கிளிநொச்சி விழுந்த செய்தி கேட்டு நெஞ்சில் இடி விழுந்தது போல இருந்தது
கிளிநொச்சி விழுந்த செய்தி கேட்டு நெஞ்சில் இடி விழுந்தது போல இருந்தது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். வைரமுத்துவின், என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள் என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை தாங்கி, புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து ஏற்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், இன்று கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி வருகிறது. நெஞ்சில் இடி விழுகிறது. ஒரு தமிழன், தமிழ் சகோதரி அங்கு அடிபடுகிற போது, எனக்கு குளிப்பதற்கோ, உண்பதற்கோ, சிரிப்பதற்கோ தோன்றவில்லை.
கிளிநொச்சி வீழலாம். 'கிலி' வீழலாம். ஆனால் புலிகள் வீழ மாட்டார்கள். அவனும் சேர்த்து தான் தமிழர். அவன் நம் இரத்தத்தின் நீட்சி. அவனை இழப்பதற்கு நாம் தயாராக முடியாது.
நாங்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்கிறோம். பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அங்கே போர்முனைக்கு செல்லுமாறு வேண்டிக் கொண்டோம். இன்னும் காலம் கடந்து விடவில்லை.
இலங்கையில் போர் நிறுத்தத்தை எவ்வளவு வலியுறுத்துகிறோமோ அதைப் போல இந்தியாவுக்கும்- பாகிஸ்தானுக்கும் போர் வந்துவிடக்கூடாது என்பதும் முக்கியம்.
பொருளாதார சீரழிவு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு போரை உலகம் தாங்காது. பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் ஒழிக்கப்படவேண்டும். போர் மூலம்தான் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றார் அவர்.
வீறு கொண்டு எழுவோம் - கனிமொழி
நிகழ்ச்சியில் கவிஞர் கனிமொழி பேசுகையில்,
தமிழர்கள் எப்போதுமே தங்களுடைய கடந்த கால பெருமைகளில் ஆழ்ந்து அதைப்பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர். கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி இன்று காதில் விழுந்தது. அங்கு ஒரு இனம் மெல்ல அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
ஆனால் அதனை மறந்து, அதனை தாண்டி ஏதேதோ தேடல்களில் நம்மை தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய சகோதரர்களும், சகோதரிகளும் அங்கு வாழும் வகையற்று அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்த பிள்ளைகளுக்கு எதிர்காலம் என்ன என்பதே தெரியாத நிலை உருவாகிவிட்டது.
எது நடக்காது என்று நம்பிக் கொண்டிருந்தோமோ? அது இன்று நடைபெற்று விட்டது. நாம் இன்னும் பழங்கதைகள் பேசிக் கொண்டிருப்பதில் பலனில்லை. இதற்காக இந்த படுகொலைகளை எதிர்த்து, இன அழிவை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
தயவு செய்து, வீறுகொண்டு எழுங்கள், நம்முடைய சகோதரர்களுக்காக, தொப்புள் கொடி உறவுகளுக்காக குரல் கொடுங்கள் என்றார் அவர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment