பிரேமதாசவின் இந்திய எதிர்ப்பு
கிளிநொச்சியை அரசாங்க படையினர் கைப்பற்றியிருப்பது அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய வெற்றி. தென்னிலங்கையின் சகல பகுதிகளிலும் மக்கள் இந்த வெற்றியை ஆரவாரத்தோடு கொண்டாடினார்கள்.
கிளிநொச்சி புலிகளின் கோட்டை என்றே கருதப்பட்டது. இதைக் கைப்பற்றிய கெளரவம் அரசாங்கத்துக்குக் கிடைப்பதை எதிர்க்கட்சித் தலைவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வெற்றியின் உண்மையான கெளரவம் தனக்கே உரியது என்ற வகையில் சில கருத்துகளை அவர் வெளியிட்டார்.
யுத்தநிறுத்த காலத்தில் தனது அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்த ஆயுதங்களையே இப்போது படையினர் பயன்படுத்தி வெற்றியீட்டினார்கள் என்றார். அரசாங்க படைகள் இப்போது அடைந்த வெற்றிக்கு 2002ம் ஆண்டு செய்த யுத்தநிறுத்தமே காரணம் என்ற வகையில் ரணில் பேசினார்.
அரசாங்க தரப்பினர் இதைக் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பார்களா? யுத்தநிறுத்த காலத்திலேயே புலிகள் தங்களைப் பலப்படுத்தினார்கள் என்று அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அறிக்கையொன்றின் மூலம் ரணிலைச் சாடினார்.
புலிகள் விமானம் கொண்டு வந்ததும் நவீன தொலைதொடர்பு சாதனங்களைப் பெற்றுக்கொண்டதும் நவீன ஆயுதங்களைக் கொண்டுவந்ததும் யுத்தநிறுத்த காலத்திலேயே என்று அரசாங்க தரப்பினர் கூறியதில் உண்மை இல்லாமலில்லை.
புலிகள் பலமடைந்ததில் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கணிசமான பங்களிப்பு உண்டு. ரணில் விக்கிரமசிங்ஹவின் அரசாங்க காலத்தில் மாத்திரமன்றி அதற்கு முன்னரும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடு புலிகளை வளர்த்திருக்கின்றது.
ஜனாதிபதி பிரேமதாச இராணுவ அதிகாரிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது புலிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்ததோடு நிற்கவில்லை. அவர்களுக்குப் பணமும் கொடுத்தார். இது இப்போது எல்லோருக்கும் தெரிந்த கதை. பலருக்குத் தெரியாத இன்னொரு சம்பவமும் உண்டு.
புலிகள் வெளியிலிருந்து ஆயுதங்கள் கொண்டுவருவதைத் தடுக்கும் வகையில், இலங்கையின் கிழக்குக் கடற் பகுதியில் இந்திய கடற்படையும் இலங்கைக் கடற்படையும் கூட்டாக ரோந்து செய்வதற்கான ஆலோசனையை இந்திய அரசாங்கம் 1991 யூலை 7ந் திகதி இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிவித்தது.
ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டு நாற்பத்தைந்து நாட்களுக்குப்பின் இந்த ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அது பிரேமதாசவுக்கும் புலிகளுக்கு மிடையிலான தேன்நிலவு முடிந்திருந்த காலம். பிரேமதாச இந்திய அரசாங்கத்தின் ஆலோசனையை நிராகரித்தார்.
இக் காலப் பகுதியில் கிழக்குக் கடற் பரப்புக்கூடாகப் புலிகள் பெருமளவு ஆயுதங்களைக் கொண்டு வருவது பிரேமதாசவுக்குத் தெரியாமலிருக்க முடியாது. புலனாய்வு அறிக்கைகளிலிருந்து நிச்சயமாக இதை அவர் அறிந்திருப்பார்.
இந்திய ஆலோசனையை ஏற்றிருந்தால், புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து சேர்வதைப் பெருமளவில் தடுத்திருக்க முடியும். அப்படியிருந்தும் இந்தியாவின் ஆலோசனையைப் பிரேமதாச நிராகரித்ததற்கு ஒரேயொரு காரணத்தையே கூற முடியும். அவரது இந்திய எதிர்ப்பு.
மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் போன்ற இந்தியப் பெரியார்களைப் பிரேமதாச பல தடவைகள் முன்னுதாரணமாகக் காட்டியிருக்கின்றார். ஆனால் அடிப்படையில் இந்திய எதிர்ப்புணர்வு அவரிடம் ஆழமாக வேரூன்றியிருந்தது.
இந்திய அமைதிப் படையை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதில் அவர் காட்டிய அக்கறை அவரது இந்திய எதிர்ப்பின் வெளிப்பாடு.
இந்திய அமைதிப் படையை வெளியேற்றிய செயலும் புலிகள் பலமடைவதற்குப் பாரிய அளவில் உதவியது.
பாராளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கமும புலிகளால் கொலை செய்யப்பட்டவர்கள். இக் கொலைகளைப் பிரேமதாச எவ்வாறு நோக்கினார் என்பதை அவருக்கு மிக நெருக்கமானவராக இருந்த தயான் ஜயதிலக Negotiating Peace in Sri Lanka என்ற தொகுப்பு நூலில் எழுதிய கட்டுரையின் பின்வரும் பகுதியிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
“தனக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய செயல்களைக் கைவிடுவதற்குப் புலிகள் விரும்பவில்லை என்பதைக் கொழும்பில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் சாம் தம்பிமுத்துவும் கொலை செய்யப்பட்டமை பிரேமதாசவுக்குத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். எனினும் அவர் இவற்றை உட்பிரச்சினையாகவும் இந்திய சார்பாளர்கள் கொலை செய்யப்பட்டதாகவுமே பார்த்தார்.”
பிரேமதாச இக் கொலைகள் தொடர்பாகப் புலிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்காததற்குக் கொலை செய்யப்பட்டவர்கள் இந்தியாவுக்குச் சார்பானவர்கள் என்பதும் ஒரு காரணம் என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
பிரேமதாசவின் இந்திய எதிர்ப்பு ஒவ்வொரு கட்டத்திலும் புலிகளைப் பலப்படுத்துவதற்கே உதவியிருக்கின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment