கிளிநொச்சியில் புலிகளின் தோல்வி அரசியல் தீர்வுக்கு வழிதிறக்கும்
அரசாங்க படைகள் கிளிநொச்சியைக் கைப்பற்றியிருப்பது புலிகள் இயக்கத்துக்கு மோசமான தோல்வி. சனங்கள் இல்லாத நகரத்தையே கைப்பற்றினார்கள் என்றும் தந்திரோபாயமான பின்வாங்கல் என்றும் கூறித் தோல்வியை மறைக்க முடியாது கிளிநொச்சியைத் தங்கள் தலைநகரமாகவே புலிகள் அறிமுகப்படுத்தி வந்தார்கள்.
தனிநாட்டுக்குரிய முழுமையான கட்டமைப்பைக் கிளிநொச்சியில் கொண்டிருப்பதாகவும் அதை ஒருபோதும் இழக்கப் போவதில்லை என்றும் கூறினார்கள். அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கிளிநொச்சியை இழந்தது சாதாரண தோல்வியல்ல.
முன்னைய யுத்தங்களுடன் ஒப்பிடுகையில், பொதுமக்களின் பாதிப்பு மிகக் குறைவு என்றே கூற வேண்டும். பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என்ற தனது உத்தரவைப் படையினர் சரியாகப் பின்பற்றி நடந்திருக்கின்றார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘இந்து’ பத்திரிகையின் ஆசிரியர் என். ராமுக்குக் கூறியதை இங்கு குறிப்பிடலாம்.
கிளிநொச்சியில் புலிகள் அடைந்த தோல்வி அவர்களின் சரிவைத் துரிதப்படுத்தவே செய்யும். இக்கட்டுரை அச்சில்வரும் போது படையினர் மேலும் கூடுதலான இடங்களைக் கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கிளிநொச்சியில் படையினர் அடைந்த வெற்றி இரண்டு கோணங்களிலிருந்து வரவேற்கப்படுகின்றது. சிலர் பேரினவாதக் கோணத்திலிருந்து வரவேற்கின்றார்கள். இப்படியானவர்கள் எந்தக் காலத்திலும் இருக்கவே செய்வார்கள்.
சகல இனங்களையும் சேர்ந்த ஜனநாயக சக்திகள் வேறு கோணத்திலிருந்து வரவேற்கின்றார்கள். இந்த வெற்றி அரசியல் தீர்வுக்கு இதுவரையில் இருந்த தடையை நீக்குகின்றது என்ற அடிப்படையில் இவர்கள் வரவேற்கின்றார்கள்.
இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியில் புலிகள் தொடர்ச்சியாகத் தடையாகவே செயற்பட்டிருக்கின்றார்கள். அரசியல் தீர்வில் அக்கறை இருப்பதாக அடிக்கடி கூறிக்கொள்கின்ற போதிலும் ஒவ்வொரு கட்டத்திலும்அவர்கள் அரசியல் தீர்வைக் குழப்பும் வகையிலேயே செயற்பட்டிருக்கின்றார்கள்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் வடக்கு - கிழக்கு மாகாண சபை செயற்பாட்டுக்கு வந்தது. மாகாண சபையைக் கலைப்பதற்கான முயற்சியில் நீண்ட காலமாக புலிகள் ஈடுபட்டார்கள். அடிப்படையில் இந்தியாவுக்கும் மாகாண சபை நிர்வாகத்திற்கும் எதிரான உணர்வலையைக் கொண்டிருந்த ஜனாதிபதி பிரேமதாச இவர்களுக்குக் கைகொடுத்தார்.
அவரின் உதவியுடன் மாகாண சபை செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்தார்கள்.
பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தில் அரசியல் தீர்வு பற்றிப் பேச வேண்டும் என்ற ஆலோசனை அரசாங்க தரப்பினால் முன்வைக்கப்பட்டது. நீங்கள் மாகாண சபையைக் கலைத்துப் புதிய தேர்தல் வைத்தால் நாங்கள் அதில் போட்டியிட்டு மக்களின் பிரதிநிதிகளாகப் பேசலாம்’ என்று அன்ரன் பாலசிங்கம் அப்போது கூறினார்.
மாகாண சபை தொடர்ந்து செயற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம். தேர்தலில் போட்டியிட்டு மக்களின் பிரதிநிதிகளாகப் பேசுவ தாகக் கூறியதெல்லாம் பிரேமதாசவை ஏமாற் றுவதற்காகவே. மாகாண சபை தொடர்ந்து செயற் பட்டால் தனிநாட்டுக் கோரிக்கையை மக்கள் மத்தியில் ‘விற்க’ முடியாது என்பதாலேயே அதன் செயற்பாட்டைக் குழப்பத் தீர்மானித் தார்கள். மாகாண சபை தானாகக் கலையும் நிலையைத் தோற்றுவித்த பின் அவர்களுக்குப் பிரேமதாசவின் உறவு தேவைப்பட வில்லை.
சந்திரிகா குமாரதுங்கவின் அர சாங்கத்துடனும் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்தப் பேச்சுவார்த்தையிலும் அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டே வந்தார்கள். பேச்சுவார்த்தை தொடர்ந்தது. ஆனால் அரசியல் தீர்வு பற்றிப் பேசவில்லை.
இந்த நிலையில், அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் கடிதமொன்றை 1995 மார்ச் 9ந் திகதி ஜனாதிபதி சந்திரிகா பிரபாகரனுக்கு அனுப்பினார். ஏப்ரல் 2ந் திகதிக்கும் 10ந் திகதிக்குமிடையே பேச்சுவார்த்தைக்கு வசதியான ஒரு தினத்தை அறிவிக்கும் படியும் அத்தினத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன் கிடைக்கக் கூடியதாக அரசாங்கத்தின் ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் ஜனாதிபதி சந்திரிகா அக்கடிதத்தில் கூறியிருந்தார்.
புலிகளுக்கு உண்மையாகவே அரசியல் தீர்வில் அக்கறை இருந்திருந்தால் அந்த அழைப்பை ஏற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கு பற்றியிருக்க வேண்டும்.
அதைச் செய்யவில்லை. பூநகரி இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என் பதையும் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்தில் ஆயுததாரி களாக நடமாடுவதை அனும திக்க வேண்டும் என்பதையும் பேச்சுவார்த்தைக்கான நிப ந்தனைகளாக முன்வைத் தார்கள்.
இவ்விரு நிபந்தனைகளையும் அரசாங்கம் நிறைவேற்று வது சாத்தியமில்லை என் பது அவர்களுக்குத் தெரியா மலில்லை. அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தையைத் தவிர் க்க வேண்டும் என்பதற்காகவே நடைமுறைச் சாத்தியமற்ற நிபந்தனைகளை முன்வைத் தார்கள். பேச்சுவார்த்தை முறிந்தது.
பேச்சுவார்த்தை முறிந்த போதிலும், பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்துப் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்தது. இத்தீர்வுத் திட்டம் மாகாண சபையிலும் பார்க்க கூடுதலான அதிகாரங்களுடைய பிராந்திய சபையை உருவாக்குவதாக இருந்தது.
பிராந்திய சபையின் எல்லைகளையோ அதிகாரங் களையோ அச்சபையின் சம்மதமின்றி எவ்விதத்திலும் மாற்ற முடியாது என்ற வலுவான பாதுகாப்பு ஏற்பாடும் அத் தீர்வுத்திட்டத்தில் உள்ளடங் கியிருந்தது.
இத்தீர்வுத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் தனி நாட்டுக் கேரிக்கையின் பக்கம் எவரும் திரும்ப மாட்டார்கள் என்பதால் புலிகள் வழமையான தங்கள் அணுகுமுறையின் மூலம் தமிழ்க்கட்சிகளைத் தீர்வுத் திட்டத்துக்கு எதிராகத் திருப் பினார்கள். அத் தீர்வுத்திட்டம் பாரா ளுமன்றத்தில் மூன்றிலிர ண்டு பெரும்பான்மையு டன் நிறைவேற முடியாத நிலை ஏற்பட்டதற்குத் தமிழ்க் கட்சிகளின் எதிர்ப்பே பிரதான காரணம்.
இத்தீர்வுத்திட்டத்தை ஏற்றிருந்தால் அதற்குப் பிந்திய அழிவுகளையும் இழப்புகளையும் தமிழ் மக்கள் சந்திக்க நேர்த்திருக்காது. அதிலுள்ள குறை பாடுகளைக் காலப்போக்கில் தீர்த்துக் கொள்ள முடிந்திருக்கும்.
அடுத்த கட்டம் ரணிலின் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை.
ரணிலின் அரசாங்கத்துடன் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளைப் புலிகள் நடத்தினார்கள். ஆனால் அரசியல்தீர்வு பற்றிப் பேசவில்லை. உதவி வழங்கும் சகல நாடுகளும் பங்கு பற்றும் மகாநாடொன்று ரோக்கியோவில் நடைபெறுவதாக இருந்தது.
ரோக்கியோ மகாநாட்டில் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய பிரச்சினை எழலாமென்பதால் மகாநாட்டுத் திகதிக்கு முன்னதாகவே புலிகள் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக் கொண்டார்கள்.
ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறியே பேச்சுவார்த்தையிலிருந்து விலகினார்கள்.
ஆனால், ரோக்கியோ மகாநாட்டில் பங்குபற்று வதைத் தவிர்க்க ‘ரிqனிu என்பதே உண்மையான நோக்கம். அந்த மகாநாட்டில் அரசியல் தீர்வு விடயம் எழும் என்பதும் அது தங்களுக்குத் தர்மசங்கடமான நிலையைத் தோற்றுவிக்கும் என்பதும் புலிகளுக்குத் தெரியும்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும், பேச்சுவார்த்தைக்கு வருமாறு புலிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஒரு பேச்சுவார்த்தையில் ஏனோதானோவென்று பங்கு பற்றிய புலிகள் அதன் பின்னர் பேச்சுவார்த்தையில் பங்குபற்ற மறுத்துவிட்டனர். மாவிலாறு அணையின் துருசை மூடி அரசாங் கத்தின் இராணுவ நடவடிக்கைக்கு வழிவகுத்தனர். அதன் பிறகு நடந்தது தெரிந்த கதை.
அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்குப் புலிகள் தயாராக இல்லை. அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் அவற்றைச் சீர்குலைப்பதிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்தார்கள். அவர்களின் இலக்கு தனிநாடு. தனிநாட்டைத் தவிர வேறு எதையும் ஏற்க அவர்கள் விரும்பாததாலேயே இவ்வாறு நடந்து கொண்டார்கள்.
ஒக்ரோபர் கடைசி வார த்தில் நக்கீரன் பத்திரிகைக்கு அளித்த மின்னஞ்சல் செவ்வியில் ‘தமிbழத்து க்குக் குறைவான எதையும் விடுதலைப் புலிகள் ஏற்க மாட்டார்கள்’ என்று பிரபாகரன் கூறியதை இங்கு குறிப்பிடலாம்.
தனிநாடு சாத்தியமில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் தனிநாட்டை அமைக்க முடியாது. புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனிநாடு அமைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதும் இப்போது நிரூபணமாகிவிட்டது.
தனிநாடு இலங்கைத் தமிழர்களின் ஏகமனதான கோரிக்கையல்ல. தமிழ் மக்கள் தனிநாட்டை ஆதரிக்கின்றார்களா என்பதை அறிவதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்று இதுவரை பின்பற்றப்படவில்லை.
பலமான வெளிநாடொன்றின் ஆதரவு இல்லாமல் தனிநாடு சாத்தியமில்லை. எந்தவொரு வெளிநாடும் இலங்கையில் தனிநாடு அமைவதை ஆதரிக்கும் நிலையில் இல்லை.
ஆனால், புலிகள் தனிநாட்டைத் தவிர வேறெதையும் ஏற்பதற்குத் தயாராக இல்லை. இது அரசியல் தீர்வுக்குத் தடையான நிலைப்பாடு. எனவே, இனப்பிரச்சினை தொடர்பான களத்திலிருந்து புலிகள் நீங்குவது அரசியல் தீர்வுப் பாதையிலுள்ள தடை நீங்குவதாகின்றது.
புலிகள் நீங்கியதும் அரசியல் தீர்வு வந்துவிடுமா என்ற கேள்வி எழலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் தீர்க்கதரிசனமற்ற அணுகுமுறை காரணமாக அரசியல் தீர்வுப் பாதையில் தமிழினம் எவ்வளவோ பின்னோக்கிச் சென்று விட்டது.
அரசியல் தீர்வைத் தவிர வேறெந்த வழியிலும் தமிழினத்துக்கு விமோசனம் இல்லை என்பதால் அரசியல் தீர்வுக்காக முயற்சித்தேயாக வேண்டும்.
யதார்த்தத்தை விளங்கிக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் அரசியல் தீர்வு முயற்சியில் தங்களை ஈடுபடுத்த முன்வர வேண்டும்.
இல்லையென்றால் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறுவதில் அர்த்தமில்லை. அரசியல் தீர்வை நாடும் சகல சக்திகளுடனும் இணைந்து கருத்தீடுபாட்டுடன் செயற்பட்டால் சிறிது காலத்தில் அரசியல் தீர்வை அடைய முடியும்.
சுரேஷ் நாகேந்திரா
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment