பரந்தனில் இருந்து ஆனையிறவை நோக்கி படையினர் முன்னகர்வு
பரந்தனில் இருந்து ஏ 9 வீதி வழியாக புறப்பட்ட படையினர் தற்போது ஆனையிறவு தெற்கு புறத்தில் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாகவும் கிளிநொச்சி கிழக்கு புறத்தில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நிகழ்ந்து வருவதாகவும் இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.
முன்னேறி செல்லும் படையினருக்கு உதவும் வகையில் விமானப் படையினர் ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் உள்ள புலிகளின் நிலைகள் மீது நான்கு முறை விமான தாக்குதல்களை நடத்தியதாக விமானப் படையின் ஊடக பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
கிளிநொச்சியின் கிழக்கு புறத்தில் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்த பிரிகேடியர் உதய நாணயக்கார ஆனையிறவை நோக்கிச் செல்லும் படையினருக்கு பாரிய எதிர்ப்புகள் இருக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில் முல்லைத்தீவை நோக்கி முன்னேறிச் செல்லும் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் தண்ணீரூற்று பகுதியில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முள்ளியவளையை கைப்பற்றும் நோக்கில் முன்னேற முயலும் படையினர் மீது புலிகள் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிய வருகிறது.
எறிகணை, பீரங்கி குண்டுத் தாக்குதல்களால் முல்லைத்தீவு மற்றும் அதனை அண்டிய கிராமங்கள் அதிர்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதால் கடந்த வியாழக்கிழமை முதல் முல்லைத்தீவுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக துண்டிக்கப்பட்டிருப்பதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.
Virakesari
0 விமர்சனங்கள்:
Post a Comment