யுத்தம் சரணம் பாகம் 6 "பிடாரிகளின் கதை"
கிழக்கை ஆளும் சீமானே, உமக்கு நல்வரவு. பெரிய கொம்பனாமே நீர்? கேள்விப்பட்டேன். பேயாட்சி புரியும் போர்த்துக்கீசியர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ, அங்கெல்லாம் துரத்திச் சென்று உதைக்கும் உம் வீரத்தை மதிக்கிறேன். சுத்த வீரன் என்று நம்புகிறேன். வாரும், நாம் நண்பர்களாவோம். உமக்கும் எனக்குமான பொது எதிரி என் தேசத்தில் உட்கார்ந்திருக்கிறான். ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடமாக அல்ல. சனியன், நூற்று முப்பது வருடங்களுக்கு மேலாக. அவன் ஒண்டவந்த பிடாரி. நான் உள்ளூர்ப் பிடாரி. வியாபாரத்துக்காக வந்தான். பிழைத்துப் போ என்று விட்டது பெரும்பிழை. முக்கால் தேசத்தைத் தின்று தீர்த்துவிட்டான் மிஞ்சியிருப்பது என்னுடைய கண்டிப் பேரரசு.
இதுவும் இன்றைக்கோ, நாளைக்கோ. நண்பா, நீ எனக்கு உதவி செய். பதிலுக்கு நான் உனக்கு பல உபகாரம் செய்ய முடியும். வருஷம் தோறும் இரண்டு கப்பல்கள் நிறைய இங்கு விளையும் வாசனாதி வஸ்துக்களை அன்பளிப்பாக உன் ஊருக்கு ஏற்றி அனுப்புகிறேன். எனக்காகப் போரிட்டு நீ பிடிக்கப்போகும் கோட்டைகளில் ஏராளமான பொன்னும் பொருளும் உண்டு. மூட்டை மூட்டையாகப் பணமுண்டு. போர்த்துக்கீசிய தேசத்திலிருந்து வர்த்தக நிமித்தம் கொண்டுவந்து குவித்திருக்கும் சரக்குகள் அநேகம். அனைத்தையும் எடுத்து எண்ணிப் பிரித்து, உனக்குச் சரிபாதி பங்கு கொடுத்துவிடுகிறேன். வெறும் வாய்ச்சொல் என்று நினைத்துவிடாதீர். இதோ எழுதி எடுத்து வந்திருக்கிறேன். நீரும் உமது பங்குக்கு ஏதாவது நிபந்தனை போடுவதென்றால் போடும். கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திடுகிறேன். பிறகு கைகுலுக்கிக்கொள்வோம். அடுத்த முகூர்த்தத்தில் நாம் கொட்டப்போகும் போர் முரசு, போர்த்துக்கீசியனுக்குச் சாவு மணியாக ஒலிக்கக்கடவது.
1638-ம் வருடம் மே மாதம் இருபத்து மூன்றாம் தேதி. நிச்சயம் நல்ல நாள் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். மட்டக்களப்பில் வைத்துக் கையெழுத்தான கண்டிப் பேரரசுக்கும் டச்சுக்காரர்களுக்குமான இந்த ஒப்பந்தம், மிக நீண்ட இருபது அம்சத் திட்டங்களைக் கொண்டது. போர்த்துக்கீசியர்களை ஒழிப்பது ஒன்று மட்டுமே இலக்கு. மாட்சிமை பொருந்திய கண்டி மன்னர் ராஜசிங்கே இதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராகிவிட்டதை அந்த ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகிறது. போர்த்துக்கீசியர்களின் கோட்டைகளை டச்சுப்படைகள் முற்றுகையிடத் தொடங்கிய நிமிடத்திலிருந்து, அதிகாரிகள் முதல் படை வீரர்கள் வரை அத்தனை பேருக்கும் மாதச் சம்பளம் கொடுக்க ஒப்புக்கொண்டார். வேளைக்குச் சாப்பாடு போட ஒப்புக்கொண்டார். அவர்களுடைய சுக சௌகரியங்கள் அனைத்துக்கும் முழுப்பொறுப்பேற்பதாக எழுதிக் கொடுத்தார்.
மட்டுமல்லாமல், கிழக்காசிய நாடுகளில் உள்ள (அவர்கள் கிழக்கிந்திய நாடுகள் என்பார்கள். இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட ஏராளமான பிராந்தியங்களில் அன்றைக்கு டச்சுக்காரர்கள் கொடிநாட்டியிருந்தார்கள். எல்லாம் அவர்களுக்குக் கிழக்கிந்தியத் தீவுகள்.) டச்சு காலனிப் பகுதிகளிலிருந்து படை திரட்டிக்கொண்டு வருவதற்கு ஆகிற போக்குவரத்து, பராமரிப்பு, மராமத்துச் செலவுகளில் ஆரம்பித்து, இது தொடர்பாக டச்சுப் படையினரைக் குத்தகைக்கு விடுவதற்காக டச்சு கிழக்கிந்திய கம்பெனியாருக்கு வருடாந்திரக் கப்பம் வரை எத்தனை செலவு!
இதில் நம்பமுடியாத ஒரே விஷயம், தங்களுக்கு உதவி செய்த கையோடு டச்சுக்காரர்கள் காலி பண்ணிக்கொண்டு ஊர் போய்ச் சேருவார்கள் என்று கண்டி மன்னர் நினைத்ததுதான்.
ஐரோப்பிய வரைபடத்தில் வட மேற்கு எல்லையில் இரண்டு முதலைகள் எதிரெதிரே படுத்தபடி ஏதோ தீவிரமான உலக விஷயம் அல்லது காதல் பேசுவது போல் தோற்றமளிக்கும் நெதர்லாந்து, அன்றைக்கு அதன் ஒரு பகுதியான ஹாலந்தின் பெயராலேயே அழைக்கப்பட்டது. டச்சு மொழி பேசுகிற மக்கள் என்பதால் அம்மக்களை டச்சுக்காரர்கள் என்று இந்தப் பக்கம் சொல்லுவார்கள். இலங்கைத் தமிழர்களின் நல்ல தமிழில் ஹாலந்துக்காரர்கள், ஒல்லாந்துக்காரர்களாகிப் போனார்கள்.
போர்த்துக்கீசியர்கள் இலங்கையை ஆண்டுகொண்டிருந்த பதினாறாம் நூற்றாண்டு முழுதும் இலங்கைக்கு வெளியே, உலகெங்கும் அவர்களுக்கும் ஹாலந்துக்காரர்களுக்கும் ஓயாத யுத்தம். எங்கெல்லாம் போர்த்துக்கீசிய காலனி இருக்கிறதோ, அங்கெல்லாம் பக்கத்தில் உரசிக்கொள்ள ஒரு டச்சுக்காலனி வரும். இதையே மாற்றியும் சொல்லலாம். பகையென்றால் அப்படியொரு பகை. ஏன் பகை, என்ன பகை, எதனால் பகை என்றெல்லாம் விவரிக்க ஆரம்பித்தால் நாம் இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து ஐரோப்பாவுக்குப் போய்விடுவோம். 1568-ம் ஆண்டு தொடங்கிய டச்சுப் புரட்சி, எட்டு வருட யுத்தம், ஸ்பெயின் மேலாதிக்கம், அதன் உள் குத்துகள், போர்ச்சுக்கலின் வெளிக் குத்துகள் என்று என்னென்னவோ பார்க்க வேண்டிவரும்.
அவசியமில்லை. டச்சுக்காரர்களுக்கும் போர்த்துக்கீசியர்களுக்கும் ஆகாது. தீர்ந்தது விஷயம்.
எனவே, டச்சு கிழக்கிந்திய கம்பெனி என்கிற பெயரில் அப்போது இந்தோனேஷியா பக்கம் மிக வலுவான தளம் அமைத்து ஆண்டுகொண்டிருந்த டச்சுக்காரர்களை உதவிக்குக் கூப்பிடலாம் என்று கண்டி மன்னர் நினைத்த வகையில் சரி. அவர்களும் வியாபாரிகளாக நுழைந்து ஆட்சியாளர்களாக உட்காருகிறவர்கள்தானே என்று ஏன் யோசிக்கவில்லை என்பதுதான் புதிர்.
கூப்பிட்டுவிட்டார். பேசிப் பயனில்லை. ஒப்பந்தமும் ஆகிவிட்டது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம், கண்டி மன்னரும் சிங்கள மக்களும் மட்டுமல்ல; இலங்கையில் இருந்த தமிழர்களும் போர்த்துக்கீசியர்களை ஒழிக்க டச்சுக்காரர்களை அழைப்பதே சரி என்று கருதினார்கள். என்ன விலை கொடுத்தாவது போர்த்துக்கீசியர்களைத் துரத்திவிட வேண்டும். அப்புறம் வரக்கூடிய பிரச்னைகளை அப்போது பார்த்துக்கொள்ளலாம்.
எனவே டச்சு கப்பல் படையின் கமாண்டர் ஆதம் வெஸ்டர்வல்ட் (Adam westerworld) தலைமையில் ஒரு பெரும்படை வந்து மட்டக்களப்பில் இறங்கியது. கண்டி மன்னர் ராஜ சிங்கேவின் படைவீரர்கள் அவர்களை `வருக வருக' என வரவேற்றார்கள்.
சிங்களர்களும் இதைத்தான் சொன்னார்கள், தமிழர்களும் இதைத்தான் சொன்னார்கள். எனவே, வந்தவர்களுக்கு அமோகமான மக்கள் ஆதரவு.
நிறையப் பேசினார்கள். போர்த்துக்கீசியர்களை வீழ்த்துவது என்பது சாதாரணமான செயலல்ல. நிதானமாக, பொறுமையாக, அங்குலம் அங்குலமாக முன்னேற வேண்டிய விஷயம். என்னென்ன தடைகள் இருக்கலாம்? என்னென்ன பிரச்னைகள் வரக்கூடும்? எங்கே தடுமாற்றம் வரும்? என்ன தீர்வு? இலங்கையின் நிலவியல். காலநிலை. நதிகள் மற்றும் மலைகள் பற்றிய விவரங்கள்.
முதன் முதலில் இலங்கைத் தீவில் கால் வைத்த டச்சு வியாபாரி ஜோரிஸ் ஸ்பீல்பர்க் தொடங்கி, படை கட்டிக்கொண்டு புறப்பட்ட நாள் வரை யார் யாரெல்லாம் வியாபார நிமித்தம் இலங்கையைச் சுற்றி வந்திருந்தார்களோ, அத்தனை பேரையும் கூப்பிட்டுப் பேசினார்கள். மக்களைப் பற்றிக் கேட்டறிந்தார்கள். மன்னர்களை, அவர்களது இயல்புகளை, பங்காளிச் சண்டைகளைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். சிங்களர்கள், தமிழர்கள் இடையிலான கலாசார வித்தியாசங்களைப் புரிந்துகொண்டார்கள். பவுத்தம் எத்தனை ஆழமாக அங்கே வேரூன்றியிருக்கிறது என்பதை நேரடியாகப் பார்த்தார்கள். போர்த்துக்கீசியர்கள் அறிமுகப்படுத்திய கத்தோலிக்கக் கிறிஸ்துவம், ஆளும் வர்க்கத்தினரிடையே எம்மாதிரியான கசப்புணர்வை உருவாக்கி வைத்திருக்கிறது என்பதையும் கண்டார்கள்.
இந்த அரிச்சுவடிப் பாடங்களையெல்லாம் படித்துவிட்டுத்தான் யுத்தத்துக்கே தயாரானார்கள். அதற்குள் பகுதிவாழ் மக்களிடையே அவர்கள் நெருங்கிப் பழகத் தொடங்கியிருந்தார்கள்.
மட்டக்களப்பு, திருகோணமலை, நெகாம்போ (negombo), கல்லே என்கிற காலி (galle) நகரங்களில் இருந்த போர்த்துக்கீசியக் கோட்டைகளை வெகு அநாயாசமாக டச்சுப்படைகளால் வெல்ல முடிந்தது என்றால், அதற்கு முக்கியக் காரணம், அந்தப் பிராந்தியங்களில் வசித்த மக்கள் அளித்த ஒத்துழைப்பு. ராஜசிங்கேவின் உதவியெல்லாம் இதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை.
ஒப்பீட்டளவில் அன்றைக்கு போர்த்துக்கீசியர்கள் பலவான்கள். பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயினும் போர்ச்சுக்கலும்தான் போட்டி போட்டுக்கொண்டு உலகைக் கூறுபோட்டுக்கொண்டிருந்தன. மேற்கே தென் அமெரிக்கா தொடங்கி, கிழக்கே இந்தோனேஷியா வரை உலக உருண்டையை லட்டுருண்டையாக எண்ணி அவர்கள்தான் பரவலாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் டச்சுப் படைகளால் இந்தோனேஷியாவிலும் இலங்கையிலும் போர்த்துக்கீசியர்களை வீழ்த்த முடிந்திருக்கிறது.
நிற்க. மேற்படி நான்கு இடங்களில் டச்சுப் படைகள் வெற்றி கொண்ட கோட்டைகளுள், இன்றைக்கு கிரிக்கெட் மேட்ச்களினால் புகழ்பெற்ற காலி தவிர, பிற மூன்று பகுதிகளும் தமிழர் பகுதிகள். கொழும்பு நகருக்கு வடக்கே சுமார் நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நெகாம்போவிலும் (தமிழர்கள் இதனை `க்' போடாமல் நீர்கொழும்பு என்பார்கள்.) அன்றைக்கே தமிழர்கள்தாம் மிகுதி.
கண்டி மன்னர், இந்தக் கோட்டைகள் டச்சுப் படைகளின் வசமானதுமே அவற்றை அழித்துவிடும்படி கேட்டார். போர்த்துக்கீசியர்கள் கட்டிய கோட்டைகள். நமக்கெதற்கு? வேண்டியதையெல்லாம் எடுத்துக்கொண்டு விட்டபிறகு நிர்மூலமாக்கிவிடுங்கள்.
சிரித்தார்கள் டச்சுக்காரர்கள். எழுதிக் கையெழுத்திட்ட ஒப்பந்தப் பத்திரத்தை எடுத்துக் காட்டினார்கள்.
மன்னர்பிரான் மன்னிக்க வேண்டும். ஒப்பந்தத்தை நீங்கள் சரியாகப் படித்தீர்களா? பாதகமில்லை. இப்போது ஒருமுறை படித்துவிடுங்கள்.
நாங்கள் இங்கே போர் புரியும் காலத்தில் எங்களுடைய வீரர்களுக்கு நீங்கள் மாதச் சம்பளம் கொடுக்க வேண்டும். கொடுத்தீர்களா ஒழுங்காக? எக்கச்சக்க பாக்கி. மட்டுமல்லாமல் ஆண்டுக் கப்பத்திலும் சொச்சம் வைத்திருக்கிறீர்கள். ஒப்பந்தப்படி என்னவெல்லாம் செய்கிறேன் என்று சொன்னீர்களோ, எல்லாவற்றிலும் ஏதாவது ஓர் இடத்தில் தொடரும் போட்டுவிடுகிறீர்கள்.
நாங்கள் என்ன பாவம் செய்தோம்? பிழைத்தாக வேண்டுமல்லவா? போர்க்காலத்தில் எங்கள் வீரர்கள் பல சமயம் உறங்கக்கூட ஓரிடமில்லாமல் காட்டிலும் மேட்டிலும் நின்றவாக்கில் தூங்கி விழுந்திருக்கிறார்கள்.
இந்தக் கோட்டைகளெல்லாம் இருந்துவிட்டுப் போகட்டுமே? இன்னும் நாம் பிடிக்கவேண்டிய கோட்டைகள் எத்தனையோ இருக்கின்றன. அதுவரைக்கும் எங்களுக்கென்று நாலு குடிசை இருப்பதில் என்ன கெட்டுவிடப் போகிறது?
ராஜ சிங்கே முதல் முறையாக சந்தேகப்பட்டது இந்த இடத்தில்தான். ஒப்பந்தத்தை மீண்டும் எடுத்துப் பார்த்தார். பண பாக்கி இருப்பது உண்மையே. ஆனால் எந்த இடத்தையும் டச்சுப்படைகள் ஆக்கிரமித்து, தமதாக்கிக் கொள்ள அனுமதிக்கவில்லை. இதென்ன புதுத் தலைவலி?
அடக்கடவுளே, மன்னர் இப்படி மாற்றிப்பேசலாமா? நீங்கள் எழுதி கையெழுத்துப் போட்டுக்கொடுத்த பத்திரம் இதோ இருக்கிறது பாருங்கள் என்று டச்சுப்படைகள் தரப்பிலும் ஒரு பத்திரத்தை எடுத்துக் காட்டினார்கள். இரு தரப்பும் கையெழுத்திட்ட பத்திரத்தின் அச்சடிக்காத டச்சுப்பிரதி அது.
அதில் மட்டும் இன்னொரு பாயிண்ட் கூடுதலாக எழுதப்பட்டிருந்தது. கடலோரக் கோட்டைகளை டச்சுப்படைகள் கைப்பற்றுமானால், அதை உரிமையாக்கிக்கொண்டு, அங்கிருந்து செயல்படலாம்.
மீண்டும் சிரித்தனர் டச்சு தளபதிகள். ஒப்பந்தத்தில் தகிடுதத்தம் செய்து, மொழி தெரியாத மன்னர்பிரானிடம் கையெழுத்தும் வாங்கி வைத்துவிட்ட பிறகு யார் என்ன செய்ய முடியும்?
ஏமாந்து போனோம் என்று அப்போதுதான் புரிந்தது மன்னருக்கு.
டச்சுக்காரர்கள் தாமதிக்கவில்லை. அடுத்தடுத்து போர்த்துக்கீசியக் கோட்டைகளை அவர்கள் உக்கிரமாகத் தாக்கினார்கள். விழும் கோட்டைகள் ஒவ்வொன்றிலும் தமது படைகளை நிறுத்தி, தமதாக்கிக்கொண்டார்கள். கண்டி மன்னர் பார்த்துக்கொண்டே இருந்தார். வேறொன்றும் செய்வதற்கில்லை.
போர்த்துக்கீசியர்கள் சோர்ந்துபோய்க் கிளம்பியபோது இலங்கைத் தீவு டச்சுக்காரர்களின் வசமாகியிருந்தது.
அப்போதும் கண்டி மட்டும் மிச்சமிருந்தது.
குமுதம்
0 விமர்சனங்கள்:
Post a Comment