யுத்தம் சரணம் பாகம் 7
காகத்தின் வடையை நரி கவர்ந்து கொண்ட பிறகு காகத்தால் ஒன்றும் செய்ய இயலாதுதான். ஆனாலும் கோபம் இல்லாதிருக்குமா? ஒரு வாய்ப்புக் கிடைத்தால் கொத்திக் குதறியெடுக்கும் ஆங்காரம் இல்லாமல் இருக்குமா? கண்டி மன்னர் ராஜசிங்கே காகமல்ல. உறுமீன் வருவதற்குக் காத்திருந்த கொக்கு. தான் ஏமாற்றப்பட்டுவிட்ட கோபமும் இயலாமையும் அவரை மிகவும் வாட்டிக்கொண்டிருந்தன. கூடவே ஓர் அச்சமும் இருந்தது.
கையெழுத்துப் போட்டுக்கொடுத்த ஒப்பந்தத்தில் டச்சுக்காரர்கள் மோசடி செய்திருக்கிறார்கள் என்று அந்நாளில் எந்த சர்வதேச நீதிமன்றத்தில் போய் வழக்குத் தொடர முடியும்? அப்படியே மத்தியஸ்தத்துக்கு யாரை அழைத்தாலும் இந்தப் பக்கமும் கேள்விகள் வரும். நீ ரொம்ப ஒழுங்கா? யோக்கியமா? சொன்னபடி டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கு நீ கட்டவேண்டிய கப்பங்களைக் கட்டினாயா?
உண்மையில் அன்றைக்குக் கண்டி கஜானாவில் பணமில்லை. பணம் என்றால் தங்கம். அதைக்கொண்டுதான் பிசினஸ். ஏடாகூடமான இருபது அம்ச நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு, யுத்த காலமெல்லாம் படியளந்துகொண்டே இருந்ததில், பணம் வற்றிப் போனது. யுத்தச் சாக்கில் இலங்கைக்கு வந்த டச்சுக்காரர்கள் சகட்டுமேனிக்கு அங்கு விளையும் அத்தனை பயிர்களையும் அள்ளியெடுத்துப் போய்க்கொண்டிருந்தார்கள். கேட்டால் நல்லுறவு. நட்பின் சின்னம். மேலும் கேட்டால், ஒப்பந்தத்தைப் பார். தடையற்ற வர்த்தகத்துக்கும் சேர்த்துத்தான் கையெழுத்துப் போட்டிருக்கிறாய். பாயிண்ட் நம்பர் ஒன்பது, பன்னிரண்டு, பதின்மூன்று.
உண்மையில், நடந்தது வர்த்தகமல்ல. கொள்ளை. மேற்கொண்டு இதனை விவரித்துக்கொண்டிருப்பது வீண்.
டச்சு கிழக்கிந்தியப் படைகளின் உதவி கமாண்டர் வில்லியம் ஜேக்கப் கோஸ்டர் (William Jacobsz Coster) என்பவர்தான் இந்தக் கோட்டை பிடிப்பு வைபவங்களை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். அவர் ஒருநாள் சாவகாசமாகப் புறப்பட்டு கண்டிக்குப் போனார்.
மன்னரைப் பார்த்து குத்தகை பாக்கி, சம்பள பாக்கி விவகாரங்களைப் பேசித் தீர்க்கலாம் என்று எண்ணம். கண்டி மன்னருக்கோ கோஸ்டரைப் பார்க்கவே பற்றிக்கொண்டு வந்தது. என்ன பேசுவது? எத்தனை பேசினாலும் கையில் பணமில்லை என் றால் இல்லைதான். கொள்ளையடிக்கவா முடியும்? அதைத்தான் டச்சுக்காரர்கள் செய்துகொண்டிருக்கிறார்களே?
மன்னர் பெருமானே, நீங்கள் இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்படலாகாது. ஒப்பந்தப்படி நீங்கள் எங்களுக்குப் பணம் கொடுத்தாக வேண்டும். நாங்கள் என்ன வேலை வெட்டி இல்லாமலா இலங்கைக்கு வந்து யுத்தம் புரிந்துகொண்டிருக்கிறோம்? எங்களுக்குச் சேரவேண்டியதை நீங்கள் கொடுத்துவிட்டால் நாங்கள் ஏன் உங்கள் ஊரில் உட்கார்ந்துகொண்டிருக்கப் போகிறோம்? வந்தோமா, வியாபாரத்தைப் பார்த்தோமா, புறப்பட்டுப் போனோமா என்று இருந்துவிட்டுப் போகிறோம். ஏதாவது ஒன்று சொல்லுங்கள். எப்போது பணம் வரும்? மொத்தமாகவா, தவணைகளிலா? என்றால், எத்தனை தவணை? நீங்கள் கொடுப்பதைப் பொறுத்துத்தான் மேற்கொண்டு யுத்தத்தைத் தொடர இயலும். ஆ, மறந்துவிடப் போகிறேன். நேற்றைக்குத் திருகோணமலை எங்கள் படையின்வசம் வந்துவிட்டது. அந்தக் கோட்டையை நான் நல்லெண்ண அடிப்படையில் உங்களுக்கே விட்டுக்கொடுத்துவிடுகிறேன். எங்கள் படை அங்கே இருக்காது. நீங்களும் சொன்ன வாக்கு மாறாமல்....
அந்தக் கணம் கண்டி மன்னர் ராஜசிங்கே ஒரு முடிவெடுத்தார். மிகவும் அபத்தமான, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட, பிரச்னைக்குரிய முடிவு. கோஸ்டரைக் கொன்று விடலாம்.
கண்டிக்கு வந்தபோது கோஸ்டர் ஏழெட்டு வீரர்களுடன்தான் வந்திருந்தார். அதைச் சாதகமாகப் பயன்படுத்தி, தீர்த்துக் கட்டிவிட்டால் என்ன? ராஜசிங்கே மிகத் தீவிரமாக யோசித்தார்.
பேச்சுவார்த்தை ஒன்றும் முற்றுப்பெறாத நிலையில், மன்னர் அவரிடம் திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைத்தான் சொன்னார். கொஞ்சம் பொறுங்கள். பணம் தந்துவிடுகிறேன்.
அவநம்பிக்கையுடன் புறப்பட்டுப் போன கோஸ்டரை வழியில் மடக்கினார்கள் மன்னர் அனுப்பிய ஆட்கள். அது இருக்கும் ஒரு நானூறு ஐந்நூறு பேர். ஒரு படையாக வந்தார்கள். படை முதலியார் (என்றுதான் அன்று அழைப்பார்கள். தளபதி என்று பொருள்.) நட்புடன் புன்னகை செய்தபடி முன்னால் வந்து கோஸ்டருடன் கைகுலுக்கினார். உங்கள் பாதுகாப்புக்காக மன்னர் எங்களை அனுப்பிவைத்தார். புறப்படலாமா?
அப்பாவி அல்லது அசட்டு கோஸ்டர் அவர்களை நம்பிப் புறப்பட்டதுதான். பிறகு அவரது உடல் மட்டக்களப்பு டச்சுக்கோட்டைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இவ்வாறான இருதரப்பு நட்பு, ஓங்கி உலகளந்து உத்தமன் பேர் பாடி உயிர்த்திருந்த காலத்தில், இலங்கையில் போர்த்துக்கீசியர்களின் காலம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு முடிவுக்கு வரத் தொடங்கியது.
போர்த்துக்கீசியர்கள் காலத்தில் அதிகமும் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் கடற்கரையோர மக்கள்தான். குறிப்பாக மீனவர்கள் மிகுதி. அவர்கள் மத்தியப் பகுதிகளில் அதிகம் கைவைக்கவில்லை. சிங்களர்கள் பவுத்தர்களாகவும், தமிழர்கள் ஹிந்துக்களாகவுமே இருந்தார்கள். இதனை இன்னும் சற்று விரித்துச் சொல்வதென்றால், படித்தவர்கள் மத்தியில் மதமாற்றம் என்பது அவர்களுக்கு சாத்தியமாக இல்லை. எழுதப் படிக்கக்கூடத் தெரியாதவர்கள்தான் போர்த்துக்கீசியர்களின் இலக்காக இருந்தது.
அது ஒருபுறமிருக்க, டச்சுக்காரர்களுக்கும் போர்த்துக்கீசியர்களுக்குமான ஆதிப் பகையே அந்த யுத்தத்தின் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்துவிடும் போலிருந்தது. ஐரோப்பிய அரசியல் சூழலில் ஏற்படத் தொடங்கியிருந்த சில மாறுதல்கள், ஸ்பெயினிடமிருந்து போர்ச்சுக்கலுக்குக் கிட்டிய விடுதலை ஆகியவற்றின் தொடர்ச்சியாக, நெதர்லாந்து என்கிற அன்றைய ஹாலந்து தேசம், போர்ச்சுக்கலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ளத் தயார் என்று அறிவித்தது.
இலங்கையில் போர்த்துக்கீசியர்களிடமிருந்து டச்சுக்காரர்கள் கைப்பற்றிய கோட்டைகள், கண்டி மன்னரை வெறுப்பேற்றுவதற்காக ஆங்காங்கே பிடித்து வைத்த கிராமங்கள், நகரங்கள், வயல்வெளிகள் என்று எல்லாவற்றையும் கற்பைப் போல் இரு கட்சிக்கும் பொதுவில் வைத்து, எரிந்த கட்சி, எரியாத கட்சி பேசி அமைதியாகப் பிரித்துக் கொண்டார்கள்.
போர்த்துக்கீசியர்களுக்கு மேற்கொண்டு இலங்கையில் காலனி வளர்க்க விருப்பமில்லாமல் போய்விட்டது. நூற்று முப்பது வருடங்கள் என்பது கொஞ்சமல்ல. அவர்களுக்கும் வெறுத்து விட்டது. `சரி, நீ ஆண்டு அனுபவி இனிமேல்' என்று ஊரைப்பார்க்க நடையைக் கட்டினார்கள். ஒரு சாஸ்திரத்துக்குச் சில போர்த்துக்கீசியக் குடியிருப்புகளை விட்டுவைத்தார்கள். சிங்களப் பெண்களை மணந்து வம்சம் வளர்த்த சில போர்த்துக்கீசியர்கள் மட்டும் அங்கேயே தங்கிக்கொண்டார்கள்.(பிறகு அவர்களது சந்ததியும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல தேசங்களுக்கு மெல்ல மெல்ல இடம்பெயர்ந்தார்கள்.)
ஹாலந்து தனது காலனியாதிக்கத்தை இலங்கையில் ஆரம்பித்தது 1685_ம் ஆண்டு. அடுத்த நூற்றுப் பதின்மூன்று வருடங்களுக்கு அவர்கள் அங்கே கோலோச்சினார்கள். ஒப்பீட்டளவில் போர்த்துக்கீசியர்கள் அளவுக்கு டச்சுக்காரர்கள் மதத் திணிப்பு, மொழித் திணிப்பு போன்ற விஷயங்களில் ஆர்வம் செலுத்தவில்லை. இயல்பிலேயே படு சுதந்திரமான அரசியல், சமூக சூழலை விரும்பக்கூடியவர்கள் அவர்கள். ஐரோப்பாவிலேயே அதி உன்னத ஜனநாயகம், பரிபூரண சுதந்திரம் தழைக்குமிடம் நெதர்லாந்தாகத்தான் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செய்துகாட்டியவர்கள்.
இந்தப் பின்னணியில், என்னதான் ஒப்பந்தக் குளறுபடி செய்து அவர்கள் கண்டி மன்னரை ஏமாற்றி இலங்கைக்குள் கால் பதித்தாலும், மக்களின் மதம், மொழி போன்ற விஷயங்களில் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது அவர்களது பெரிய பலமாக இருந்தது. சிறு முணுமுணுப்புகளுக்குப் பிறகு, இலங்கை மக்கள் அவர்களையும் அங்கீகரித்துவிட்டார்கள்.
ஆனால் ஒரேயடியாக உத்தமோத்தமர்களாகவும் அவர்கள் இருந்துவிடவில்லை. சில சேட்டைகள் செய்தார்கள். குறிப்பாக, இலங்கை மண்ணில் மக்களைப் பிரித்தாளும் தந்திரத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் டச்சுக்காரர்கள்தாம். இன ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், தமிழர் பகுதிகளில் சாதிய ரீதியிலும் மக்களிடையே இருந்த வேறுபாடுகளைச் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் சுட்டிக்காட்டி, நீ வேறு, நான் வேறு, அவன் வேறு, இவன் வேறு என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தது டச்சுக்காரர்களின் திருச்செயல்களில் ஒன்று. அரசுத் துறை சார் வேலைவாய்ப்புகளில் இந்த வித்தியாசங்களுக்குக் கணிசமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இரு பெரும் சமூகத்து மக்களிடையே அவநம்பிக்கையையும் சந்தேக உணர்வையும் அவ்வப்போது தூண்டிவிட்டு, அதன் மூலம் தனது இருப்பை பத்திரப்படுத்திக்கொள்வது. அடித்துக்கொண்டாலும் வெட்டி மடிந்தாலும் அவர்கள் பாடு. எனக்கென்ன? நான் பூரண சுதந்திரம் அளித்திருக்கிறேன். நூறு சதவிகித ஜனநாயகம் தழைக்கிறது. போர்த்துக்கீசியர் காலத்தில் இதையெல்லாம் கனவில் கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள் அல்லவா? நல்லது. நன்றாக வாழுங்கள்.
கண்டி ராஜ்ஜியம் அப்போதும் இருந்தது. அதே வெறுப்பு. அதே கோபம். அதே பகையுணர்ச்சி. என் தெற்குக் கோட்டைகள் போய்விட்டனவே என்கிற பரிதவிப்பு. எப்படியாவது உன்னை ஒழித்துக் கட்டுகிறேன் பார் என்று அதே வெஞ்சினம்.
ஆனால், நடைமுறையில் அப்போதும் அவர்களால் சுயமாக ஏதும் செய்ய இயலவில்லை. மலைப்பகுதி என்பதால் பாதுகாப்பு இருந்தது. ஒரு பெரும் படையெடுப்பு நிகழ்ந்தால், முறியடிக்க முடியாது போனாலும் சமாளித்துவிட முடியும். அதைத்தாண்டி, பேரரசை விஸ்தரிப்பதெல்லாம் நடக்காத காரியம். தீவின் எல்லைகள் முழுதையும் முதலில் கைப்பற்றி படிப்படியாக நான்கு திசைகளிலும் முன்னேறி ஆக்கிரமித்திருக்கிறார்கள் டச்சுக்காரர்கள். பெரிய படை. துல்லியமான நிர்வாகக் கட்டமைப்பு. நன்றாகப் பராமரிக்கவும் செய்கிறார்கள். எத்தனை நவீன ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள்! வாய்ப்பே இல்லை. ஒன்றும் செய்ய முடியாது. கண்டி ராஜ்ஜியம் என்பது ஒரு மாபெரும் காட்டெருமைப் பண்ணைக்குள் தனியே சிக்கிய கோழிக்குஞ்சு. நசுக்கி எறிவது ஒரு வேலையே இல்லை. இருந்தாலும் விட்டு வைத்திருக்கிறார்கள் என்றுதான் கொள்ள வேண்டும்.
எனவே, மீண்டும் அவர்கள் இன்னோர் அன்னிய ஒத்துழைப்பைக் கோரஆயத்தமானார்கள். போர்த்துக் கீசியப் பேயை விரட்ட டச்சு பூதம். டச்சு பூதத்தை விரட்ட பிரான்ஸ் பிசாசு.
1638-ல் யுத்தம் தொடங்கி, 1656-ல் கொழும்புவைக் கைப்பற்றியது வரைதான் டச்சுக்காரர்களுக்குச் சிரமம். கொழும்பு விழுந்த நான்கே வருடங்களில் கண்டி நீங்கலான முழு இலங்கைத் தீவையும் அவர்கள் வளைத்துவிட்டிருந்தார்கள். இலங்கையில் இருந்த கத்தோலிக்கர்களைப் படுத்தி எடுத்தார்களே தவிர, பவுத்தர்களையும் ஹிந்துக்களையும் அவர்கள் சீண்டவில்லை. நிறைய வரி, நிம்மதியான வாழ்க்கை என்பது இன்றளவும் நெதர்லாந்தில் கடைப்பிடிக்கப்படும் வாழ்க்கை முறை. அன்றைக்கு இலங்கையிலும் அதையேதான் அவர்கள் செய்தார்கள். மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம், தங்களுடைய நூற்றாண்டு கால ஆட்சியில் எப்போதும் அவர்கள் சிங்களர், தமிழர் அடிப்படை வித்தியாசங்களையும், இருதரப்பு கலாசார மாறுபாடுகளையும், இரு இனங்களின் முற்றிலும் வேறுபட்ட தன்மையையும் புரிந்துகொண்டு, மதித்தார்கள் என்பது. இரு இனத்தவர்களையும் சமமாகவே நடத்தினார்கள் என்பது. அவ்வப்போதைய சில்லறைச் சீண்டல்களைக் கூட இருதரப்பு மக்களுக்கும் சமமாகவே வழங்கினார்கள் என்பதை கவனமாக நினைவில் கொள்ள வேண்டும்.
என்னவோ, பிடிக்காமல் போய்விட்டது. டச்சுக்காரர்களை வழியனுப்பி வைத்துவிடலாம் என்று கண்டிச் சக்கரவர்த்தி முடிவெடுத்துவிட்டார். இம்முறை பிரான்ஸைக் கூப்பிடலாமா?
அவர்கள் ஆயத்தங்களில் இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. கண்டி மன்னர் கைது செய்து சிறையில் வைத்திருந்த ஒரு தனி மனிதர் தப்பித்துச் சென்று எழுதிய ஒரு புத்தகத்தினால் விளைந்த சம்பவம்.
விளைவாக, பிரான்ஸ் அங்கே வரவில்லை. பிரிட்டன் வருவதற்கு அதுவே காரணமானது.
நன்றி
குமுதம்
0 விமர்சனங்கள்:
Post a Comment