யுத்தம் சரணம் பாகம் 8
அவர் பெயர் ராபர்ட் நாக்ஸ் (Robert Knox).அவருடைய தந்தை பெயரும் ராபர்ட் நாக்ஸ். பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரிட்டிஷ்காரர்களான இந்த இரண்டு பேரும் அப்போது சென்னையில் வசித்துக்கொண்டிருந்தார்கள். சீனியர் நாக்ஸுக்கு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் வேலை. கப்பல் கேப்டன். செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அலுவலகம். புனித நதி கூவத்தின் கரையில் குடியிருப்பு.
மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்த தந்தையும் மகனும் ஒருநாள் பணி ஒப்பந்தம் முடிந்து, சொந்த ஊருக்குப் புறப்பட்டார்கள். அந்நாளில் யாராவது சரித்திரத்தில் இடம் பிடிக்கவேண்டுமென்றால், நடுக்கடலில் ஒரு புயலில் சிக்கியாக வேண்டும் என்பது விதி. எனவே ராபர்ட் நாக்ஸ் பயணம் செய்த கப்பலும் புயலில் மாட்டியது. சென்னையிலிருந்து புறப்பட்டு, வட மேற்கே போய்க்கொண்டிருந்த கப்பல் திசை தப்பித் தெற்குப் பக்கமாக வந்து, இலங்கையின் திருகோணமலைக்கு அருகே மூதூரில் கரை ஒதுங்கியது. உயிர் பிழைத்துக் கரையேறிய சீனியர், ஜூனியர் நாக்ஸையும் அவர்களது பதினேழு பேர் குழுவினரையும் கண்டி மன்னரின் வீரர்கள் கைது செய்து அழைத்துச் சென்றார்கள்.
1659-ம் ஆண்டு இவ்வாறு கைது செய்யப்பட்ட ராபர்ட் நாக்ஸ் குழுவினருக்கு கண்டி மன்னர் வழங்கிய தண்டனை சற்றே விசித்திரமானது. ஒரு சம்பிரதாயத்துக்குச் சில நாட்கள் மட்டும் சிறையில் வைத்திருந்துவிட்டு அவர்களை வெளியே விடச் சொல்லிவிட்டார். அங்கேயே வீடு பார்த்துத் தங்கலாம். உள்ளூர் பெண்களைக் காதலித்தோ, பெற்றோர் விருப்பத்துடனோ திருமணம் முடிக்கலாம். சந்ததி வளர்க்கலாம். தொழில் செய்யலாம். சொந்தத்துக்கு வீடு, நிலபுலன் வாங்கி சொத்து சேர்க்கலாம். பரம சவுக்கியமாக இருக்கலாம். ஆனால் கண்டி ராஜ்ஜியத்தைத் தாண்டி அவர்கள் வெளியே போகக்கூடாது.
எனவே, ராபர்ட் நாக்ஸ் குழுவினர் கண்டியிலேயே செட்டில் ஆனார்கள். ஆளுக்கொரு வேலை செய்து எப்படியோ வாழ்க்கையை ஓட்டினார்கள். சொந்த தேசம் போகமுடியவில்லை என்பது தவிர வேறு குறையொன்றுமில்லை.
காலக்கிரமத்தில் ராபர்ட் நாக்ஸ் சீனியர் மலேரியா காய்ச்சல் கண்டு இறந்து போனார். அவரது மகன் தொப்பி செய்து விற்றுப் பிழைக்கலானார். படிப்படியாக முன்னேறி அரிசி வியாபாரத்தில் இறங்கினார். பிறகு அரிசி மட்டுமல்லாமல், சோளம், எண்ணெய் வகைகள், மிளகு, சீரகம், இலவங்கம் எனப் பலவற்றை வாங்கி விற்கும் வியாபாரம் தொடங்கி, பிராந்தியத்தில் ஒரு நல்ல வர்த்தகராகப் பெயரெடுத்தார்.
ஆனால், என்றைக்காவது இலங்கையிலிருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர் மனத்தை விட்டுப் போகவேயில்லை. உடன் வந்த பதினேழு பிரிட்டிஷாரும் அம்மாதிரி தொடக்கத்தில் இருந்த எண்ணத்தையெல்லாம் மறந்துவிட்டு, குடும்பம், குழந்தை குட்டி என்று மாறிவிட, ராபர்ட் நாக்ஸ் மட்டும் அப்போதும் பிரம்மச்சாரியாகவே இருந்தார். ஒரு நல்ல தருணத்துக்காகக் காத்திருந்தார்.
அப்படியொரு தருணம் வாய்த்தபோது யாருக்கும் தெரியாமல் கடையை மூடிவிட்டு, மூட்டை முடிச்சுகளோடு கண்டியிலிருந்து தப்பித்து வடக்கே அனுராதபுரத்துக்குப் போய் சில நாள் அங்கே பதுங்கியிருந்துவிட்டு, அங்கிருந்து மன்னார் அரிப்பு பகுதிக்கு வந்து சேர்ந்தார்.
இன்றைக்குக் கண்டியிலிருந்து தம்புலா, வவுனியா, புளியங்குளம், கிளிநொச்சி, பரந்தன், ஆனை இரவு, சாவகச்சேரி வழியே யாழ்ப்பாணம் வரை நீளமாக ஒரே சாலை. நடுவே மெடவாச்சியாவிலிருந்து (Medawachchiya) மேற்கே திரும்பிவிட்டால் செட்டிக்குளம், உயிலங்குளம், மன்னார். அரசியல் மற்றும் யுத்த சூழலால் இவற்றின் பயன்பாடு அவ்வப்போது முன்னப்பின்ன ஆனாலும் சாலை என்று ஒன்று இருக்கிறது.
ராபர்ட் நாக்ஸ் காலத்தில் அத்தகு வசதிகள் இல்லையாதலால் கஷ்டப்பட்டுத்தான் அவர் மன்னாரை அடைய முடிந்தது. தவிரவும், மன்னரின் ஆட்கள் வழியில் பார்த்துவிட்டால் தீர்ந்தது கதை.
மன்னார் தீவில் அப்போது டச்சுப்படைகள் இருந்தன. அந்தப் பிராந்தியம் அவர்களின் பிடியில்தான் இருந்தது. அங்கே போய்ச் சேர்ந்த ராபர்ட் நாக்ஸ், டச்சுக்காரர்களின் உதவியுடன் தமிழகத்துக்கு வந்தார்.
1680-ல் கிழக்கிந்திய கம்பெனியில் தன் தந்தையைப் போலவே ஒரு கப்பல் கேப்டனாகப் பணிக்குச் சேர்ந்த நாக்ஸ், பதினான்கு வருட காலம் அங்கே வேலை பார்த்தார். ஏதோ காரணங்களால் பணி நீக்கம் செய்யப்பட, (தேடவே வேண்டாம். சொந்தமாக ஒரு கப்பல் வாங்கி, தனியாவர்த்தனம் செய்துகொண்டிருந்தார். அதைக் காட்டிலும் பெரிய காரணம் இருந்திருக்க முடியுமா என்ன?) லண்டனுக்குப் போய் வசதியாக வாழ்ந்து மரித்துப் போனார். இறுதிவரை திருமணம் மட்டும் செய்துகொள்ளவே இல்லை.
இந்த ராபர்ட் நாக்ஸ், சென்னைக்குத் தப்பி வந்து வேலைக்குச் சேர்ந்த மறு ஆண்டு ஒரு புத்தகம் எழுதினார். பத்தொன்பது ஆண்டு காலம் கண்டியில் தான் வசித்த காலங்களில் நேர்ந்த அனுபவங்களை அந்தப் புத்தகத்தில் அவர் விவரித்திருந்தார். 'An Historical Relation of the Island Ceylon, in the East-Indies' என்ற அந்தப் புத்தகம் இலங்கையைப் பற்றிய மிக முக்கியமானதொரு சரித்திரப் பதிவு.
பதினேழாம் நூற்றாண்டில் இலங்கை எப்படி இருந்தது? ஆட்சி எப்படி, மன்னர் எப்படி, மக்கள் எப்படி, என்னென்ன பயிரிட்டார்கள், வர்த்தகத்தில் எது முக்கியம், வாழ்க்கையில் எது முக்கியம், பவுத்தம் தழைத்த விதம், கிறிஸ்துவம் பரவும் விதம், சிங்களர்கள் ஆண்ட கதை, தமிழர்கள் வாழ்ந்த விதம், டச்சுக்காரர்கள் ஆக்கிரமிப்பு, நீதி, அநீதி, குற்றவாளிகளைத் தண்டித்த விதம் (யானையின் காலடியில் படுக்கவைத்து மரண தண்டனை அளிப்பது கண்டிப் பேரரசில் அப்போது ரொம்ப ஃபேமஸ்!), மக்களின் உணவு, உடை, கலை, கலாசாரம் என்று எதையும் விடவில்லை நாக்ஸ்.
சிங்களர்கள் ஒரு காலத்தில் தேனீக்களை மிகவும் விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாக்ஸின் புத்தகத்தைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம். மலைக்காடுகளில் பெரிய பெரிய தேன் அடைகளில் இருந்து தேன் எடுக்கப்போகிறவர்கள் மறக்காமல் தேனீக்களையும் பிடித்துக்கொண்டு வரவேண்டும். பாத்திரங்களில் தேன் வாங்கும் மக்கள், கூடைகளில் தேனீக்களையும் வாங்குவார்கள். தேனீ வறுவல் தேவாமிர்தமாக இருக்கும் போலிருக்கிறது.
கண்டி மன்னர்களைப் பற்றியும் அவர்களது தனி வாழ்க்கை குறித்தும் நாக்ஸ் இந்நூலில் விவரித்திருக்கும் பல விவரங்கள் மிக முக்கியமானவை. தான் சிறைப்பட்டிருந்த காலத்தில் கண்டியை ஆண்ட சிங்கள மன்னன் ரத்க சிங்கா (Radgasingha)வைப் பற்றிச் சொல்லும்போது, அவர் உடம்பில் ஓடுவது ராஜ ரத்தமல்ல என்கிறார் ராபர்ட் நாக்ஸ். ரத்க சிங்காவுக்கு முன் கண்டியை ஆண்ட மன்னரின் மனைவிக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருந்திருக்கிறார்கள். டோனா காத்தரீனா என்கிற அந்த ராணி, தன் கணவரின் மறைவுக்குப் பிறகு ஒரு கிறிஸ்துவ பாதிரியாரைத் திருமணம் செய்துகொண்டு பெற்ற பிள்ளைதான் ரத்க சிங்கா.
ரத்க சிங்கா பிறந்ததுமே அரியணையில் உட்கார வைத்துவிட்டு, இளவரசரின் சார்பில் அந்தப் பாதிரியாரே நாட்டை ஆண்டிருக்கிறார். பிறகு என்ன நினைத்தார்களோ, பங்காளிச் சண்டைகள் வந்துவிடக் கூடாதே என்று ராணியின் முந்தைய இரு பிள்ளைகளுக்கும் ஆளுக்குக் கொஞ்சமாக தேசத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டு, ரத்க சிங்கா மேஜரானதும் அவருக்குரிய நிலத்தை ஆளச் சொல்லியிருக்கிறார்கள்.
ரத்க சிங்காவின் மலபார் மனைவியைப் பற்றியும் நாக்ஸ் நிறையவே சொல்லியிருக்கிறார். எல்லா கண்டி மன்னர்களையும் போல இந்தியாவிலிருந்துதான் அவரும் பெண் எடுத்திருக்கிறார். கேரளப் பெண். ஆனால் என்ன காரணத்தாலோ கொஞ்ச நாளிலேயே ராணியைப் பிடிக்காமல் போய்விட, தனியே குடி வைத்துவிட்டார். தான் கண்டியில் வாழ்ந்த இருபதாண்டு காலத்தில் ஒருமுறை கூட ராணி அரண்மனையை விட்டு வெளியே வந்ததில்லை என்று எழுதுகிறார் நாக்ஸ். ராணிக்குப் பிறந்த ஒரு பையன், ஒரு பெண், அவர்களது நடவடிக்கைகள், மன்னரின் ஆட்சிமுறை, அவரது ஒற்றர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என்று ஒவ்வொருவரைப் பற்றியும், ஒவ்வோர் அம்சத்தைப் பற்றியும் மிக நுணுக்கமாக விவரிக்கிறது இந்த நூல்.
நாக்ஸின் புத்தகம் லண்டனில் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. தன் சக்திக்கு மீறி விற்பனையான இந்நூல், பிரிட்டிஷ் மக்களைக் கவர்ந்ததுபோலவே, அதன் ஆட்சியாளர்களையும் கவர்ந்தது, யோசிக்க வைத்தது.
ஐரோப்பாவெங்கும் தறிகெட்டு யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயம் அது. யார், யாரை, எதற்காக அடிக்கிறார்கள், யாருக்குள் என்ன சண்டை என்றே சொல்ல முடியாது. நாடு பிடிக்கும் வெறி அத்தனை பேருக்கும் இருந்தது. அதே மாதிரி யாருக்கும் யாருக்கும் கூட்டணி, எதனால் கூட்டணி, எத்தனை காலக் கூட்டணி என்றும் கண்டுபிடிப்பது கஷ்டம். கப்பல் ஏறிப் போய் யார் யார் எந்த மண்ணைப் புதிதாகக் கண்டடைகிறார்களோ, அந்த இடம் அவரது தேசத்தின் காலனியாகிவிடும். அப்படிக் கொடி நாட்டும் தேசங்களின் பின்னாலேயே அவர்களுடைய பங்காளிகள் வந்துவிடுவார்கள். இங்கே உன் காலனி, அங்கே என் காலனி என்று ஆரம்பிக்கும். அடித்துக்கொள்வார்கள். சக்திமிக்கவன் ஜெயிப்பான். தோற்றவன், அடுத்த சந்தர்ப்பத்துக்குக் காத்திருப்பான். கூட்டணி சேர்ப்பான். குட்டையைக் குழப்புவான்.
அந்தச் சரித்திரத்துக்கு உள்ளே போனால் நாம் மீள முடியாது. எனவே, இந்த இடத்துக்குத் தேவையான ஒரு விவரத்தை மட்டும் பார்த்துவிட்டு மேலே போய்விடுவோம்.
படாவியன் பேரரசு (Batavian Kingdom) என்ற பெயரில் இந்தோனேஷியா பகுதியில் அன்றைக்குக் கோலோச்சிக்கொண்டிருந்த டச்சு அரசாங்கம் மிகவும் வலுவாக இருந்தது. பிராந்தியத்தில் அவர்களுக்கு நல்ல புகழ், செல்வாக்கு. அவர்களது உதவியுடன்தான் சென்ற அத்தியாயத்துக் கண்டி மன்னர் இலங்கையில் இருந்த போர்த்துக்கீசியர்களை வெளியே துரத்தினார்.
இந்த படாவியன் என்கிற நெதர்லாந்து அரசுக்கும் அன்றைய பிரான்ஸ் அரசுக்கும் நல்லுறவு, ஒப்பந்தம், கூட்டணி, நேசம் எல்லாம் இருந்தது. ஐரோப்பாவில் பிரான்ஸ் நெதர்லாந்துக் கூட்டணி அன்றைக்கு பிரிட்டன் படைகளுக்குத் தீராத தலைவலியாக இருந்தது.
இந்தச் சூழலில், கண்டி மன்னர் இலங்கையில் இருந்த டச்சுக்காரர்களை வெளியேற்ற பிரான்ஸின் உதவியை எதிர்பார்க்கிறார் என்கிற விஷயம் கசிந்தால் பிரிட்டன் என்ன மாதிரி யோசிக்கும்?
விளக்கவேண்டாம் அல்லவா? ஏற்கெனவே பிரான்சுடனான யுத்தங்களைத் தாற்காலிகமாகவேனும் நிறுத்தி வைக்க யோசித்துக்கொண்டிருந்த பிரிட்டன், மார்ச் 25, 1802-ம் ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் ஓர் ஒப்பந்தம் (Treaty of Amiens)செய்துகொண்டது. நெப்போலியன் காலத்து யுத்தங்களின் தொடர்ச்சியாக, பிரெஞ்சுப் புரட்சி யுத்தங்களின் எச்சமாக அடித்துக்கொண்டிருந்ததையெல்லாம் நிறுத்தி வைத்துவிட்டுக் கொஞ்சம் அமைதி காப்போம். அது அழகானது. இருதரப்புக்கும் லாபம் தரத்தக்கது.
போரில் நான் பிடித்து வைத்த உன் வீரர்களை விடுவித்துவிடுகிறேன். என் வீரர்களை நீ திருப்பி அனுப்பு. தென்னாப்பிரிக்காவில் இருந்த உங்கள் டச்சுக் காலனியை நான் அபகரித்தேன். மறந்துவிடு. இப்போது திருப்பியளித்துவிடுகிறேன். அங்ஙனமே மேற்கிந்தியத் தீவில் கைப்பற்றிய இடங்களையெல்லாம் உங்கள் வசம் ஒப்படைத்துவிடுகிறேன். எகிப்திலிருந்தும் என் படைகள் வாபஸாகும். பதிலுக்கு நீ எனக்கு ட்ரினிடாடைக் கொடு. டொபாகோவைக் கொடு. சிலோனைக் கொடு. இத்தாலியில் நீ பிடித்துவைத்திருக்கும் சில பகுதிகள்மீது எனக்குக் காதலுண்டு. அதைக் கொடு. ஃப்ரெஞ்ச் கயானாவின் எல்லைகளை நாம் இணைந்து வகுப்போம். எல்லை தாண்டி பயங்கரவாதம் செய்யமாட்டோம் என்று வீரசபதம் கொள்வோம்.
இவ்வாறாக பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே அமைதிப்பூங்கா அமைக்கப்பட்டது. விளைவாக, இலங்கை என்கிற அந்நாளைய சிலோன் பிரிட்டிஷ் காலனியாவதற்கான வாசல் திறக்கப்பட்டது.
(தொடரும்)
நன்றி
குமுதம்
0 விமர்சனங்கள்:
Post a Comment