முல்லைத்தீவு பிரதேசத்தில் 9 இராணுவ அணிகள் முன்னகர்வு
முல்லைத்தீவு பிரதேசத்தில் 9 இராணுவ அணிகள் முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
புலிகளின் இலக்குகள் மீது கடும் தாக்குதலை நடத்தியவாறு முன்னேற்ற முயற்சி தொடர்கின்றது. இதனால், முல்லைத்தீவு பகுதிக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார். புதுக்குடியிருப்பு, விசுவமடு, தருமபுரம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு பிரதேசங்களுக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர்.
படையினரின் முன்னேற்ற முயற்சிகளை முறியடிக்கும் வகையில் புலிகள் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஆனாலும் படையினர் அதனை முறியடித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் பகுதி மீது நேற்று விமானப் படையினரது குண்டு வீச்சு விமானங்கள் இருதடவைகள் விமானக் குண்டு வீச்சினை நடத்தியுள்ளன. இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது:இராணுவத்தின் ஒன்பது படையணிகள் முல்லைத்தீவு பிரதேசத்தை சுற்றிவளைத்தவாறு தீவிர முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனையிறவு பிரதேசம் படையினரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதை அடுத்து விடுதலைப் புலி உறுப்பினர்கள் முல்லைத்தீவுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தின் 57, 58 மற்றும் 59ஆவது படையணிகளும் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது விஷேட படையணிகள் போன்றனவும் தற்போது முல்லைத்தீவை சுற்றிவளைத்துள்ளன.
அத்துடன் முகமாலை மற்றும் கிளாலி பிரதேசங்களைக் கைப்பற்றி முன்னேறிவரும் 53ஆவது மற்றும் 55ஆவது படையணியினர் அவர்களுடன் இணைந்து கடும் தாக்குதல்களை மேற்கொண்டவாறு முன்னேறி வருகின்றனர்.
வீரகேசரி நாளேடு
0 விமர்சனங்கள்:
Post a Comment