte) தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்துகொண்டிருந்த மன்னர் வீர பராக்கிரம பாகு, அவர்களைக் கூப்பிட்டு உட்காரவைத்து நலம் விசாரித்து, பிசினஸ் பேச ஆரம்பித்தார். எனக்கும் லாபம், உனக்கும் லாபம் என்றால் எந்தப் பிரச்னையுமில்லை, நீ எதை வேண்டுமானாலும் விற்றுக்கொள், பதிலுக்கு எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல் என்று சொல்லிவிட்டார்.
யார் தருவார் இந்த அரியாசனம்? லாரன்ஸோ, மன்னருக்கு வணக்கம் சொல்லி விடைபெற்றார். பக்கத்தில் ஒரு சின்ன வேலை இருக்கிறது, இதோ வந்துவிடுகிறேன் என்று புறப்பட்டு, உடனடியாகத் தன் தந்தைக்குத் தகவல் தெரிவிக்க ஆள் அனுப்பினார்.
அழகான தேசம். இரண்டே இரண்டு இன மக்கள்தான் வசிக்கிறார்கள். ஒன்று தமிழர்கள். அவர்கள் வடக்கே இருக்கிறார்கள். மற்றவர்கள் சிங்களர்கள். இவர்கள் தெற்கு ராஜாக்கள். இருவருக்கும் நீண்ட பாரம்பரியம். நிறைய சரித்திரம். வளமான பூமி. நிறைய விளைகிறது. நல்ல மழை. மொத்தம் ஆறேழு மன்னர்கள் கூறு போட்டு ஆண்டுகொண்டிருக்கிறார்கள். நீங்கள் மாட்சிமை பொருந்திய நமது போர்ச்சுக்கல் மன்னர் மானுவேல் ஐயா சமூகத்துக்கு (kingmanuel1 ) காலக்கிரமத்தில் கடுதாசி போட்டுவிடுங்கள். இங்கே நமக்கு நல்ல வர்த்தக சாத்தியங்கள் உண்டு. சீக்கிரம் நமக்கொரு கோட்டை கட்டிவிடப் பார்க்கிறேன். முடிந்தால் நீங்களும் ஒரு நடை வந்து போவது நல்லது.
1518-ல் கொழும்பு நகரில் போர்ச்சுக்கீசியர்களின் கோட்டை உருவாகிவிட்டது. வலுவான அடித்தளம். கோட்டைக்கு மட்டுமல்ல. அவர்களுடைய வர்த்தகத்துக்கும். மன்னரின் வாரிசுகள் மூன்று பேர் இருந்தார்கள். அப்பனைக் கொன்றுவிட்டு தேசத்தை ஆளுக்குக் கொஞ்சமாகப் பிய்த்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்த உத்தம புத்திரர்கள். இந்த மூன்று பேருடனும் தனித்தனியே போர்ச்சுக்கீசியர்கள் நல்லுறவு வளர்த்தார்கள். நான் செய்வது வர்த்தகம். எனக்கு நீயும் முக்கியம். உன் பங்காளியும் முக்கியம். உனக்கு வேண்டியதைக் கேட்டால் நான் தட்டாமல் செய்கிறேன். எனக்கு வேண்டியதை எடுத்துச் சாப்பிட அனுமதித்தால் போதும். அப்படித்தான் அவர்கள் தெற்கே கடற்கரையோர சிறு நகரங்கள் ஒவ்வொன்றாக வளைக்க ஆரம்பித்தார்கள்.
போர்ச்சுக்கீசியர்கள் வியாபாரத்துக்காகக் கொண்டுவந்திருந்த பொருள்களுடன் வேறு ஒன்றையும் அங்கே எடுத்து வந்து அறிமுகப்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். கிறிஸ்துவம். மன்னர்களுக்குக் கப்பமும் மக்களுக்கு அப்பமுமாக வளர்ந்த அவர்களது வர்த்தகம், ஒரு கட்டத்தில் தென்னிலங்கை முழுதும் மிக வலுவான ஆதிக்கத்துக்கு அடிகோலியது. முன்னதாக கி.பி. பத்தாம் நூற்றாண்டில் படகோட்டிக்கொண்டு வந்த அரேபிய வர்த்தகர்கள் மூலம் இஸ்லாம் அங்கே பரவியிருந்தது என்றாலும், இந்தளவுக்கு அல்ல. இத்தனை தீவிரமாக அல்ல. குறிப்பாக சிங்களப் பகுதியில் அல்ல.
சிங்கள மன்னர்களுக்கு அப்போதுதான் தமது பாதுகாப்பு குறித்த ஆரம்ப அச்சங்கள் உருவாக ஆரம்பித்தன. போர்ச்சுக்கீசியர்களைப் பற்றிய அச்சம் மட்டுமல்ல. இன்னும் பலர் வருவார்கள். எந்த மூலையிலிருந்து வேண்டுமானாலும் வரலாம். எந்த வேடம் தாங்கியும் வரலாம். வர்த்தகர்களாக. நேரடி யுத்த நாட்டம் கொண்டவர்களாக. மதத்தின் முலாம் பூசியவர்களாக.
ஏனெனில், உலகம் முழுதும் ஐரோப்பிய வர்த்தகக் குழுக்கள் புதிய புதிய தேசங்களைத் தேடிப் புறப்பட்டிருக்கின்றன. தெற்குக் கடல் முழுதும் வர்த்தகக் கப்பல்கள். ஆங்காங்கே அகப்படும் ஒவ்வொரு குட்டி ராஜாக்களுடனும் அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு உள்ளே வந்துவிடுகிறார்கள். எந்த ஒரு பரந்த நிலப்பரப்புக்குள்ளேயும் ஆண்டுகொண்டிருக்கும் மன்னர்களுக்கிடையே ஒற்றுமை கிடையாது. சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருத்தரை ஒருத்தர் அடித்துச் சாப்பிடத்தான் அத்தனை பேருமே ஆலாய்ப் பறக்கிறார்கள். இந்த ஒற்றுமையின்மைதான் வருகிற விருந்தாளிகளின் மிகப்பெரிய பலமாகிவிடுகின்றது.
வேறு வழியில்லை. இன்னும் சற்றுப் பாதுகாப்பான இடத்துக்குத் தலைநகரை மாற்றி விடலாமே?
கண்டிக்கு (kandy) நகர்ந்தது அப்போதுதான் (1592). செங்கடகலபுரா என்றும் மகா நுவாரா என்றும் முன்னாள்களில் அழைக்கப்பட்ட கண்டி, மத்திய இலங்கையில் உள்ள மலை நகரம். பதினான்காம் நூற்றாண்டில் விக்கிரம பாகு என்னும் மன்னனால் உருவாக்கப்பட்ட நகரம். அடர்ந்த மலைக்காடுகளால் சூழப்பட்ட சௌகரியமான இடம். உட்கார்ந்து ஆள்வதற்கு. யாரும் அத்தனை சுலபத்தில் படையெடுத்து வந்துவிட முடியாது.
செங்கடகலபுரா என்னும் பெயரை உச்சரிக்க ரொம்பக் கஷ்டப்பட்ட போர்ச்சுக்கீசியர்கள்தான் இந்த ஊருக்கு சுருக்கமாகக் `கண்டி' என்று பெயர் வைத்தார்கள். அவர்கள் எதற்கு உச்சரிக்க வேண்டும்? தெற்கு எல்லை முழுவதையும் அவர்கள் கபளீகரம் செய்துவிட்டார்களே என்று அச்சப்பட்டுத்தானே மன்னர்பிரான் தலைநகரையே இங்கே மாற்றிக்கொண்டு வந்திருக்கிறார்? இங்கும் துரத்திக்கொண்டு வந்துவிடுவார்களோ? இலங்கை முழுதையும் தின்று தீர்த்துவிட்டுத்தான் ஓய்வார்களோ?
ஒருவகையில் அந்தக் கவலை நியாயமானது. கண்டிப் பேரரசுதான் இலங்கையின் கடைசி சுதந்திரப் பேரரசாக விளங்கியது. போர்ச்சுக்கீசியர்களும், பின்னால் வந்த டச்சுக்காரர்களும், துரத்திக்கொண்டு இன்னும் பின்னால் வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ்காரர்களும் இலங்கையில் கால் வைத்த பிறகு மண்ணின் மைந்தர்களால் பெரிய அளவில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்தப் பக்கம் சிங்கள மன்னர்கள் என்றால், அந்தப் பக்கம் தமிழ் மன்னர்களின் கதியும் அதுவேதான்.
வியாபாரிகளாகத்தான் நுழைந்தார்கள். நுழைந்த வேகத்தில் வளைத்துப்போடும் வித்தை தெரிந்திருந்தபடியால் வந்த இடத்தில் ஆள ஆரம்பித்துவிட்டார்கள். 1505-ல் இலங்கைக்குள் அடியெடுத்து வைத்த போர்ச்சுக்கீசியர்கள் 1619-ல் யாழ்ப்பாணத்தைப் பிடிக்கும் வரை சற்றும் ஓயவில்லை. நிறைய யுத்தங்கள். ஆங்காங்கே தோல்விகள். அடிக்கடி வெற்றிகள். கோட்டைப் பிடித்தல் ஒரு பக்கம், கிறிஸ்துவப் பரவல் ஒரு பக்கம். வடக்கே சைவ ஆலயங்களும் தெற்கே பவுத்த விஹாரங்களும் மட்டும் இருந்த இலங்கைத் தீவில் மூலைக்கொரு கிறிஸ்துவ தேவாலயம் உருவாகத் தொடங்கியது போர்ச்சுக்கீசியர்களின் காலத்தில்தான்.
கண்டியைத் தலைநகராகக் கொண்டு இயங்கிய அந்த மத்திய இலங்கைப் பேரரசையும் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளையும்தான் அவர்களால் இறுதிவரை பிடிக்க முடியாமல் இருந்தது. அப்படியும் விடாமல் முயற்சியைத் தொடர்ந்துகொண்டேதான் இருந்தார்கள். கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளையும் மலையகத்தின் ஒரு சில இடங்களையும் கொஞ்சகாலத்துக்கு ஆக்கிரமித்து வைத்திருந்தார்கள்.
வியாபார நிமித்தமாகவே வந்தார்கள் என்றாலும் காலப்போக்கில் போர்ச்சுக்கீசியர்களிடம் ஒரு கனவு உருவாகி திடமாக எழுந்து நின்றது. முழு இலங்கைத் தீவு என்னும் பெருங்கனவு. இந்தியாவில், கோவாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருந்த போர்ச்சுக்கீசிய காலனி ஆட்சியின் ஒரு விரிவாக்கமாகவே அவர்கள் இலங்கை ஆக்கிரமிப்பைப் பார்த்தார்கள். ணிணீபீஷீ பீணீ மிஸீபீவீணீ என்றுதான் அவர்கள் இலங்கையையும் அழைத்தார்கள். என்றால், தங்களுடைய இந்திய மாகாணங்களுள் இன்னொன்று என்று பொருள். கோவாவில் இருந்த போர்ச்சுக்கீசிய மன்னரின் வைசிராய் பெயரில் கொழும்புவில் ஒரு கேப்டன் ஜெனரல் உட்கார்ந்துகொண்டு ஆட்சி புரிந்தார்.
இலங்கைத் தீவில் அதுநாள் வரை நடைமுறையில் இருந்த ஆட்சி அமைப்பு முறைகளில் எல்லாம் அவர்கள் கைவைக்கவில்லை. தமிழர் - சிங்களர் என்னும் முற்றிலும் வேறுபட்ட இரண்டு இனத்தவர்களை, அவரவர் கலாசாரப் பின்னணியுடன் முற்றிலும் புரிந்துகொண்டவர்களாகவே அவர்கள் இருந்திருக்கிறார்கள். சமூகத் தளத்தில் இருந்த சாதி அடுக்குகள், நிலச்சுவான்தார் முறைமை போன்றவற்றிலும் அவர்கள் மாறுதல் ஏதும் செய்யவில்லை. என்ன ஒரே ஒரு விஷயம், கிறிஸ்துவ மதப் பரவல். அதை அவர்கள் சற்றே தீவிரமாகத்தான் செய்தார்கள் என்று சொல்லவேண்டும். கையோடு அழைத்து வந்திருந்த பாதிரியார்கள் பொறுப்பில் ஓர் இயக்கமாகவே அது நடைபெற்றது. சில இடங்களில் நாசூக்காக. சில இடங்களில் அடாவடித்தனமாக.
தெற்கு இலங்கையில் குறிப்பாகக் கடலோர கிராமங்களிலும் நகரங்களிலும் மிக வலுவாக கிறிஸ்துவத்தை வேரூன்றச் செய்தபிறகு கொஞ்சம் கொஞ்சமாக முழுத் தேசத்துக்கும் அதனைப் பரப்ப அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் ஓரளவு நல்ல பலனைக் கொடுத்தது. ஆனால் ஒப்பீட்டளவில் சிங்களர்களை மாற்ற முடிந்த மாதிரி, தமிழர்களை அவர்களால் மாற்றமுடியவில்லை என்பதே சரித்திரம் நமக்களிக்கும் கணக்கு.
அதே சமயம், சிங்களர்கள் மத்தியிலுமே கூட மிகப்பெரிய அளவில் இந்த மதமாற்றம் நிகழவில்லை. போர்ச்சுக்கீசியர்கள் கொண்டுவந்த கத்தோலிக்க கிறிஸ்துவத்தைக் காட்டிலும், அவர்களுக்குப் பின்னால் டச்சுக்காரர்களின் வழியே அறிமுகப்படுத்தப்பட்ட ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவம் இன்னும் ஆழமாகப் பரவியது. கடலோர மீனவர்களிடையே (சிங்கள, தமிழ் மீனவர்கள் என இருசாராரிடையேயும்) ரோமன் கத்தோலிக்க மதம் எளிதில் ஊடுருவியது.
போர்ச்சுக்கீசியர்கள் சிங்கள தமிழ் மாகாணங்களில் நிறைய பள்ளிக்கூடங்களை நிறுவினார்கள். மாணவர்கள் அளவிலிருந்து மதத்தைப் பரப்புவதுதான் அடிப்படை நோக்கம். போர்ச்சுக்கீசிய மொழி, சிங்களம், தமிழ் என்று மூன்று மொழிகளிலும் பாடங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஒருகட்டத்தில் சாதி அளவிலும் பொருளாதார அடுக்குகளிலும் கீழே இருப்பவர்களாகக் கருதப்படுவோர், போர்ச்சுக்கீசிய மொழியை அறிவதன் மூலமே மேல் சாதிக்காரராக மதிக்கப்படக்கூடிய நிலை உருவாகத் தொடங்கியது. அரசாங்கம் அவர்களுக்குப் பல சலுகைகளைக் கொடுத்தது. வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கிடைத்தன. பல சிங்களர்கள் வீட்டிலேயே போர்ச்சுக்கீசிய மொழி பேசத் தொடங்கிவிட்டதாகவும், தமக்கு போர்ச்சுக்கீசியப் பெயர்களை வைத்துக்கொண்டு அழகு பார்த்ததாகவும்கூடச் சில சரித்திர நூல்கள் சொல்கின்றன.
சிங்களர்கள் அனைவரும் பவுத்தர்களாக இருந்த நிலைமை மாறி, கிறிஸ்துவம் தீவிரமாகத் தீவில் பரவத்தொடங்கியதில், கண்டிப் பேரரசை ஆண்டு வந்த மன்னர்கள் மிகவுமே கவலை கொண்டார்கள். யாராவது வந்து இந்தப் போர்ச்சுக்கீசியர்களை வெளியே துரத்த மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு 1602-ம் ஆண்டு ஜோரிஸ் ஸ்பீல்பெர்க் (joris spilberg) என்னும் டச்சு கேப்டன் வந்தபோது அப்பாடா என்றிருந்தது.
குமுதம்
0 விமர்சனங்கள்:
Post a Comment